797. பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே
புலைய மங்கையர் புழுநெளி அளற்றில்
என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி
ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
உரை: மனமே, நில்லாது கெடும் வாழ்க்கையை நிலையென நினைந்து, புலைநாறும் மகளிரது புழுமலிந்த சேறுபோன்ற சிறுநீருறுப்பின் கண் எப்பொழுதும் கிடந்துழலும் மடமையைப் போக்கி, அழகு பொருந்திய திருவொற்றியூர்க்கு என்னுடன் வந்து, சுவை நிறைந்த தீவிய பலாச் சுளையினும் இனிப்புடையதாய்ச் சிவத்தொண்டர்களின் நாவின்கண் இனிமைச் சுவைமிக நிலைபெறச் சுரக்கும் ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என்று உன்னுவாயாக. எ.று.
பொன்றும் வாழ்க்கை - நிலையின்றிக் கெடும் உலக வாழ்க்கை, புலால் நாறும் தசையாலாகிய உடம்பாதலின், மகளிரை, “புலைய மங்கையர்” என்றும், புழுக்கள் மிக்கு நெளிந்துறும் சேற்றுக் குழி போல்வது என்றற்கு, “புழுநெறி அளற்றின்” என்றும் இயம்புகின்றார். புலைய மங்கையரென்றாரேனும் மக்கள் அனைவர் உடம்புக்கும் புலையியல்பு உண்டெனக் கொள்க. விலக்கின்றி நாளும் புணர்ந்தொழுகும் செயலை, “என்றும் வீழ்ந்துழல் மடமை” என இகழ்கின்றார். சுவை துன்றியிருத்தல் பலாவுக்கு இயற்கையாதலால், “துன்று தீம்பலாச்சுளை” என்கிறார். சிவன்பாற் கொண்ட மெய்யன்பால் அவற்குவப்புடைய தொண்டினைப் புரியும் சான்றோரைத் “தொண்டர்” என்று சிறப்பித்து, ஓதுந்தோறும் சிவன் திருப்பெயர் தீம்பலாச் சுளையினும் சுவை முதிர்ந்து இனிப்பளித்து ஊக்கும் என்று உரைக்கலுற்று, “பலாச் சுளையினும் தொண்டர்களின் நா சுவைபெற ஊறி” என்றும், அதனால் அவர்தம் திருவுள்ளம் திருப்பெயர்ப் பொருளில் நிலையாக நின்று ஒன்றுகிற தென்பாராய், “ஒன்றும் ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய வென்று உன்னுதி மனனே” என்றும் உரைத்தருளுகின்றார்.
இதனால், ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என நிற்கும் அருட்டிருப் பெயர்கள் ஓதும் தொண்டர் உள்ளத்தில் தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்ச் சுவைபெற ஊறிப் பெயர்பொருளில் ஒன்றுவிக்கும் எனத் தெருட்டியவாறாம். (4)
|