பக்கம் எண் :

24. திருவருள் வழக்க விளக்கம்

திருவொற்றியூர்

    இறைவன் தன்பால் அன்பு செய்யும் உயிரினங்கட்குச் செய்யும் அருள் திருவருள் எனப்படுகிறது. மக்களிற் பெரியராயினார் சிறியராயினார்க்குச் செய்வது அருள். தெய்வம் புரியும் அருள் திருவருள் எனப்படுவதாயிற்று. இறைவனது திருவருளைப் பெற்ற அடியார் பலருண்டு. அவருட் சிலருக்கு அப்பெருமான் திருவருள் வழங்கிய செய்தியை விளங்கப் பாராட்டியுரைப்பது பற்றி இப்பத்துத் திருவருள் வழக்க விளக்கம் என்று பெயர் தரப்பெற்றது.

கட்டளைக் கலித்துறை

824.

     தோடுடை யார்புலித் தோலுடை
          யார்கடல் தூங்கும்ஒரு
     மாடுடை யார்மழு மான்உடை
          யார்பிர மன்தலையாம்
     ஓடுடை யார்ஒற்றி யூர்உடை
          யார்புகழ் ஓங்கியவெண்
     காடுடை யார்நெற்றிக் கண்உடை
          யார்எம் கடவுளரே.

உரை:

     ஒரு காதில் தோடணிந்தவரும், புலித்தோலை உடையாகக் கொண்டவரும், கடலிடத்தே உறங்கும் திருமாலாகிய காளை மாட்டை ஊர்தியாகவுடையவரும், ஒரு கையில் மழுப்படையும், ஒரு கையில் மானும் உடையவரும், ஒரு கையில் பிரமன் தலையோட்டை யேந்துபவரும், திருவொற்றியூரை யுடையவரும், புகழ் மிக்க திருவெண்காட்டைப் பதியாகவுடையவரும், நெற்றியிற் கண்ணுடையவருமாகிய சிவபெருமான் எமது கடவுளராவார். எ.று.

     ஒரு காதில் தோடும் ஒரு காதில் குழையுமணிதல் பண்டைநாளை வழக்கு. “தோடொருகாது ஒருகாது சேர்ந்த குழையான்” (நாரை) என்று பெரியோர் கூறுவர். இடக்காதில் தோடும் வலக்காதில் குழையும் அணிவது மரபென்று சீவக சிந்தாமணியால் (1257) அறிகின்றோம். யானைத்தோல் போர்வை யாயினமையின், புலித்தோல் சிவனுக்கு ஆடையாயிற்றென அறிக. சிவனுக்கு ஊர்தியாவது வெண்மையான எருது; “ஊர்தி வால்வெள் ளேறே” என்பர் பாரதம் பாடிய பெருந்தேவனார் (புறம், கட): வெள்ளேறாய் விளங்குபவர் திருமால்; அவர் கடலிடத்தே ஆலிலையிற் கிடந்து உறங்குவரென்பது கொண்டு “கடல் தூங்கும் ஒரு மாடு உடையார்” என்று இசைக்கின்றார். மழு - ஒரு வகை வாட்படை; “ஒளி மழுவாள் அங்கை யுடையீர்” (திருவோத்தூர்) என்பது காண்க; இதனை எரிகாலும் தீப்படை என்றலும் உண்டு; பழுக்கக் காய்ந்த இரும்பை மழுவென்பர்: சிலர் கோடரி என்பர்; ஐந்தாவதாக மிகைபட விருந்த பிரமன் தலையைக் கிள்ளி, அத்தலையோட்டைப் பலியேற்கும் கலமாகக் கொண்ட குறிப்புத் தோன்ற, “பிரமன் தலையாம் ஓடுடையார்” என்று புகழ்கின்றார். திருவெண்காடு - தஞ்சை மாவட்டத்திலுள்ள வளமான ஊர்; சிவன் எழுந்தருளும் திருக்கோயில் சிறப்புமிக்கது. இதனை, வடலூர் வள்ளல், “நல்லவர்கள், கண்காட்டும் நெற்றிக் கடவுளே என்று தொழ வெண்காட்டில் மேவுகின்ற மெய்ப் பொருளே” (விண். கலி. 12) என்று பாடுகின்றார்.

     இதன்கண், பேரருட் பெருமானாகிய சிவபிரான்பால் காணப்படும் தோடு, புலித்தோல், மாடு, மழு முதலியன காட்டி இவற்றையுடைய இப்பெருமானே எமது கடவுள் என்று விளக்குகின்றார்.

     (1)