772. நாட்டும் முப்புரம் நகைத்தெரிந் தவனே
நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
குற்ற முங்குண மாக்குறிப் பவனே
தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
உரை: எழுதப்படுகின்ற மெய்யான புகழ் நாற்றிசையும் பரந்து ஓங்கி விளங்கும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டிருக்கும் சிவ பெருமானே, நீ நூல்கள் குறித்துரைக்கும் திரிபுரத்தை நகைத்து எரித்தழித்தவன்; அம்பலத்தை யடைந்து கூத்தியற்றும் திருவடியை யுடையவன்; வெண்மையான தலைகளால் தொடுக்கப்பட்ட மாலையை விரும்பி மார்பில் அணிந்து கொள்பவன்; வேடனாகிய கண்ணப்பன் எச்சிற்படுத்திப் படைத்த ஊனை யுண்டவன்; நெடிய உச்சியை யுடைய மேருமலையை வில்லாக வளைத்துக் கொண்ட தோளையுடையவன்; அன்பர் செய்யும் குற்றங்களைக் குணமாகக் கொள்பவன். எ.று.
நூல்களில் விருப்புடன் கற்றோர் புகழ்ந்துரைக்கும் உண்மைச் செய்திகள் நிலைத்து நாடு முழுதும் பரந்து நிற்றலின் “தீட்டும் மெய்ப் புகழ் திசை பரந்து ஓங்கத் திகழும் ஒற்றியூர்” என்று கூறுகின்றார். சுந்தரர் சங்கிலி நாய்ச்சியாரை மணந்தது, பட்டினத்தடிகள் முத்தி பெற்றது, திருக்கோயிலில் எழுத்திலக்கணம் நல்கியது, நாடக மகளிர்க்குக் கூத்துக்களை வகை செய்தளித்தது முதலிய தொண்டர் வரலாற்றிலும் கோயிற் கல்வெட்டுக்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது “தீட்டும் மெய்ப் புகழ்ச் செய்தி”களாகும். இரும்பு வெள்ளி பொன் என்ற மூன்றாலாகிய மதில் சூழ்ந்த நகரமெனப் புராணங்கள் நாட்டில் கூறுதலால் “நாட்டும் முப்புரம்” என்றும், அவற்றைப் பார்த்துச் சிவ பெருமான் குறுநகை செய்தானாக, உடனே புரம் மூன்றும் எரிந்து சாம்பராயினமையின், “முப்புரம் நகைத் தெரித்தவனே” என்றும் இயம்புகின்றார். சிறப்புடைய தில்லையம்பலத்தும், ஏனை எல்லாக் கோயில்களிலும் உள்ள அம்பலங்களிலும் கூத்தப்பிரான் நடனம் உண்மையின், “அம்பலம் நண்ணி நடம்செயும் பதனே” என்று கூறுகின்றார். இறந்த தேவர்களின் தோலும் தசையும் கழிந்த வெண்டலைகளை மாலையாகத் தொடுத்து அணிகின்றதனை, “வெண்டலைத்தார் புனைந்தவனே” என்றும், அதனைச் சிவன் விரும்பி யணிவதை விதந்து “வேட்டுப் புனைந்தவனே’’ என்றும் இசைக்கின்றார். தான் வேட்டம் செய்து கொன்ற விலங்குகளின் ஊனைத் தான் பல்லினால் மென்று சுவை கண்டு கொணர்ந்து கண்ணப்ப நாயனார் கொடுத்த செய்தி இங்கே குறிக்கப்படுகிறது. அவர் வேட்டுவரினத்தவராதல் பற்றி, “வேடன்” என்றும், முதற்கண் தன் வாயிலிட்டுச் சுவை பார்த்து அளித்தமையின் “எச்சில்” என்றும், சிவபிரான் அதனை விரும்பியுண்ட அன்புச் செயலை, “விரும்பி யுண்டவனே” என்றும் விளம்புகின்றார். கோடு - சிகரம். கோட்டிய - வளைத்த. மேரு மலையை வில்லாக வளைத்த திறம் சிவனது தோள் வலியை மிகுத்துக் காட்டியதனால் “கோட்டிய புயனே” என்று வியந்து கூறுகின்றார். திருஞான சம்பந்தர் முதலிய பெருமக்கள் செய்த குற்றத்தைக் குணமாகக் கொண்டதனை நம்பியாரூரர் நன்கு பாடிக் காட்டுகின்றாராதலின், “குற்றமும் குணமாக் குறிப்பவனே” என்று நயந்து மொழிகின்றார். “நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக் கரையன் நாளைப் போவானும், கற்ற சூதனற் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம் புல்லன் என்றிவர்கள் குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு நின் குரை கழலடைந்தேன்” (புன்கூர்) என்று நம்பியாரூரர் நவில்வது காண்க.
இதன்கண், குற்றமும் குணமாக் குறிக்கும் சிவனது அருணிறைவு கூறியவாறாம். (9)
|