பக்கம் எண் :

699.

     நம்பினேன் நின்றன் திருவடி மலரை
          நாயினேன் பிழைதனைக் குறியேல்
     வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே
          வேறுநான் யாதுசெய் வேனே
     தும்பிமா முகனை வேலனை ஈன்ற
          தோன்றலே வச்சிரத் தூணே
     அம்பிகா பதியே அண்ணலே முக்கண்
          அத்தனே ஒற்றியூர் அமுதே.

உரை:

     ஆனை முகப் பெருமானையும் வேலை யேந்தும் முருகக் கடவுளையும் ஈன்றளித்த தலைவனே, வயிரத் தூணாயிருப்பவனே, அம்பிகாபதியே, அண்ணலே, முக்கண்களை யுடைய அத்தனே, திருவொற்றியூர் உறையும் அமுதம் போல்பவனே, நாயேனாகிய யானநின் திருவடித் தாமரையை நம்பி யுள்ளேன். முன்பெல்லாம் விரும்பாத பிழையை மனத்திற் குறிக்கொள்ளல் வேண்டா; அதனை நினைந்து யானே மனம் வெம்பி யுள்ளேன்; என்னைக் கைவிடில், சிவனே யான் வேறு யாதும் செய்ய வல்லேனல்லேன். எ.று.

     யானை முகமுடைமையின் “தும்பிமா முகன்” என்றும், ஞானசக்தி யாகிய வேலையுடைமையின் முருகனை “வேலன்” என்றும், இவ்விருவரையும் பெற்ற தந்தையென்பது பற்றி “ஈன்ற தோன்றல்” என்றும் இசைக்கின்றார். திருமழபாடியில் சிவனை வயிரத் தூண் என்று சான்றோர் புகழ்தலால் “வச்சிரத் தூணே” என வழங்குகின்றார். “மழபாடி வயிரத் தூணே” எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. அம்பிகை கணவனாதலால் பிற்காலச் சான்றோர் வடசொல்லால் “அம்பிகாபதி” என்றும், மூன்று கண்களையுடைய அப்பனாய் அருள் செய்வதை நினைந்து “அத்தனே” என்றும், திருவொற்றியூரிற் காணக்காண ஒரு வகை இன்பம் மீக்கூர்தலின் “ஒற்றியூர் அமுதே” என்றும் பரவுகின்றார். முன்பெல்லாம் இறைவன் திருவடி யுண்மை நினைந்து அதன்கண் அன்பு செய்யாத பிழையை நினைந்து வருந்துகின்றவர், இப்போது திருவடிக் கன்பரானதை எடுத்தோதி “நாயினேன் நின்றன் திருவடி மலரை நம்பினேன்” எனக் கூறுகின்றார். நம்பினே னென்றது நம்பா தொழிந்த பிழையை உணர்விக்கின்றது. திருமுன் நிற்கும்போது நெஞ்சின்கண் பிழை தோன்றி வருத்துவது பற்றி “பிழை தனைக் குறியேல் வெம்பினேன் ஐயா” என வுரைக்கின்றார். சிவன் கைவிடில் மக்களுயிர்க்கு உய்தி கிடையாமையால் “கைவிடிற் சிவனே வேறு நான் யாது செய்வேனே” எனக் கூறுகின்றார்.

     இதன்கண், முன்பெல்லாம் இறைவன் திருவடி மலரை நினையா தொழிந்த பிழையைப் பொறுத்து அருள் என விண்ணப்பித்தவாறு.

     (7)