854. சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியதாய்
ஆனந்தச் சுடராய் அன்பர்
தன்னிலைக்கும் சென்னிலைக்கும் அண்மையதாய்
அருள்பழுக்கும் தருவாய் என்றும்
முன்னிலைக்கும் நின்னிலைக்கும் காண்பரிதாய்
மூவாத முதலாய்ச் சுத்த
நன்னிலைக்கும் நிலையாய பசுபதியை
மனனேநீ நவின்றி டாயே.
உரை: மனமே, சொல்லின் எல்லைக்கும் பொருளின் எல்லைக்கும், அப்பால் தூரத்தில் இருப்பதாய், இன்ப வொளியாய், அன்பர்களின் அன்பு நிலைக்கும் அது செல்லும் எல்லைக்கும் நெருங்கியதாய், திருவருட்கனி பழுத்து நல்கும் அருண் மரமாய் முன்னிலையிடத்தும் நின்னிலையாகிய தன்மையிடத்தும் காண்பதற்கரியதாய், மூத்து முதிர்தல் இல்லாத முதற் பொருளாய், தூய பரநிலையமாய் உள்ள பசுபதியாகிய இறைவனை நீ நாளும் நினைந்து பரவுவாயாக. எ.று.
பொறி புலன்களுக்குக் காட்சிப்படும் அளவு பொருளின் எல்லை. அவற்றை யெடுத்துரைக்கும் அளவு சொல்லின் எல்லை. சொல்லுமளவு சொற் பிரபஞ்சமென்றும் பொருளின் பரப்பு பொருட்பிரபஞ்சமென்றும் கூறப்படுவதுண்டு. இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட பரம்பொருளை, “சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியது” என்கின்றார். இருள் நீக்கமும் ஒளி விளக்கமுமாகிய இரண்டையும் உடன் நிகழ்த்தும் உலகியல் ஒளிப்பொருள்கள் போலின்றி, இருள் நீக்கமும், ஒளி விளக்கமும், இன்ப நுகர்ச்சியும் ஆகிய மூன்றையும் ஒருங்கே எய்துவிப்பது பற்றி, “ஆனந்தச் சுடர்” என்கின்றார், அன்பரது அன்பு நிலைக்கும், அது சென்று பரவும் எல்லையளவுக்கும் குறுகிய எல்லையில் உள்ளமை விளங்க, “அன்பரது அன்பு தன் நிலைக்கும், அது செல் நிலைக்கும் அண்மையதாய்” என்று மொழிகின்றார். அறவுருவாய் அன்பு காய்த்து அருள் பழுக்கும் தெய்வத் தனிமரமாய்த் திகழ்கின்றமை தோன்ற “அருள் பழுக்கும் தருவாய்” என்கின்றார். தன்மைக்கண் அகக்கண்ணுக்கும், முன்னிலைக்கண் புறக்கண்ணுக்கும் காணப்படாமை விளங்க, “என்றும் முன்னிலைக்கும் தன்னிலைக்கும் காண்பரிதாய்” என்றுரைக்கின்றார். என்றும் உள்ள பொருள் என்றற்கு, “மூவா முதல்” என மொழிகின்றார். சுத்த தத்துவ நிலைகட்கு அப்பால், தத்துவாதீத நிலையிலிருப்பதாயினும், உயிர்களோடு தொடர்பறாதிருக்கும் இனிய நிலை விளங்கச் “சுத்த நன்னிலைக்கும் நிலையாய பசுபதியை” என மொழிகின்றார். நவிலுதல் - நினைந்து பயிலுதல்.
இதனால், பரசிவத்தின் தொடர்பை நினைந்து பயிலுக என நெஞ்சுக்கு அறிவுறுத்தவாறு. (10)
|