பக்கம் எண் :

21. அருள் நாம விளக்கம்

திருவொற்றியூர்

    தெய்வத் திருவருள் வழங்கும் அறுமுகப் பரமன் திருப்பெயரும், சிவன் திருப்பெயரும் திருவைந்தெழுத்தின் திருப்பெயரும் இத் தலைப்பில் 'அருள் நாமம்' என்று குறிக்கப்படுகின்றன. இவ் அருணெறித் தெய்வங்களைத் திருவொற்றியூர் என்ற திருப்பதியடைந்து மனத்தால் நினைந்து பாடிப் பரவுமாறு பற்றி அவ்வூர் பாட்டுத்தோறும் குறிக்கப்படுகிறது. சிவ சண்முக சிவ எனவும் சிவாய எனவும் அத் திருப்பெயர்களை நினைந்து வழிபடுக என மனத்தோடுமொழியும் வகையில், இத் திருப்பதிகம் அமைந்து விளங்குகிறது. சிவ என்றும், சிவ சண்முக என்றும், சிவாய என்றும் இவ்வருட் பெயர்கள் நிற்றலால், இவற்றையே மந்திரமாகக் கொண்டு ஓதுதற் பொருட்டுப் பிரணவ பீசம் எனப்படும் ஓம் என்ற சொல்லை முற்பட நிறுத்தி மொழிந்தருளுகின்றார். இத் திருப்பெயர்களை மனம் ஒன்றி நினைத்து ஓதுவது முறை; அதற்கு மாறாக மனம் திருப்பெயர்க்கண் ஒன்றி நில்லாமல் உலகியற் போகங்களிற் படர்ந்து புலனைந்தும் ஒருங்கு படிந்து நுகர்தற் கமைந்த போகப் பொருள்களான மகளிர்பால் ஓடுவது இயல்பாதலை எண்ணுகின்றார். மகளிரது இன்பத்துறையில் மக்களின் உள்ளங்கள் பேரீடுபாடு கொண்டு மாழ்கிக் கிடப்பதை யோகரும், போகருமாகிய இரு திறத்தாரும் எடுத்துரைப்பதையும் நூல்கள் உரைப்பது அடிகளார் திருவுள்ளத்தில் காட்சி தருகிறது. பெண்ணின்பத்தில் தோய்வுற்ற மனம் மாறித், திருவருள் வழங்கும் தெய்வத் திருப்பெயர்களை யோதுவதால் உண்ணிறைந்தோங்கும் இன்பத்தில் அழுந்தி உய்தல் வேண்டுமென்ற கருத்தால் பாட்டுத்தோறும் அதனை எடுத்துரைக்கின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

794.

     வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
          மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்
     ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
          எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
     தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
          தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
     ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
          ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

உரை:

     மனமே, வளைந்த வில்லையொத்த நெற்றியையுடைய மகளிர் கட்பார்வையால் அறிவு மயங்கியும், வஞ்ச மனத்தவர் செய்கையால் மனம் வருந்தியும், ஏங்கித் துன்புறும் இச்செயல்களால் நாளும் நீ கண்ட பயன் யாது? அழகுடைய திருவொற்றியூர்க்கு என்னொடு வந்து, இனிய செங்கரும்பினும் சுவைமிக்கதாய்த் தித்தித்து மெய்யன்பர்களின் சிந்தையில் தேனூறிச் சிறக்கும் ஓம் சிவ சண்முக, ஓம் சிவ, ஓம் சிவாய எனப் பிரணவத்தோடு கூடிய திருவருட் பெயர்களை எண்ணுவாயாக. எ.று.

     வாங்கு வில் - வளைந்த வில். “வாங்கு சிலை மறவர்” (நற். 148) என்பது காண்க. புருவத்தை வளைத்து வேட்கைக் குறிப்புணர்த்தும் இளமங்கையர் பார்வையால் ஆடவர் மனம் அலமரல் எய்துதலால், “வின்னுதல் மங்கையர் விழியால் மயங்கி” என்று இயம்புகின்றார். முறைப்படி மெய்வருந்த உழைத்துப் பெறற்குரிய பொருளைப் பிறர்பால் இருப்பக் கண்டு வருத்தமின்றிக் கவர்ந்து கோடற் பொருட்டு வஞ்சனை புரிவாரை, “வஞ்சர்” என்கின்றார். மகளிரால் மெய்ந்நலனும், வஞ்சரால் பொருள் நலமும் இழந்து ஏங்குதல் அறிவில் செயலாகும். அது கருதியே, “ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய்” என அறிவுறுத்துகிறார். தேன் குலவு செங்கரும்பு - இயல்பிலேயே சாறுமிக்க இனிமைச்சுவை நிறைந்த கரும்பு. நினைவார் நினைவின்கண் செங்கரும்பின் சாற்றினும் சுவைமிக்கு உண்ணத் தெவிட்டாத ஞானத் தேனாதல் விளங்கக் “கரும்பினும் இனிதாய்த் தித்தித்து” என்று சிறப்பிக்கின்றார். வயலிடத்து வளர்ந்து முற்றி ஆலையிற் பிழிந்து உண்பார் நாவின்கண் இனிமையூறும் செங்கரும்பு போலாது, சிந்திப்பார் சிந்தனைக்கண் ஊறும் திருவருள் நிறைவாகிய திருப்பெயர் என்பாராய், “அன்பர்தம் சித்தத்துள் ஊறி ஓங்கும்” எனப் புகழ்கின்றார். ஓம் சிவ சண்முக எனவும், சிவ ஓம் எனவும், ஓம் சிவாய எனவும் நிற்கும் இம் மூன்றனையும், ஓம் சிவ சண்முக, ஓம் சிவ, ஓம் சிவாய என முறைப்படுத்தி உரை, மந்தம், மானதம் என மூன்று நிலைக்கண் நிறுத்தி ஓதுப. இம் மூன்றனுள் பிறர் செவியினும் படுமாறு ஓதுவது உரை; அதற்கு ஏற்றது ஓம் சிவ சண்முக என்பது, தன் செவிக்கே கேட்குமாறு ஓதுவது மந்தம்; அதற்கேற்றது ஓம் சிவ என நிற்பது. மனத்தகத்தே சிந்திக்கப்படுவது மானதம்; அதற்குரியது ஓம் சிவாய என்பது. இது பற்றியே மூன்றையும் “ஓம் சிவ சண்முக சிவஓம் ஓம் சிவாய என்று உன்னுதி” என உரைத்தருளுகின்றார். சிவாய என்றும், சிவ என்றும் வரும் உயர்நிலை மந்திரம் மனத்தின்கண் நிறுத்தி ஓதப்படும் இயல்பு தெரித்தற்கு “உன்னுதி மனனே” என மொழிந்தருளுகின்றார். ஓம் என்பதை வடநூலார் பிரணவம் என்பர்; தமிழ்ச் சான்றோர் ஓங்காரம் என்றனர். திருமூலர் “ஓம் எனும் ஓங்காரம்”(2676) என்பர். இறைவன் ஓங்கார வுருவினன் என்பாராய், “ஊனங்கத்துயிர்ப்பாய் உலகெல்லாம் ஓங்காரத் துருவாகி நின்றான்” (வலிவலம். 1) என நாவுக்கரசர் எடுத்துரைக்கின்றார். அப்பெருமானே, ஓங்காரத்தின் உட்பொருளாம் இறைவன் என்பது தோன்ற “ஒரு சுடராய் உலகேழு மானான் கண்டாய், ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்” என்று மழபாடித் தாண்டகத்தின்கண் உரைத்தருள்கின்றார். இங்ஙனம் இறைவனை உருவாயும் அவனையே மெய்ப்பொருளாயும் கொண்டமைபற்றி, ஓம் என்பதை இறைவன் அருட்பெயர்க்கு முற்பட நிறுத்தி ஓதுவது மரபாயிற்று. அவ் வரலாற்றுண்மை புலப்பட “ஓம் சிவ சண்முக, ஓம் சிவ, ஓம் சிவாய” என உரைக்கின்றார். ஓம் சிவாய, ஓம் சிவ, ஓம் சிவ சண்முக என்று நிற்றற்பாலான செய்யுளாதல் பற்றி மாறி நிற்கின்றன.

     இதனால், ஓம் சிவாய, ஓம் சிவ, ஓம் சிவ சண்முக என நிற்கும் திருவருட்டிருப் பெயர்கள் அன்பர் சித்தத்தில் தேனூறி இன்புறுத்தும்; இந்த இன்பத்தை நாடாமல் மகளிர் இன்பத்தையே விழைந்துலவுவது பயனில் செயல் என்பதாம்.

     (1)