801. பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால்
பசையில் நெஞ்சரால் பரிவுறு கின்றாய்
எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
சந்த மாம்புகழ் அடியரில் கூடிச்
சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி
உந்த ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
உரை: மனமே, ஆசையின் வடிவமாக இருக்கும் மகளிரால் உண்டாகும் காம மயக்கத்தாலும், ஈரமில்லாத நெஞ்சினையுடைய வஞ்சர் வஞ்சத்தாலும் வருத்த மெய்துகின்றாய்; இவ்வாற்றால் நீ எவ்வண்ணம் உய்தி பெறுவாய்; எழுச்சி பொருந்திய திருவொற்றியூர்க்கு என்னுடன் வந்து, அழகிய புகழ் படைத்த அடியார்களோடு பிறப்பென்னும் கடலைக் கடந்து அக்கரையடைய ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என்ற திருப்பெயர்களைச் சிந்திப்பாயாக. எ.று.
பந்தம் - ஆசைப் பிணிப்பு. மகளிரின் மேனி முற்றும் ஆசையின் வடிவாய்க்கண்டு கருத்திழந்தாரை நீங்க விடாது பிணிக்கும் இயல்பு பற்றி, “பந்த வண்ணமாம் மடந்தையர்” என்றும், அவர்பால் பெறலாகும் இன்பத்தில் எய்தும் மயக்கம், ஈண்டு “மடந்தையர் மயக்”கென்றும் கூறப்படுகின்றன. வஞ்சம் செய்வோர் நெஞ்சில் ஈரமில்லார் என்பது தோன்றப் “பசையில் நெஞ்சர்” எனவும், அவரால் எய்துவது துன்பமே யாதலால், “பரிவுறுகின்றாய்” எனவும் எடுத்துரைத்து, பரிவுற்று வருந்துவது மக்களறிவின் வன்மையைக் கெடுத்து உய்தியிழப்பிக்கும் என்பது பற்றியே, “எந்த வண்ணம் நீ உய்வணம், அந்தோ” என இரங்குகின்றார். சந்தம் - அழகு. அடியர் - இறைவன் திருவடிக்கே தம் நெஞ்சை இடமாக வைத்தவர். திருவடி தங்கிய சிந்தையையுடையார்க்குப் பிறவியறுதல் ஒருதலை எனத் திருவள்ளுவர் உரைப்பதால், அவரொடு கூடுவது பிறப்பறுதற்கு ஏதுவாதல் உணர்ந்து “அடியரிற் கூடிச் சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி உந்த” எனக் கூறுகின்றார். திருப்பெயர்ச் சிந்தனை பிறவிக்கடல் நீந்துவார்க்குப் புணையாதல் புலப்பட “சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி உந்த ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என்று உன்னுதி” என உரைக்கின்றார்.
இதனால் ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என வரும் அருட் பெயர்கள் ஓதுபவர் பிறவியறுக்கும் பெற்றியது என்பதாம். (8)
|