பக்கம் எண் :

709.

     உறவனே உன்னை உள்கிநெஞ் சழலின்
          உறும்இழு தெனக்கசிந் துருகா
     மறவனேன் தன்னை ஆட்கொளா விடில்யான்
          வருந்துவ தன்றிஎன் செய்கேன்
     நிறவனே வெள்ளை நீறணி பவனே
          நெற்றிமேல் கண்ணுடை யவனே
     அறவனே தில்லை அம்பலத் தாடும்
          அப்பனே ஒற்றியூர்க் கரைசே.

உரை:

     சிவந்த நிறமுடைய சிவனே, வெண்மையான திருநீறணிபவனே, நெற்றியில் ஒரு கண்ணை யுடையவனே, அறமே உருவாக அமைந்தவனே, தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல் புரியும் அப்பனே,திருவொற்றியூரில் உள்ள அருளரசே, எனக்கு நெருங்கிய உறவானவனே, உன்னை நினைந்து நெஞ்சம் நெருப்பிலிட்ட மெழுகென்னுமாறு கசிந்து உருகுதல் இல்லாத மறப்பண்புடைய என்னை நீ ஆட்கொள்ளாவிடில் யான் வருந்துவதன்றி வேறே யாது செய்ய வல்லேன்? எ.று.

     நிறவன் எனப் பொதுப்படக் கூறினமையின் சிவந்த நிறம் கொள்ளப்பட்டது. சிவனைச் “செம்மேனி யம்மான்” என்றே சான்றோர் போற்றுவதுண்டு. பால் போல் வெண்ணிறத் திருநீறே சிவபிரான் அணிவது பற்றி, “வெள்ளை நீறணிபவனே” என்கின்றார். மணிவாசகரும், “பால்கொள் வெண்ணீற்றாய்” (அருட்) என்று உரைப்பது காண்க. மேல் நெற்றிக் கண்ணுடையவன் என இயைத்து, மேலே நெற்றியிற் கண்ணுடையவன் என்று உரைக்க. அறமே யுருவாயவனாதல் பற்றி, “அறவன்” எனப் புகழ்கின்றார். “அறவாழியந்தணன்” (குறள்) என்பதும் இக்கருத்தே விளங்க நிற்றல் காண்க. அம்பலக் கூத்தனாய் அறிவருளும் முதல்வனாதலின் “அம்பலத்தாடும் அப்பனே” என்று பரவுகின்றார். உறவன் - பிறப்போடு நெருங்கிய தொடர்புடையவன்; தாய் தந்தை, அண்ணன் தம்பி, மாமன் மாமி, மனைவி என்பனபோலும் தொடர்புடையாரை உறவென்பர்; இறைவனாகிய சிவன் இவ்வுறவனைத்தும் நம்மாட்டுடைமை பற்றி “உறவன்” என உரைக்கின்றார். இறைவனை நினைந்த வழி நெஞ்சம் அன்பால் அனலிற்பட்ட மெழுகாய் உருக வேண்டுவது கடன்; தம் நெஞ்சம் அங்ஙனம் உருகுதலின்றிக் கல்போலும் வன்மையும் மறப்பண்பும் உற்றதற்கு வருந்துகின்றமை புலப்பட, “உன்னையுள்கி நெஞ்சு அழலின் உறும் இழுதெனக் கசிந்து உருகா மறவனேன்” என்று தன்னையே வெறுத்துரைக்கின்றார். நெஞ்சுருகாமைக்குக் காரணம் தமது மறப்பண்பன்றி இறைவன் அன்மையின், அது குறித்து மனம் வருந்தித் தெளிவதல்லது செய்வது பிறிதின்மையின், “ஆட்கொள்ளாவிடில் வருந்துவதன்றி என் செய்கேன்” என வுரைக்கின்றார். எல்லாம் வல்ல இறைவனை வெகுள்வது அறிவுடைமை யாகாது; அவனை நினையாத பிழைக்கு வருந்துவதன்றிச் செய்வதில்லை எனத் தெளிந்தமை இதனால் நன்கு புலனாகும். “அருளமுதம் புரியாயேல் வருந்துவன் நற்றமியேன் மற்றென்னே நான் ஆமாறே” (சதக. 13) என்று மணிவாசகர் உரைப்பது காண்க.

     இதன்கண், இறைவனது அளப்பரும் பெருமை நினைந்து, அவனது அருள் பெற மாட்டாமைக்கு வருந்துவதல்லது வேறு செயலின்மை தெரிவித்தவாறு.

     (7)