பக்கம் எண் :

808.

     இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
          ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
     எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
          எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
     தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
          தூய என்றடி தொழுதுநாம் உற்ற
     அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
          ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

உரை:

     நெஞ்சே, கேட்போர்க்கு இல்லை யென்று சொல்வதே பொருள் எனக் கொண்ட உலோபிகளின் ஈனம் மிக்க மனைவாயிலையடைந்து ஒன்றும் பெறாது மனம் வருந்துகின்றாய்; பகற்போது வீணே கழிகின்றது; நெஞ்சமே எழுக; அழகு கொண்ட திருவொற்றியூர் என்ற திருப்பதிக்கேகிப் பழைமை வாய்ந்த சிவ சண்முக, சிவ ஓம், தூயனே என்று முருகன் திருவடியைத் தொழுது வணங்கி நமக்குற்ற துன்பத்துக்குக் காரணமாகிய அல்லல்களை ஓதி அவன் திருவருளைப் பெறலாம்; ஐயுற வேண்டா; என் மேல் ஆணை. எ.று.

     யாவர் எத்தகைய எளிய உதவி வேண்டினும் செய்யாமையும் கொடாமையும் இயல்பாக வுடையவரை, “இல்லை யென்பதே பொருள் எனக் கொண்டோர்” என்றும், அவரது மனைவாயிலை இகழ்தற்கு, “ஈன வாயில்” என்றும் இகழ்கின்றார். ஈனவாயில் அடைந்தோர் இன்பம் பெறற்கு ஏதுவின்மையின், “இடர்ப்படுகின்றாய்” என வுரைக்கின்றார் . எல்லை - பகற்போது, தொன்றுதொட்டுச் சான்றோர் பலரும் ஓதி வழிபடுவதுபற்றி, “தொல்லை” என்று குறித்து, “தொல்லை ஓம் சிவ சண்முக ஓம்” எனவும், முருகப்பெருமானது தூய தன்மையை வியந்து, “தூய” எனவும் சொல்லி வழிபடுகின்றார். தொழுது வணங்குவோர் செய்து கொள்ள வேண்டிய விண்ணப்பம் இது என விளம்புவாராய், நாம் எய்தி வருந்தும் துன்பத்துக்கு ஏதுவாய தீவினைகளை அல்லல் என்று குறித்து அவற்றை நினைந்து ஓதுதல் அருட்பேற்றுக்கு வாயில் என்று உரைக்கலுற்று, “அல்லல் ஓதுதும் அவர் அருள் பெற ஆமே” என்று அறிவிக்கின்றார். ஐயுறல் என்மேல் ஆணை என்றற்கு முன்பு உரைத்ததே உரைத்துக் கொள்க.

     இதனால், ஓம் சிவ, சண்முக சிவ ஓம் என ஓதும் இம்மரபு பண்டை நாளிலிருந்தே சான்றோரால் ஓதப்படுவ தென்பதும், ஓதுவோர் அருள் பெறுவார் என்பதும் உரைத்தவாறாம்.

     (5)