26. நெஞ்சொடு நெகிழ்தல்
அஃதாவது
நெஞ்சம் எய்தி வருந்தும் துன்பத்தோடு இயைந்து சென்று, தன் வயப்படுத்தித் தகுவன அறிவுறுத்தல்.
இதன்கண், வஞ்சகரியல்பும் வாழ்க்கையில் உளவாகும் துன்பங்களும், விடய வாதனைகட்கும் பிற
துன்பங்கட்கும் இரையாதலும், துன்பத்தால் இறைவனை நினையா தொழிவதும், பிறவும்
வெளிப்படையாகவும் குறிப்பாகவும் எடுத்தோதி இறைவனது திருவருட் கொடை நலத்தையும் சிவஞானிகள்
தொடர்பையும்,. பரசிவத் தொடர்பின் நினைவையும், சிவ மூர்த்தங்களைத் தியானிப்பதால் வரும்
இன்பத்தையும் சிவகதிக்குரிய நெறியையும் அறிவுறுத்துகின்றார்.
கட்டளைக் கலித்துறை 845. சீர்தரு வார்புகழ்ப் பேர்தரு
வார்அருள் தேன்தருவார்
ஊர்தரு வார்மதி யுந்தரு
வார்கதி யுந்தருவார்
ஏர்தரு வார்தரு வார்ஒற்றி
யூர்எம் இறைவர் அன்றி
யார்தரு வார்நெஞ்ச மேஇங்கும்
அங்கும் இயம்புகவே.
உரை: நெஞ்சமே, திருவொற்றியூர் இறைவர் நமக்குச் சீரும் பேரும் புகழும் தருவார்; ஊர்களையும் தருவார்; திருவருளாகிய தேனும், சீர்த்த மதியும், உயர்ந்த கதியும் நல்குவார்; மேன்மேலும் உளவாகா நின்ற எழுச்சியும் உண்டு பண்ணுவார்; இவைகளை இம்மையிலும் மறுமையிலும் இவரைப்போல் தருபவர் யார்? இவற்றையெல்லாம் எண்ணி என்னோடு இசைந்து ஒழுகுவாயாக. எ.று.
சீர் - சிறப்பு. புகழ் - செயல் வகைகளால் உளதாவது. திருவருள் இன்பந் தருவதாதலின், “திருவருள் தேன்” என்று சிறப்பிக்கின்றார். கொடுப்பார் கொடுப்பவற்றுள் ஊரும் ஒன்றாதலின், “ஊர் தருவார்” என்கின்றார். மதி - அறிவு, கதி - மேற்பிறப்பு. ஏர் - அழகு. இது செயற்கை வகையாலுளதாவது. சீரும் பேரும் புகழும் முதலியவற்றைப் பெறுதற்கரிய வாய்ப்பினை வழங்குதற்கு இறைவன் திருவருளன்றிப் பிறிது யாதுமில்லாமையால், “என் இறைவரன்றி யார் தருவார்” என்று இயம்புகிறார். இங்கு - மண்ணுலகம். அங்கு - விண்ணுலகம். தரு - மரம்.
இதனால், இறைவன் திருவருளால் இம்மை மறுமை யிரண்டிலும், சீரும் பேரும் பிறவும் எல்லாம் பெறலாம் எனத் தெரிவித்தவாறாம். (1)
|