பக்கம் எண் :

18. திருப்புகழ் விலாசம்

திருவொற்றியூர்

    திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் தியாகேசப் பெருமான் புகழை விளக்கும் வீரச் செயல்களும் அருட்செயல்களும் எண்சீர்க்கழி நெடிலடி விருத்தத்தாலாகிய ஒவ்வொரு பாட்டினும் இப்பத்தின்கண் ஓதப்படுகின்றன. இத்திருப் புகழ்க்குரிய சிவபெருமானது திருவிலாசத் திருவொற்றியூர் என்பது ஒவ்வொரு விருத்தத்தின் இறுதியில் மகுடமாகச் சூட்டப்பட்டிருக்கிறது. அதனால் இப் பத்துக்குத் திருப்புகழ் விலாசம் எனப் பெயர் குறித்துள்ளார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

764.

     துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
          தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
     செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
          செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
     எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
          இன்ப மேஇமை யான்மகட் கரசே
     திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
          திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

உரை:

     வளம் திகழும் திருவொற்றியூர்க்கண் கோயில் கொண்டருளும் சிவபெருமானே, பிறைத்திங்கள் பொருந்திய சடையை யுடைய சாவா மருந்து போல்பவனே, இன்பம் பொருந்திய மலையரசன் மகளாகிய உமாதேவிக்குக் கணவனே, அடியவர்களாகிய எங்கள் உள்ளத்தின்கண் மகிழ்வுடன் எழுந்தருளி இன்பம் சுரக்கின்ற அமுதமே, சிவந்த கண்களை யுடைய திருமாலும் பிரமனும் முயன்று தேடியும் காண முடியாதொழிந்த செல்வனே, உயர்ந்த வெண்மையான திருநீறணிந்து நினது திருக் கோயிலில் தொண்டு செய்து நின்னுடைய இரண்டு திருவடிகளையும் வழிபட்டு நினது இனிய அருட்சூழலில் சேர்வது எப்பொழுதோ, அருளுக. எ.று.

     துங்கம் - உயர்வு, வெண்பொடி - திருநீறு, சென்னியிலும் முகத்திலும் மெய்யிலும் அணியப்படுவது பற்றி “வெண்பொடி யணிந்து” எனப் பொதுப்பட மொழிகின்றார். தொழும்பு செய்தல் - தொண்டு செய்தல். புலரியெழுந்து நீராடித் திருநீறணிந்து கொண்டு திருக்கோயிற்குட் புகுந்து அலகிடல், மெழுகிடல், பூப்பறிந்து மாலை தொடுத்தளித்தல் முதலியன செய்தலைத் “தொழும்பு செய்து” எனத்தொகுத்துரைக்கின்றார். இவை திருமுறைகளில் விரித்தும் தொகுத்தும் உரைக்கப்படுகின்றன. திருவடி யிரண்டையும் “துணைப் பதம்” என்று சுட்டுகின்றார். திருவடியை உபேயமென்றும், வழிபட்டு அதன் நீழலைப் பெறுவது உபாயமென்றும் சாத்திரங்கள் கூறுகின்றன. அதனால், “துணைப்பதம் ஏத்தி நின் அருள் சேர்குவது என்றோ?” என வினவுகின்றார். திருமாலுக்குக் கண் இயல்பாகவே சிவந்திருப்பது பற்றிச் செங்கண்மால் எனப்படுகின்றார் என்று பரிபாடல் உரை கூறுகின்றது. அருள் - அருட் சூழல். திருமாலும் பிரமனும் முறையே திருவடியும் திருமுடியும் கண்டறிய முயன்று மாட்டாராயினமையின் “தேடியும் காணா” என்றும், பின்னர் வழிபட்டேத்தியபோது காட்சி தந்து இன்புறுவித்தமையின் “செல்வ” என்றும் புகழ்கின்றார். சிந்திப்பவர்க்குச் சிந்தையில் தேனூறி நின்று மகிழ்விக்கும் நலம்பற்றி, “எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே” எனவுரைக்கின்றார். சிந்திக்கும் சிந்தையின் சிந்தனைக்கு உவந்து இன்பம் செய்தல் புலப்பட, “உள்ளுவந்து ஊறிய” என்கின்றார். இமவான் - மலையரசன்; உமாதேவிக்குத் தந்தை. “எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன்” (பொற்சுண்.) என்று திருவாசகம் குறிப்பது காண்க. இமம் - பனிமலை. தேய்ந்து போந்த திங்களை மேலும் தேய்ந்து கெடா வண்ணம் காப்பது கருதிச் சடைக்கண் தங்க வைத்தருளிய செயல் நன்மை விளங்க “திங்கள் தங்கிய சடை யுடை மருந்தே” என்று தெரிவிக்கின்றார்.

     இதன்கண், ஒற்றியூர்ச் சிவபெருமானை வழிபட்டு அவன் திருவருட் சூழலை யடைவது எப்போதோ என வள்ளற் பெருமான் ஏங்கி யுரைக்கின்றமை யறிக.

     (1)