702. கட்டினேன் பாபக் கொடுஞ்சுமை எடுப்பேன்
கடும்பிழை கருதிடேல் நின்னை
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே
வேறுநான் யாதுசெய் வேனே
சுட்டிலாப் பொருளே சுகப்பெருங் கடலே
தூய்த்திரு ஒற்றியூர்த் துணையே
தட்டிலாக் குணத்தோர் புகழ்செய்யும் குகனைத்
தந்தருள் தருந்தயா நிதியே.
உரை: தூய திருவொற்றியூரில் உயிர்கட்குத் துணையாய் எழுந்தருளும் பெருமானே, சுட்டியறியப் படாத பரம்பொருளே, சுகமாகிய பெருங்கடலே, மாறாது வழங்கும் குணமுடையோர் புகழும் குகனாகிய முருகப் பெருமானை உலகிற்குத் தந்து பேரருள் வழங்குகின்ற தயாநிதியே, எண்ணிறந்த பாவமாகிய சுமையைக் கட்டிச் சுமப்பேனாகிய எனது கடும் பிழையை மனத்தில் கொள்ளல் வேண்டா; யான் நின்னை விடுகிலேன்; ஐயோ, என்னைக் கைவிடாதே; சிவனே, என்னைக் கைவிடுவாயேல் வேறே யான் யாது செய்வேன்; ஆதரித்தருள்க. எ.று.
நாளும் பலவாய்த் திரண்டமையோடு செய்வதனை விடாது அவன் தலைமேற் சுமையாய் நின்று பிறப்புத்தோறும் விடாது பிணித்துக்கொடு கிடத்தலின், “கட்டினேன் பாவக் கொடுஞ்சுமை எடுப்பேன்” என்றும், இஃது எனது பிழை; இதனைப் பொருளாக நீ எண்ணலாகாது என்பார், “கடும்பிழை கருதிடேல்” என்றும், இச்சுமையோடு உன் திருவடியை விடாமல் பற்றிக் கிடக்கின்றேன் என்பாராய், “நின்னை விட்டிலேன்” என்றும், நீ கைவிடின் எனக்கு உய்தி வேறில்லை என்றற்கு, “வேறு நான் யாது செய்வேன்” என்றும் இயம்புகின்றார். இன்ன தன்மைத்து இன்ன அளவு இயல்புகளை யுடையதென வரையறைப்படுத்து உணரலாகாமையின், “சுட்டிலாப் பொருள்” என்றும், எல்லையற்ற இன்பமல்லது துன்பமேயில்லாதது என்றற்குச் “சுகப்பெருங்கடலே” என்றும், மக்கள் முதலாய உயிர்கட்குத் துணை செய்தற் பொருட்டுக் கோயில் கொண்டமை பற்றி, “ஒற்றியூர்த் துணையே” என்றும் கூறுகின்றார். வேண்டுவார்க்கு வேண்டுவ மாறாது உதவும் நட்பண்புடையோரைத் “தட்டிலாக் குணத்தோர்” என்றும், அவர்களாற் புகழப்படும் சிறப்புடையனாய் நினைவார் மனக்குகையில் தங்குதலால் குகன் என்ற பெயருடையனாய் முருகப் பெருமானை ஈன்றளித்தமையை விதந்து, “தட்டிலாக் குணத்தோர் புகழ் செயும் குகனைத் தந்தருள் தயாநிதியே” என்றும் போற்றுகின்றார். தயாநிதி - தயவாகிய செல்வம்.
இதன்கண், பாவச் சுமையைக் கட்டிப் பிறவிதோறும் சுமந்துவரும் பிழையைப் பொறுத்து ஆதரவு செய்க என விண்ணப்பித்தவாறு. (10)
|