பக்கம் எண் :

73.

    சேல் பிடித்தவன் தந்தை யாதியர் தொழும்
        தெய்வமே சிவப்பேறே
    மால் பிடித்தவர் அறியொணாத் தணிகைமா
        மலை யமர்ந்திடு வாழ்வே
    வேல் பிடித்தருள் வள்ளலே யான் சதுர்
        வேதமும் காணா நின்
    கால் பிடிக்கவும் கருணைநீ செய்யவும்
        கண்டுகண் களிப்பேனோ

உரை:

     மயக்க வுணர்வுடையவர் அறிய வியலாத தணிகை மலையில் எழுந்தருளும் பெருமானே, மீன் எழுதிய கொடியை யுடைய காமனுக்குத் தந்தையாகிய திருமால் முதலிய தேவர்கள் தொழுது பரவும் தெய்வமே, சிவபெருமான் பெற்ற செல்வமே, வேற்படை யேந்தும் வள்ளலே, வேதங்கள் நான்கும் கண்டறியாத நின்னுடைய திருவடியை யான் சேரவும், எனக்கு நீ அருள் புரியவும் நேரிற் கண்ணாற் கண்டு மகிழ்வேனோ, கூறுக, எ. று.

     ஐயம் திரிபுகளாகிய மயக்க வுணர்வுடையவர் யாவராயினும் மெய்ஞ்ஞான மூர்த்தமான முருகப் பெருமானைக் காண்பது அரிதாதலால், “மால் பிடித்தவர் அறியொணா” என்றும், தணிகை மலையில் எழுந்தருளித் தன்னைக் கண்டு பணிவார்க்கு இன்ப வாழ்வு நல்கியருளுவது பற்றி, “தணிகை மாமலை அமர்ந்திடு வாழ்வே” என்றும் இயம்புகின்றார். வாழ்வளிப்பவனை வாழ்வே என்பது உபசார வழக்கு. சேல், மீன் வகையுள் ஒன்றின் பெயர்; ஈண்டுப் பொதுவாய் மீனினத்தைக் குறிக்கிறது. மீன் எழுதிய கொடியையுடைய னாதலால் காம தேவனை, “சேல் பிடித்தவன்” என்று சிறப்பிக்கின்றார். “மீனேறு உயர்த்த கொடி வேந்தன்” என்பர் சீவக சிந்தாமணி ஆசிரியர். காமனுக்குத் தந்தை திருமால். தேவ தேவர்கள் வணங்கித் தொழப்படுவது பற்றித் “தெய்வமே” என்றும், சிவபிரானுக்குச் செல்வ மகனாய்ப் பிரணவ ஞானம் பெற வழங்கிய அருமை தோன்றச் “சிவப்பேறே” என்றும் கூறுகின்றார். வேலேந்தும் மறவனாயினும் அறம் திரியா வள்ளன்மையுடைய னென்பது தோன்ற, “வேல் பிடித்தருள் வள்ளலே” என்று சிறப்பிக்கின்றார். வேத ஞானமுடைய பிரமன் முருகன் பெருமை யறியாது குட்டுப்பட்டுச் சிறையும் பட்டானாதலின், “சதுர் வேதமும் காணா நின் கால்” என்று கூறி அதனைத் தாம் சேர்ந்து முருகக் கடவுளின் அருட்செல்வம் பெற விழைகின்றமை புலப்பட, “நின் கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ” எனவுரைக்கின்றார்.

     இதனால், முருகன் திருவடிப் பேற்றிலும் திருவருட் பேற்றிலும் தமக்குள்ள ஆர்வம் விளம்பியவாறாம்.

     (2)