பக்கம் எண் :

697.

     நாணம்ஒன் றில்லா நாயினேன் பிழையை
          நாடிநின் திருவுளத் தடைத்தே
     வீணன்என் றையோ கைவிடில் சிவனே
          வேறுநான் யாதுசெய் வேனே
     காணநின் றடியார்க் கருள்தரும் பொருளே
          கடிமதில் ஒற்றியூர்க் கரசே
     பூணயில் கரத்தோர் புத்தமு தெழுந்த
          புண்ணியப் புனிதவா ரிதியே.

உரை:

     காவற் கமைந்த மதில் சூழ்ந்த திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் அரசே, அடியார்கள் காணும்படியாகத் தோன்றி அருள் புரிகின்ற பரம்பொருளே, கூர்மை பூண்ட வேலைக் கரத்தில் கொண்ட புதிய அமுதமாகிய முருகப்பெருமான் தோன்றிய புண்ணியமாகிய புனிதக் கடலாகிய சிவபெருமானே, நாணமாகிய நற்பண்பில்லாத நாயின் தன்மையையுடைய எனது பிழையை எண்ணி நினது திருவுள்ளத்திற் கொண்டு, என்னை ஒரு வீணன் என இகழ்ந்து கைவிடுவாயாயின், சிவனே, வேறே நான் யாது செய்யக் கடவேன்? எ.று.

     காவலாய் அமைந்த மதில் என்றற்குக் கடிமதில் என்பது மரபு. அரசர் உறையும் கோயிற்குரிய கடிமதில் சிவனுறையும் ஒற்றிநகர்க் கமைந்தமையின், சிவனை, “ஒற்றியூர்க் கரசே” என்றும், திருத் தொண்டர் வாழ்க்கை வரலாறுகள் அனைத்தும் சிவன் விடைமேல் இவர்ந்து உமாதேவியுடன் காட்சி தந்தருளிய செய்தியையே கூறுதலால், “காண நின்றடியார்க்கருள் தரும் பொருளே” என்றும் கூறுகின்றார். புதிது தோற்றுவித்த முருகப் பெருமானைப் புத்தமுதென்று குறித்தலின், பிறந்த விடமாகிய சிவத்தைப் “புண்ணிய வாரிதியே” என்று புகழ்கின்றார். புண்ணியக் கடல் இயல்பிலே தூயதாமாதலின் “புனித வாரிதி” என்கின்றார். நாணம், தகாதன கண்ட வழியோ கேட்ட விடத்தோ மெய்யைத் தீண்டிய பொழுதோ மனத்தின் சுருக்கம்தோன்றி அருவருப்பை மெய்ப்படுத்தல். அது மகளிர்க்குளது போல நல்லாண் மகற்கும் உளதாம். “கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப்பிற” (1011) என்று திருக்குறள் கூறுவது காண்க. நாணின்மை பெருங் குற்றமாதலின், “நாணம் என்றில்லா நாயினேன் பிழையை” என்று எடுத்தோதி இதனையுட் கொண்டு என்னை வெறுத்தல் கூடாதென்றற்கு “நாடிநின் திருவுளத் தடைத்துக் கைவிடில்” என்று இசைக்கின்றார். நாணின்மைக்கு நாயைக் கூறுவது பொருத்தமாதல் ஆணும் பெண்ணுமாய் நாய் கூடும் கூட்டத்தால் தெளிவாம். மனத்தின் கண் குற்றம் எனக் கொண்டாலன்றி வெறுப்புணர்வும் செய்கையும் தோன்றாவாதலால், “நாடிநின் திருவுளத் தடைத்து” என்கின்றார். வெறுப்புணர்வு பயனிலி என்பதுணர்த்தலின், “வீணன் என்று” எனவும், கைவிடில் உண்டாகும் கேட்டின் மிகுதி மனத்தை நடுங்குவித்தலின் “ஐயோ” எனவும், அறிவு செயலறுதலின் “வேறு நான் யாது செய்வேன்” எனவும் இயம்புகின்றார்.

     இதன்கண், நாணுணர்வில்லாத பிழையைக் கூறிப் பொறுத்தருள்க என விண்ணப்பித்தவாறு.

     (5)