பக்கம் எண் :

760.

     இல்லை உண்டென எய்தி ஐயுறும்
     கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
     ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
     நல்லை நல்லைநீ நட்பின் மேலையே.

உரை:

     பொருள்களைப் பற்றி இல்லையெனவும் உண்டெனவும் உணர்வுகளால் ஐயமெய்தி அலையும் கற்போன்ற என் கன்ம வேதுவாகிய மனமே, திருவொற்றியூரை விரைந்தடைந்து வழிபட்டு வாழ்வாயாயின், நீ சிவனது அன்பின் மேலவனாய் நல்லையாய் வாழ்வாய். எ.று.

     எப்பொருளைக் கேட்பினும் உண்டோ இல்லையோ என்ற ஐயவுணர்வு கொண்டு உண்மைத் தெளிவு எய்துங்காறும் அலைவது மனத்துக்கு இயல்பாதலின் “இல்லை யுண்டென எய்தி ஐயுறும் நெஞ்சமே” என்றும், இரங்காத தன்மை நோக்கி “கல்லை யொத்த நெஞ்சமே” என்றும், செய்யப்படும் வினைகள் அனைத்துக்கும் முதலாதல் பற்றிக் “கன்ம நெஞ்சமே” என்றும் கூறுகின்றார். தாழ்த்தவிடத்து மனப்பான்மை வேறு படுதலால் திருவொற்றியூரை விரைந்தடைந்து வாழ்க என்பார், “ஒற்றியூர் ஒல்லையுற்று வாழ்தியேல்” எனவும், அவ்வாழ்வு சிவன்பால் உண்மையன்பு தோற்றுவித்து நல்லன பலவும் பெறுவித்தலின் “நல்லை நல்லை நீ நட்பின் மேலையே” எனவும் உரைக்கின்றார்.

     இதன்கண், திருவொற்றியூர் உற்றுச் சிவனை வழிபட்டு வாழ்ந்தால் சிவனுக்கு அன்பனாய் நலம் பலவும் பெறற்குரியனாகலாம் என்பதாம்.

     (7)