768. ஏல வார்குழ லாள்இடத் தவனே
என்னை ஆண்டவ னேஎன தரசே
கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
நாடி டாதருள் நற்குணக் குன்றே
சீல மேவிய தவத்தினர் போற்றத்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
உரை: ஒழுக்கமும் தவமுடையார் போற்றுகிற வளம் திகழும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் சிவபெருமானே, ஏலம் கமழும் நீண்ட கூந்தலையுடைய உமாதேவியை இடப்பாகத்தே யுடையவனே, எளியனாகிய என்னையும் நினக்குரியனாக ஆண்டு கொண்டவனே, எனக்கு அரசனே, திருமால் பன்றியாக வுருக் கொண்டும் காண முடியாது அயர்ந்த, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை யுடைய கோமளக் கொழுந்தே, நிலவுலகில் எம்மைப் போன்ற எளியவர்களின் பிழையை நாடாமல் அருள் புரியும் நற்குணக் குன்றமே. எ.று.
ஒழுக்கநெறி நின்று சிவம் பெறுவான் தவம் புரியும் சான்றோர் வந்து பரவும் சிறப்பு நோக்கி, “சீலமேவிய தவத்தினர் போற்றத் திகழும் ஒற்றியூர்” என உரைக்கின்றார். ஏலம் - கூந்தற்கிடும் மணப்பொருள். “ஏலவார் குழலாளுமை நங்கை என்று மேத்தி வழிபடப் பெற்ற கால காலனை” (ஏகம்பம்) என்று நம்பியாரூரர் நயந்து பாடுவது காண்க. இடத்தவன் - இடப்பக்கத்தே யுடையவன். உலகியலிற் சிக்கிக் கிடந்த என்னைச் சிவநெறிக்குள் ஈர்த்துக் கொண்டமைபற்றி, “என்னை ஆண்டவனே” என்றும், வேண்டும் நன்னடை நல்குதலின், “எனது அரசே” என்றும் உரைக்கின்றார். கோலம் - பன்றி. மால் கோலமாக உருக்கொண்டும் என இயைக்க, காலில் அணியும் வீர கண்டை ஒலிக்கும் இயல்பிற்றாதலின், “குரை கழல்” என்றும்; பாதம், பதம் என்றும் வழங்குகின்றன. கோமளக் கொழுந்து என்றலின், மணி வகையுள் மென்மை சான்றது எனக் கொள்க. “குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி” (சதக. 68) என மணிவாசகர் கூறுவது காண்க. குணமும் குற்றமும் பொருந்தியது மக்கட் பிறப்பாதலால், குற்றம் நாடாது குணமே நாடி அருள் சுரக்கும் பெருமானாதலால், “ஞாலமீதில் எம்போல்வார் பிழையை நாடிடாது அருள் நற்குணக்குன்றே” என நவில்கின்றார்.
இதன்கண், குற்றம் செயினும் குணமே நாடி அருள் சுரக்கும் குண நலம் குறித்தவாறு. (5)
|