பக்கம் எண் :

19. தியாக வண்ணப் பதிகம்

திருவொற்றியூர்

    திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் தியாகப்பெருமானுக்கு வண்ணச் சந்தத்தில் பாடிய விருத்தப்பாக்கள் பத்துக் கொண்டமையின் இஃது இப்பெயர் கொண்டுளது. பத்துப் பாட்டுக்கள் கொண்ட தொகுதியைப் பதிகம் என்னும் வழக்காறு இடைக்காலத்தில் புகுந்தது. ஒரு நூலுக்கு பாயிரமாக அமைந்ததைப் பதிகம் என்பது பழங்கால மரபு. திருமுறைக் காலத்திற்குப் பின்னர்ப் போந்த நூற்றாண்டுகளில் சமயத் துறையிலும் இலக்கிய நெறியிலும் வேறுபாடுகள் பல புகுந்தன; தமிழ் இலக்கணத் துறையும் பாவியல் நடையும் வடமொழிச் சொல்லும் வழக்கும் புகுதற்குச் சிறந்த இடமாயின. தமிழ் வழக்குப் பெரிதும் மறைந்தொழிதற்குப் பெரு வாய்ப்புக்கள் உண்டாயின. தூய தமிழ் நடையைச் சிறப்பாகக் கருதுதலின்றி வடசொல்லும் திசைச்சொல்லும் பெருகக் கலந்து பேசுவதும் எழுதுவதும் உயரிய ஒழுக்காறாக் கருதுவோர் பெருகி நல்ல செல்வாக்கும் எய்தினர். அக்காலச் சூழலில் வள்ளற் பெருமானும், அவர் பாடியருளிய அருட்பாக்களைத் தொகுத்த பெரு மக்களும் வாழ்ந்தமையின், வடசொல் வழக்கும் வடநூற் கருத்தும் பெருகக் கலந்துள்ளனர். இப் பெருமக்கட்குத் திருவாசகம் அருளிய மணிவாசகப்பெருமான் வழி காட்டியுள்ளனர். அறிவாற் சிவனே என அப் பெருமானைக் கருதிப் போற்றிப் பரவுவது நம்மனோர் கடனாக இருத்தலால் அவர் காட்டிய முறையும் வழிபட்ட நெறியும் வழங்கி யருளிய கருத்தும் இத் திருவருட்பாவின்கட் கண்டு போற்றுகின்றோம். இப் பதிகத்தின்கண் பாட்டுத்தோறும் வள்ளற் பெருமான், சிவ பெருமானைத் தேவியோடும் சேயாகிய முருகப்பெருமானொடும் கூடி யினிதிருக்கும் அழகிய அருட்கோலத்தைக் கண்டுகளிக்கும் பேற்றினை வழங்கியருளுமாறு வேண்டுகின்றார். அம்மையப்பன் என்ற இருவர்க்கு மிடையே சேயாகி முருகன் வீற்றிருக்கும் காட்சி, ஞானமும் கிரியையும் சேரவிருந்து உலகு புரக்கும் ஒட்பத்தைக் காண்பார் உள்ளத்தில் எழுப்பி இன்புறுத்துகின்றது. தேவருருவில் மூவர் முகத்திலும் தூய அன்பொளி தவழ்ந்து மக்கட்கு ஞானத்தைப் பரப்புகின்றது. இது பெறற்கரும் பேறாகலின் வள்ளற்பெருமான் ஆர்வ மிகுதி புலப்படச் சந்தமுறும் வண்ணப்பாவினால் பாடியருளுகின்றார். இவ்வாறு புதல்வன் நடுவண் இருக்க இருமருங்கிலும் பெற்றோர் இருக்கும் காட்சி பெறலரும் பெருமையுடைத்தென்பதை இனிதுணர்ந்த சான்றோராகிய பேயனாருர், “புதல்வன் நடுவணனாக நன்றும், இனிது மன்ற அவர் கிடக்கை, நீனில வியலகங் கவைஇய, ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே (ஐங்குறு. 401)” என்பது உணரத்தக்கது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய வண்ண விருத்தம்

774.

     காரார் குழலாள் உமையோ டயில்வேல்
          காளையொ டுந்தான் அமர்கின்ற
     ஏரார் கோலம் கண்டு களிப்பான்
          எண்ணும் எமக்கொன் றருளானேல்
     நீரார் சடைமேல் பிறையொன் றுடையான்
          நிதிக்கோன் தோழன் எனநின்றான்
     பேரார் ஒற்றி யூரான் தியாகப்
          பெருமான் பிச்சைப் பெருமானே.

உரை:

     கங்கை யிருக்கும் சடையில் பிறை யணிந்திருப்பவனும், குபேரனுக்குத் தோழன் எனப் புராணிகர் சொல்ல நிற்பவனும் ஆகிய புகழ் பொருந்திய திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் தியாகப் பெருமான், கரிய கூந்தலையுடைய உமாதேவியொடும், கூரிய வேலேந்தும் காளையாகிய முருகப்பெருமானொடும் அமர்கின்ற அழகிய கோலத்தைக் கண்டு மகிழ்தற்கு ஆர்வமுறும் எங்கட்கு அருளானாயின் பிச்சையேற்கும் பெருமான் என்பது பொருத்தமாம். எ.று.

     மகளிர்க்குக் கூந்தல் கரிதாதல் அழகு மிகுவித்தலால் அதனை விதந்து, “காரார் குழலாள் உமையாள்” என்றும், இளையனாயினும் கூரிய வேற்படையேந்தித் தீமை களைவதிற் சிறந்தோனாதலால் முருகனை, “அயில் வேற்காளை” என்றும் சிறப்பிக்கின்றார். பெற்றோர் இடையே யிருப்பதில் முருகனுக்கு இன்பமும், தங்களிடையே மகன் இருப்பது தாய் தந்தையர்க் கின்பமும் தருகின்றன. இங்ஙன் இன்பம் பொலியும் அன்புடைக் காட்சி, காண்பார்க்கு இன்பமும் ஞானமும் எய்துவித்தல் பயனாதலின் மூவரும் ஒருங்கே அமர்கின்ற ஏரார் கோலம் கண்டு களிக்க உள்ளம் விரும்புமாற்றை, “ஏரார் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கு” என்று புகல்கின்றார். நீர் - கங்கையாறு. ஒரு கலையோடு நிற்கும் பிறைமதி என்றற்குப் “பிறையொன்று” என்கின்றார். நிதிக்கோன் - குபேரன். பேர் - புகழ். மனைதொறும் சென்று பலியேற்கும் செயல் பற்றி, சிவனைப் பிச்சைப்பெருமான் என்று கூறுகின்றார். பலியேற்பதன் கருத்தென்னை என்பார்க்குத் திருஞான சம்பந்தர் “மனமுலாம் அடியார்க் கருள் புரிகின்ற வகையலாற் பலிதிரிந் துண்பிலான்” என்று தெளிவிக்கின்றார். இதனால், தியாகப்பெருமானாயினும், அருளாமையால் பிச்சையேற்கும் உள்ளமுடைய பெருமான் என்பது தேற்றமாம். பிச்சைப்பெருமான் என்றாராயினும், கொடா வுள்ளமுடையாரையும் கொடையுள்ள முடையவராக்குவது குறிப்பென்றறிக.

     (1)