22. ஸ்ரீ சிவ சண்முக நாம
சங்கீர்த்தன லகரி
திருவொற்றியூர்
சிவஞான வுருவாகிய அறுமுகப் பெருமான் திருப்பெயரை வடமொழியில் ஸ்ரீ சிவ
சண்முகம் என்பர். தூய இனிய தமிழில் உள்ள பெயர்களை வடமொழியாக்கி யுரைக்கும் வழக்கம்
சென்ற இரு நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் உண்டாயிற்று. முன்னைய நூற்றாண்டுகளில் சயினர்கள்
தமிழும் வடமொழியும் கலந்த கலப்பட நடையொன்றை நாட்டிற் புகுத்தினர். கலப்படம் என்பது
இகழ்ச்சியுரையாதல் கண்டு மணிப்பிரவாளம் என்று பெயரிட்டு வழங்கினர். ஆயினும் அது நாட்டில்
சிறப்பிடம் பெறாதாயிற்று. வடமொழியை வேதமொழி என்றும் தெய்வமொழி யென்றும் வேதியர்கள்
விளம்பினர்; விசய நகர வேந்தரும், துருக்கரும், வெள்ளயரும் நாடாளும் நிலையை எய்தியபோது
வேதியர்கள் அரசியலிற் புகுந்து செல்வாக்கு மிக்கனர். அந்நாளில் அவர்கள் மறைந்த வடசொற்
கலப்புக்கு முதலிடம் தந்து போற்றினர். அவர்க்குள்ள வடமொழிப் பற்றின் மிகுதியைக்
கண்டறியும் அறிவு அறைபோகித் தமிழ் மக்கள் தமது மொழியின் தூய்மையைப் பேணிக்காக்கும்
திறம் இலராயினர். அதனோடு, தாமும் வடசொற் கலப்பைப் போற்றியதோடு, தமிழ்ச் சொற்களை
வடமொழிப் படுத்தலுற்றனர். திருக்கோயில்களில் தூய தமிழில் வழங்கிய தெய்வப் பெயர்கள்
அனைத்தும் இந்நாளில் வடமொழியில் இருப்பதற்கு அதுவே காரணமாகும். இச் சூழ்நிலையில்
வடலூரடிகள் தோன்றி வளர்ந்து சிறந்தவராதலின், அறுமுகப்பெருமான் திருப்பெயரை ஸ்ரீ சிவ
சண்முகமெனவும், அவரைப் புகழ்ந்து பாடும் பாட்டை “சண்முக நாம சங்கீர்த்தன லகரி” எனவும்
குறித்துள்ளார். சங்கீர்த்தனம் என்பது புகழ்தல் என்னும் பொருளது; கீர்த்தியை யுரைப்பது
கீர்த்தனம். கீர்த்தியை இனிது மொழிவது சங்கீர்த்தனம். கீர்த்தியுரைகளை நீர்நிலையிற்
காணப்படும் அலைகளைப் போல நிரல்படத் தொடுத்துரைப்பது லகரி. திருமுருகன் பெயர்ப் புகழ்களை
அலைவரிசை போல அடுக்கிப் பாடுவது என்ற பொருளில் சிவ சண்முக நாம சங்கீர்த்தன லகரி எனப்
பெயர் இடப் பெற்றுள்ளது.
இப் பதிகமும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் அறுமுகப் பெருமானையே பொருளாகக்
கொண்டுளது. அவர் திருமுன் தாம் செய்துள்ள பிழை முதலியவற்றை எடுத்துரைக்குமாற்றால்
நெஞ்சினைத் தூய்மை செய்துகொள்ளும் திறம் அறிந்து பின்பற்ற வேண்டிய சிறப்புடையது.
நெஞ்சின்கண் உள்ளது இது என்று இறைவனுக்கு அறிவிப்பின், அதனை அவன் தூய்மை செய்து ஏன்று
இன்னருள் புரிவன். “நெஞ்சமிது கண்டுகொள் உனக்கென நினைந்தார், வஞ்சமது அறுத்து அருளுபவன்”
(நள்ளாறு) என்று ஞானசம்பந்தர் அறிவிப்பது காண்க. அம் மெய்ம்மொழிக்கண் உளதாய ஆழ்ந்த
பற்றினால் வடலூரடிகள் இத்திருப்பதிகத்தின்கண், நாம் செய்த பழுதுகளை யுரைப்போம்;
அவற்றறாலாகிய குறைகளைப் போக்கிடுவார்; நாம் அவர் அருள் பெறலாம்; இதற்கு என்மேல் ஆணை
என்று உரைத்தருள்கின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 804. பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
தொழுது சண்முக சிவசிவ எனநம்
தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
உரை: என் நெஞ்சமே, குற்றமாவன செய்கின்ற வஞ்சருடைய மனைகட்குச் சென்று வாயிலிற் பன்னாள் இரந்து நின்றதால் நீ பெற்ற பயன் யாது கண்டாய்? ஒன்றுமில்லை; காலம் வறிதே கழிகின்றது; சோலைகள் சூழ்ந்துள்ள திருவொற்றியூர்க்குச் சென்று அங்கே கோயில் கொண்டிருக்கும் சிவத்தோன்றலாகிய முருகப்பெருமான் திருமுன் நின்று, சிவ சிவ சண்முக எனத் துதித்து, நாம் செய்து போந்த குற்றமனைத்தையும் அழுது எடுத்துரைப்போம்: அதனால் அவரது திருவருளைப் பெறலாம்: சிறிதும் ஐயுற வேண்டா, என் மேல் ஆணை, காண். எ.று.
நேர்தல் - உடன்பட்டுச் செய்தல். வஞ்சகர் - சொல் வேறு, செயல் வேறாய் வஞ்சிப்பவர். வஞ்சர் என்னும் சொல் வடசொற் போல இடையே ஒரு ககர வெழுத்துப் பெற்று, வஞ்சகர் என வந்தது. பழுது - குற்றச் செயல். மனை முற்றம் - கடைவாய் என நின்றது. உள்ளதை இல்லையென்று சொல்லி மறுப்பவரையும் வஞ்சர் எனல் அமையும். பன்முறை சென்று இரந்தமை புலப்பட “பற்றி நின்றதில் பயன் எது கண்டாய்” என்று கூறுகின்றார். இத்தகைய செயலால் வாழ்நாள் வீணே கழிவதும் கழிந்த காலம் மீளலாகாத அருமை வாய்ந்ததென்பதும் உணர்ந்துரைப்பது புலப்பட, “பொழுது போகின்றது, எழுதி என் நெஞ்சே” என்று புகல்கின்றார். ஒற்றி நகரை, ஒற்றியம்புரி என மொழிகின்றார். நகரத்தை நகர் என்றும், புரம் என்றும், புரியென்றும் வழங்கும் மரபு பற்றி, “ஒற்றியம்புரி” யென உரைக்கின்றார். தொழுதல் - கை குவித்தல். சிவனது திருவிழிக்கண் தோன்றியதுபற்றி முருகனைச் சிவத் தோன்றல் என்றும், தோன்றல் என்றும் குறிப்பர். முருகனாகிய தோன்றலை, ஆறுமுகம் உடைமை பற்றிச் சண்முக சிவசிவ எனத் துதிப்பது முறையாயிற்று. சிவ சம்பந்தமுடைமை தோன்றச் சிவசிவ சண்முகம் என்று துதிப்பது மரபாயிற்று. தாம் தாம் செய்த குற்றங்களைத் தலைவர் முன் தெரிவித்தவழி, தலைமைப் பண்பால் அவர் அவற்றைப் பொறுத்து அன்பினால் தூயராக்குவது இயல்பாதாலால் அதனை இனிது காட்டுவாராய், “அவர் திருமுன் நாம் பண்டு செய்த பழுதுகளை அழுது சொல்லுதும்” எனவும், அதனால், அவரது அருள் பெறலாம் என்றற்கு “அவர் அருள் பெறலாமே” எனவும், தமது கூற்றின் உண்மையை வற்புறுத்தல் வேண்டி, “ஐயுறல்” என்பதோடு நில்லாமல், “என்மேல் ஆணைகாண்” என்றும் அறிவிக்கின்றார்.
இதனால், பிழையுள்ளன எடுத்துரைக்கின் பொறுத்து அருள் புரிவன் முருகப்பெருமான் என்பது தெரிவிக்கப்படுவது காண்க. (1)
|