4. எண்ணப்பத்து
இது
திருவாசகத்திலுள்ள எண்ணப் பதிகத்தை நினைப்பிக்கிறது.
தணிகை முருகப் பெருமானை நினைக்கும் உள்ளத்தில் எழும்
எண்ணங்களை இதன்கண் தொகுத்து உரைக்கின்றார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம்
72. அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு
வடிகளை யன்போடும்
பணிகிலே னகமுருகி நின் றாடிலேன்
பாடிலேன் மனமாயை
தணிகிலேன் றிருத் தணிகையை நினைகிலேன்
சாமிநின் வழி போகத்
துணிகிலே னிருந்தென் செய்தேன் பாவியேன்
துன்பமும் எஞ்சேனே.
உரை: அழகிய வேற்படையைக் கையில் ஏந்துகிற பெருமானே, உன்னுடைய திருவடிகளை அன்புடன் நினைந்து வணங்குகிறேனில்லை; மனம் கரைந்து உருகத் திருமுன் நின்று ஆடுகின்றேனில்லை; வாயாற் பாடுவதும் செய்வதில்லை; மனமயக்கம் செய்யும் வெம்மையும் தணிகிறேனில்லை; நீ எழுந்தருளும் திருத்தணிகைப் பதியை நினைப்பதில்லை; சாமியாகிய நினக்குரிய நெறியில் ஒழுக நெஞ்சம் துணிகின்றேனில்லை; இவ்வாறு இருந்தும் பயனுடைய தொன்றும் செய்யாமல் பாவியாகிய யான் துன்பம் சிறிதும் குறைந்திலேன் காண், எ. று.
மண்மேல் வாழும் ஒவ்வொருவர் எண்ணமும் துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத்தையும் நாடி நிற்பனவாகும்; இன்ப நாட்டமுற்று உன் திருவடிக்கண் அன்பு செய்து வணங்கி வழிபடுவது முதற்கண் செயற்குரிய தாயினும் அதனை யான் செய்யவில்லை என்பார், “நின் திருவடிகளை அன்போடும் பணிகிலேன்” என்று கூறுகின்றார். அண்ணல் - தலைவன். மெய்யாற் செய்ய வேண்டிய இதனை விடுப்பினும் மனத்தின்கண் நின் திருவடிகளை நினைந்து உருகலாம்; அதனையும் செய்திலேன் என்பார், “அகம் உருகி நின்று ஆடிலேன்” என்கின்றார். உள்ளீடாகிய மனம் உருகுமிடத்து உடல் நிலை குன்றி அசைந்தாடுதலால், “உருகி நின்று ஆடிலேன்” என்று இசைக்கின்றார். மனம் குழைந்து ஆடாவிடினும் நின்றும் இருந்தும் கிடந்தும் பாடலாம்; அதுவும் இல்லை என்பதற்குப் “பாடிலேன்” என்று பகர்கின்றார். சத்துவ முதலிய குணங்களின் சுயற்சியால் முறையே சுகதுக்க மோகங்களில் தோய்ந்து மாயையிற் சிக்கிய மனம் வெம்மையுறுவதியல்பாதலால் அது தீராமை நோக்கி, “மனமாயை தணிகிலேன்” என்று உரைக்கின்றார். தணிதல், ஈண்டுச் சாந்த நிலை எய்துதல் மேற்று. மனம் அமைதி எய்தாமையால் திருத்தணிகையையும் அதன் கண் எழுந்தருளும் நின்னையும் நினைக்கின்றேனில்லை என்பார், “திருத் தணிகையை நினைகிலேன்” என மொழிகின்றார். சாமி, முருகனுக்குரிய பெயர்களில் ஒன்று, “சாமி தாதை” (புகலூர்) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. முருகனை யடைதற் கமைந்த நெறி, “கௌமார மார்க்கம்” என்பது; அந்நெறி பற்றும் வழிமுறை அறியேன் என்பார் “சாமி நின் வழி போகத் துணிகிலேன்” என்றும், நின்னுடைய நினைவின்றி வெறிதே இருந்து பாவம் பல செய்தேன் என்பாராய், “இருந்து என் செய்தேன் பாவியேன்” என்றும் சொல்லி வருந்துகிறார். என் செய்கைகள் இன்பம் தாரா தொழியினும் துன்பத்தை யேனும் குறைத்தனவோ என நோக்கின் அது தானும் இல்லை என்பார், “துன்பமும் எஞ்சேனே” என இயம்புகிறார். எஞ்சுதல் - குன்றி இல்லையாதல்.
இதனால், முருகப் பெருமானை நினைத்தலும் வழிபடலும் பாடலும் மனம் மயக்கம் தீர்தலும் பிறவும் இன்றிப் பாவம் செய்து துன்ப முறுவேனாயினேன் என்று வருந்தியவாறாம். (1)
|