763. போற்றி ஒற்றியூர்ப் புண்ணி யன்திரு
நீற்றி னான்தனை நினைந்து நிற்பையேல்
தோற்ற ரும்பரஞ் சோதி நல்அருள்
ஊற்றெ ழும்கடல் ஒக்க நெஞ்சமே.
உரை: நெஞ்சமே, திருவொற்றியூரிற் கோயில் கொண்டுள்ள புண்ணிய மூர்த்தியாகிய திருநீறணிந்த சிவபெருமானை நெஞ்சார நினைந்து வாயாற் போற்றி நிற்பாயாயின், பிறர் காணத் தோன்றுதலில்லாத பரஞ்சோதியாகிய அப்பெருமானது நல்லருள் கடல்போல ஊறிப் பெருகும். எ.று.
புண்ணியமே உருவாயவன் என்றற்குப் “புண்ணியன்” என்பர். மேனி முற்றும் வெண்ணீறு சண்ணித்தமை பற்றித் “திருநீற்றினான்” என்று கூறுகின்றார். போற்றி நிற்கும் நற்பணியைச் செய்யாது ஒதுங்குமாறு தோன்ற நெஞ்சை நோக்கி, “நெஞ்சமே திருநீற்றினான் தனை நினைந்து போற்றி நிற்பையேல்” என்றும், நின்றவழிச் சிவனது நல்லருள் கடல்போற் பெருகி இன்பம் செய்யும் என்பது புலப்பட, “நல்லருள் கடல் ஒக்க ஊற்றெழும்” என்றும் இசைக்கின்றார். புண்ணியப் பயனாகிய சிவஞானக் காட்சியுடையார்க் கல்லது தோன்றாத அருட் பெருஞ்சோதியை “தோற்றரும் பரஞ்சோதி” என்று சொல்லுகின்றார்.
இதன்கண் ஒற்றியூர் இறைவனை நினைந்து போற்றி நிற்பவர்க்கு நல்லருள் ஊற்றெழுந்து கடல்போலப் பெருகும் என அறிவுறுத்தவாறு. (10)
|