பக்கம் எண் :

751.

     பித்தனைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
     வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம்
     கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
     இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.

உரை:

     எழுத்தறியும் பெருமானே, பித்து வகை யனைத்துக்கும், காமமாகிய பெரிய பேய் மயக்குக்கும், மையலுக்கு வித்து வகை யனைத்துக்குமாகும் ஆணவம், பொய் மிகும் அழுக்காறு, சினம் ஆகிய குற்றக் கூட்டங்கட்கும், வஞ்சம் கொலை முதலிய பாவங்கள் இத்தனைக்கும் இருப்பிடம் நானாக வுள்ளேன். எ.று.

     பித்து அனைத்துக்கும் என்பது சாரியை பெறாது பித்தனைக்கும் என வந்தது. மண்பித்து, பொன் பித்து, பெண் பித்து எனப் பலவகை யுண்மையின், “பித்தனைக்கும்” என்கின்றார். காம மயக்கம் அறிவு செயல்களை வேறுபடுத்தி மயக்குதலால் “காமப் பெரும் பேய் மயக்கு” என்று பிரித்துக் கூறுகின்றார். அறிவை மயக்கும் மயலுக்குக் காரணங்களை “மயல்வித்து அனைத்தும்” என்றும், பொய்ம்மை மிகுவிக்கும் அழுக்காற்றைப் “பொய் வீறும் அழுக்காறு“ என்றும் கூறுகின்றார். பொய் வீறும் என்றற்குப் பொய்யினும் மிக்கதாகிய அழுக்காறு எனினும் அமையும். இவற்றை ஒருசேரக் கோடற்குக் “கொத்து” என்று குறிக்கின்றார். இக்கூறிய குற்றவகை பலவும் தன்பால் உள்ளமை தோன்ற “பாவங்கள் இத்தனைக்கும் நான்காண்” என இயம்புகின்றார்.

     இதன்கண், பாவங்கள் பலவற்றுக்கும் உறைவிடம் தான் என உரைத்தவாறு.

     (29)