பக்கம் எண் :

16. எழுத்தறியும் பெருமான் மாலை

திருவொற்றியூர்

    எழுத்தறியும் பெருமான் என்ற பெயர் திருவொற்றியூர்த் தியாகப் பெருமானுக்குத் தொன்றுதொட்டு வரும் பெயர். வடமொழியில் வியாகரணதானப் பெருமாள் என்பர்; சோழ பாண்டிய வேந்தரது ஆட்சி நிலவியபோது இப் பெயர் வியாகரணதானப் பெருமாள் என்று நிலவிற்று. இத் திருக்கோயிற் கல்வெட்டுக்கள் (120/1912) இதனை எடுத்துக் கூறுகின்றன. கல்வி பயில்வார்க்கு எழுத்திலக்கணம் கற்பிக்க வொரு மண்டபம் கட்டி, அதற்கு வியாகரணதான மண்டபம் என்று பெயரிட்டு, அங்கு எழுந்தருள்வித்த சிவமூர்த்தத்துக்கு வியாகரணதானப் பெருமாள் (110/1912) என்று பெயர் தந்து பேணிய பெருமை இத் திருவொற்றியூர்க் கோயிலுக்குண்டு. பிற்காலத்தே இத் திருக்கோயிலாட்சிக் குழுவில் இடம்பெற்ற கோயிற் பெருச்சாளிகள் வேறு கதையே புனைந்து தலபுராணச் செய்தியாக்கிவிட்டனர். மாந்தாதா என்ற மன்னன் ஆங்காங்குள்ள கோயிற்கமைந்த கட்டளைகளைக் குறைத்தெழுதப் பணித்த ஓலையில், “திருவொற்றியூர் நீங்கலாக” என்றொரு வரியை அவ்வெழுத்திடையே இடமறிந்து புகுத்தினார் ஒற்றியூர்த் தியாகர்; அதனால் அவர்க்கு எழுத்தறியும் பெருமாள் என்ற பெயர் வந்தது எனத் தலபுராணிகர் கூறுகின்றார்கள். கல்வெட்டைக் கண்டவர் வியாகரணதானப் பெருமாள் என்று பெயர் காணப்படுகிறதே என்று கேட்ப, எழுத்தென்பது வடமொழியில் வியாகரணத்தைக் குறிக்கும்; சிவபெருமான் ஆடும்போது அவர் கையகத்து உடுக்கையில் டுக், ரிங், ரிணே என்று மூன்று ஓசைகள் பிறந்தன; அவற்றைக் கொண்டு தான் பாணினி வியாகரணம் எழுதினார் என்று சொல்லியுள்ளனர். வள்ளலார் காலத்தில் தலபுராணச் செய்தியே நிலவினமையால், அதற்குரிய எழுத்தறியும் பெருமாள் என்ற பெயரே கொண்டு இச் சொல்மாலையைப் பாடியுள்ளனர். இதன்கண் பாட்டுத்தோறும் தாம் எய்தி வருந்தும் துன்பத்தை எளிய இனிய பாட்டுக்களால் நெஞ்சுருகக் கண்ணீர் துளிக்கப் பாடியுள்ளார். பாடற் பொருட்கேற்ப யாப்பும் இசையும் இனிது கலக்கும் கொச்சகக் கலிப்பா அமைந்துள்ளது.

கொச்சகக் கலிப்பா

723.

     சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
     முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
     நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
     எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

உரை:

     திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் எழுத்தறியும் பெருமானே, மனம் கலக்கமுற்று தெளிவிழந்துள்ள நாயினேனை வருத்துகின்ற பழவினையைப் போக்கி உன் வீர கண்டையணிந்த திருவடிக்குத் தொண்டனாக்காமல் கண்டார் இகழும் நோய் வகை போந்து வருத்த எந்தையாகிய நீ என்னை விடுதல் நீதியாகுமா? எ.று.

     தன் திருக்கோயில் மண்டபத்தில் பலராயக் கூடி மாணவர்கள் எழுத்திலக்கணம் கற்க வுதவும் பெருமானாதலின் திருவொற்றியூர்த் தியாகருக்கு எழுத்தறியும் பெருமான் என்பது பெயராம். அறிவிக்கும் என்பது அறியும் என வந்தது, “செயப்படு பொருளைச் செய்ததுபோலக் கிளக்கும்” வகை. மனம் குணவகையாற் கலக்குண்டு மயங்குமிடத்துத் தெளிவிழந்து அசைவது பற்றி, “சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேன்” எனத் தெரிவிக்கின்றார். தேன் கலந்த பாலைத் தேன் மயங்கு பால் என்ப; அதுபோலத் தாமதக்கூறும் இராசதக்கூறும் கலந்த மன மயக்கத்தைச் “சிந்தை மயங்கி” என்றும், சிந்தனை மயங்கிய வழிக் கருவிகள் அசைவு கோடலின், “தியங்குகின்ற” என்றும், கீழ்மை யுறுதலின் “நாயேனை” யென்றும் இசைக்கின்றார். முந்தை வினை - முற்காலத்தே செய்யப்பட்டுப் பயன் நுகரப் படாதிருக்கும் வினை. நுகர்ந்து கழித்தாலன்றி அது தொலையாது; ஆயினும், வினைப்பயனை அதனைச் செய்தவனே நுகரக் கூட்டுவிக்கும் பெருமானாதலின், அவன் விரும்பினால் வினைப்பயனைச் சாரவிடாது கெடுக்கலாமாகலின் “முந்தை வினை தொலைத்து” என்றும், அதற்கு வாயில் திருவடிக்காட் செய்தலாதலின் “மொய் கழற்கால் ஆக்காதே” என்றும் இயம்புகின்றார். இறைவன் திருவடிக் காளாயவழி வினை சாராதென்றற்கு “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு” எனத் திருவள்ளுவர் தெரிவித்தருளுதல் அறிக. கழல் கூறியது, கழலா வினைகளைக் கழற்றும் குறிப்புணர்த்தற்கு. இல்லையாயின், வினையே எல்லாம் வல்ல பரமாம் தன்மையுற்று நிரீசுவரக் கொள்கை நிலை பெறுவிக்கும் என்று கொள்க. கண்டார் இகழ்விக்கும் நோய் வகையை, “நிந்தையுறும் நோய்” என்றும், அதனையுடற்கண் நிலவுவித்தலை “நிகழ வைத்தல்” என்றும், அடிப்பணி செய்வான் ஆளாவாரைத் தடுத் தொறுக்கும் வினையைப் போக்கி ஆட்கொள்வது முறைமையாக அது செய்யாதொழிதல் கூடாதென்றற்கு “நீதியதோ” என்றும் முறையிடுகின்றார்.

     இதன்கண், எழுத்தறியும் பெருமானை வினை நீக்கிக் கழற்கு ஆளாக்கு மாறு வேண்டுகிறார்.

     (1)