பக்கம் எண் :

756.

     நம்பு நெஞ்சமே நன்மை எய்துமால்
     அம்பு யன்புகழ் அண்ணல் ஒற்றியூர்ப்
     பம்பு சீர்ப்படம் பக்கன் ஒன்னலார்
     தம்பு ரஞ்சுடும் தம்பி ரானையே.

உரை:

     தாமரை மலர் மேல் உள்ள பிரமன் புகழ்கின்ற பெருமை பொருந்திய திருவொற்றியூரில் எழுந்தருளும் நிறைந்த சிறப்புடைய படம்பக்க நாதனாகிய பகைவரது மதில்களை யழித்த தம்பிரானையே, நெஞ்சமே, நீ விரும்புக; நன்மை யாவையும் எய்துவாய். எ.று.

     அம்புயம் - தாமரை; தாமரை மலர்மேல் வீற்றிருத்தலால் பிரமன் அம்புயன் எனப்படுகின்றான். படம்பக்கன் என்பது சிவன் பெயராதலின், திரிபுரம் எரித்த செயலையும் அவன் மேலேற்றி “ஒன்னலார் புரம் சாடும் தம்பிரான்” என்று புகழ்கின்றார். சிவனை நம்பினோர் எல்லாச் சிறப்புக்களையும் அடைந்தாராய் இன்புறுதல் உலகறிந்த செய்தியாதலால், “நம்பு நெஞ்சமே நன்மை எய்துவாய்” என்று நவில்கின்றார்.

     இதன்கண், பகைவர் புரம் அழித்த படம்பக்க நாதனாகிய சிவனை நம்பினால் நன்மை யாவும் எய்தும் என்பதாம்.

     (3)