பக்கம் எண் :

725.

     நன்னெறிசேர் அன்பர்தமை நாடிடவும் நின்புகழின்
     சென்னெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு
     முன்அறியேன் பின்அறியேன் மூடனேன் கைம்மாறிங்
     கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.

உரை:

     ஐயா, எழுத்தறியும் பெருமானே, நன்னெறிக்கண் ஒழுகும் மெய்யன்பர்களை நாடியிருக்கவும் நினது மெய்ம்மை சேர்ந்த புகழ்க்குரிய செயல்கள் செல்லும் நெறியை யானும் சேர்ந்தொழுகவும் எனக்கு அருள் செய்துள்ளாய்; உனக்குரிய நெறிகளை முன்னோ பின்னோ ஒன்றும் அறியேன்; மூடனாதலால்; நீ செய்தருளிய திருவருட்கு யான் இங்கு என்ன கைம்மாறு செய்வேன்; உரைத்தருள்க. எ.று.

     அறநூல் உரைப்பதும் சைவநூல் உரைப்பதுமாகிய நன்னெறிகளை யறிந்து கடைப்பிடித்தொழுகும் மெய்யன்பர்களை, “நன்னெறி சேர் அன்பர்” என்றும், அவரை நாடுதலால் நெறியின்கண் வழுவாமை யுண்டாம் என்பது பற்றி “நாடிடவும்” என்றும் கூறுகின்றார். இறைவனது மெய்ம்மையான புகழ் என்றும் எங்கும் ஒரு தன்மைத்தாதலால், அதற்குச் செல்லும் நெறியாவது புகழ்க்குரிய திருவருட் செயல்களின் இயக்க மாதலின், அதனைச் சேர்வது கூறுவார் “நின் புகழின் சென்னெறியைச் சேர்ந்திடவும்” என்றும், சேர்ந்ததும் திருவருளால் என்று நினைத்தலின் “சேர்ந்திடவும் செய்தாய்” என்றும் இயம்புகின்றார். மூடனாதலின் எனக்கு அறிவதறியும் அறிவு தோன்றுதற்கு முன்னோ பின்னோ அறியேனாயினேன் என்பார், “முன்னறியேன் பின்னறியேன் மூடனேன்” என்றும், இறைவன் அருளிய நலத்துக்குக் கைம்மாறு ஒன்றும் செய்ய வியலாமை நினைந்து “கைம்மாறு இங்கு என் அறிவேன்” என்றும் உரைக்கின்றார்.

     இதன்கண், மெய்யன்பர் சென்னெறி செல்வித் தருளிய நலத்திற்குக் கைம்மாறறியேன் என்று குறித்தவாறு.

     (3)