727. நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.
உரை: எழுத்தறியும் பெருமானே, நில்லாமல் இறந்துபடும் இவ் வுடம்பை நிலையானது என்று அதன்பால் பற்றுக்கொள்ளும் பொல்லாத நெஞ்சினையுடைய புலைத்தன்மையேனாகிய யான் இவ்வுலகில் வாயில் சொல்ல வியலாத மனநோய் மிகுந்து சோர்வடைந்து அலையும் வருத்தம் எல்லாவற்றையும் நீ அறிவா யன்றோ? எ.று.
பிள்ளைமை, இளமை, முதுமையாகிய காலங்களில் எக்காலத்திலும் இறத்தல் உண்மையாதலின் “நில்லாவுடம்பு” என்றும், அதனை நிலையானதென நினைத்தலும் அதன்பாற் பரிவு கொள்வதும் தீநெறிக்கண் செலுத்தும் நெஞ்சின் இயல்பு என்றற்கு “நிலையென்றே நேசிக்கும் பொல்லாத நெஞ்சம்” என்றும், பொல்லாததை விரும்புவது புலைத் தன்மை யாதலால், “பொல்லாத நெஞ்சப் புலையனேன்” என்றும் புகல்கின்றார். கண் முதலிய பொறிகளாற் கண்டுணரும் நோய் போலாமல் மனத்தால் உணரப்படுமளவாய்ப் பிறர்க்குச் சொல்ல வாராத காம நோய் முதலியவற்றைச் “சொல்லா மனநோய்” எனவும், அதனால் உடலிற் சோர்வும் உள்ளத்தில் அலைச்சலும் தோன்றிப் பலவகையில் வருத்துமாறு விளங்க “மனநோயாற் சோர்வுற் றலையும் அல்ல லெல்லாம்” எனவும், அவற்றை இறைவன் இனிதறியும் இயல்பு விளங்க “எல்லாம் அறிவாய்” எனவும் எடுத்துரைக்கின்றார்.
இதன்கண், வாயால் உரைக்கலாகாது உள்ளத்தே கிடந்து வருத்தும் நோயினை எடுத்துரைப்பது காணலாம். (5)
|