பக்கம் எண் :

27. அவத்தொழிற் கலைசல்

திருவொற்றியூர்   

    இப் பத்தின்கண் வள்ளற் பெருமான் திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் திருமுன் தாம் செய்த செயல் வகையுள் பயனிலவாய் ஒழிந்த சிலவற்றை நினைந்து முறையிட்டுத் தமது மனமெய்தும் வருத்தத்தைப் புலப்படுத்துகின்றார். மகளிர் கூட்டத்தால் உளதாய்க் கழிந்த வீண் தொழிலை இரண்டு பாட்டுக்களில் ஓதுகின்றார். உலகியல் வாழ்வில் ஒன்றி யுழன்றவிடத் தெய்திய வருத்தம் ஒருபால் வெளிப்படுகின்றது. மலவிருள் மறைப்பையும் கண்டு அது நீங்கிட வேண்டு மென்கின்றார். மனம் தமது மொழிவழி நில்லாது ஓடுவது ஒருபால் துன்பம் தருகிறது. தேவதேவர்கள் அறிவரிய சிவபரம் பொருளைத் தாம் அறிந்துன்புறக் கருதுவது கண்ணிலான் விண்ணில் ஒளிரும் வான்சுடரைக் காண விழைவதுபோலவும், மறைகளால் உணர்தற்கரிய பரசிவ மெனநினையாது உணர்ந்தோத முயல்வது நாய் அரசாள்வது போலவும் தோன்றுகின்றன. இவ்வாறு முயற்சியும் செயலுமெல்லாம் அவமாயினமை தெரிவித்தவர். என்னைத் தொண்டருள் ஒருவனாக்குக; நின் அடியாரோடல்லது பிறரொடு வாழேன்; நின் திருவடியும் திருக்கோயிலுமே எனக்குப் பற்றாவன. என் கருத்தை நீ முடித்து வைப்பாயோ, அறியேன்; என்னவாயினும், எனக்கு அருளுவது உன் கடன்; அது பெற்று உய்வது என் கடன்; நெஞ்சு நையும் யான் நின் அருள் பெறவிடில் அடியார் வைவர், நீ யளித்த வாழ்விற்கும் பொல்லாத பழி எய்தும் என மொழிகின்றார்.

    இக் கருத்துக்களை இனிய சொற்களால் உரைக்கும் பாட்டுக்கள் யாவும் அந்தாதித் தொடையில் அமைந்திருப்பது மனப்பாடம் செய்தற்கு எளிமை செய்கின்றது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

858.

     அணங்கணார் களபத் தனமலைக் கிவரும்
          அறிவிலேன் என்புகாத் துழலும்
     சுணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும்
          சுகமும்உண் டாங்கொலோ அறியேன்
     கணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும்
          கடவுளே கடவுளர்க் கிறையே
     உணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே
          ஒற்றியூர் உத்தம தேவே.

உரை:

     பேய்க் கணங்கள் வாழும் சுடுகாட்டில் கையில் தீயேந்தியாடுகின்ற கடவுளே, கடவுட் கெல்லாம் இறைவனே, உலர்ந்த எலும்பாகிய தலைகளால் தொடுக்கப்பட்ட தலைமாலை யணிந்த அழகிய தோள்களை யுடையவனே, திருவொற்றியூரிற் கோயில் கொண்டிருக்கும் உத்தமத் தெய்வமே, அணங்கு போன்ற மகளிருடைய சந்தனக் குழம்பணிந்த முலைகளாகிய மலையிவர விரும்பும் அறிவில்லாதவனாகிய, எலும்புத் துண்டைக் காத்துக் கிடக்கும் நாய் போன்று எனக்கு உன் திருவருளைப் பெறக் கூடிய சுகநிலை எய்துமோ, அறியேன். எ.று.

     பேய்க் கணம் சூழச் சுடுகாட்டில் கையில் அனல் ஏந்தி ஆடுவன் சிவன் என்று புராணங்கள் உரைத்தலின், “கணங்கள் நேர்காட்டில் எரியுகந் தாடும் கடவுளே” என்று கூறுகின்றார். “முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக் காடுங் கடலும் மலையும் மண்ணும் விண்ணும் சுழல அனல் கையேந்தி ஆடும் அரவப் புயங்கன்” (மூத்த) என்று காரைக்காலம்மையார் உரைப்பது காண்க. முழுமுதற் பொருள் ஒன்றிற்கேயுரிய கடவுளென்னும் ஒருமைச் சொல்லை இடைக்காலப் புலவர்கள் பல தெய்வக் கொள்கை வெறிகொண்டு சிதைத்துச் செத்துப் பிறக்கின்ற மக்கட்கும் தெய்வங்கட்கும் உரியதாக்கினர். அதனால் அடிகளாரும், கடவுள ரெனப் பன்மைச் சொல்லாக்கித் தெய்வங்கள் மேலும் தேவர்கள் மேலும் ஏற்றிக் “கடவுளர்க் கிறையே” என்று கூறுகின்றார். முற்ற வுலர்ந்து தோலும் நரம்பும் தசையும் பிறவும் நீங்கிய எலும்புக் கூடாகிய தலைகள் கோத்த மாலையென்றற்கு “உணங்கு வெண்டலைத் தார்” என்று விளக்குகின்றார். தலைத்தார் - தலைமாலை. “வெண்டலை மாலை விரவிப் பூண்ட மெய்யுடையார்” (வேணு) என்று ஞானசம்பந்தர் கூறுவர். அணங்கனார் மெய்ந்நலத்தால் காண்பர் மனத்தில் காம நோய் விளைவிக்கும் உருநல மகளிர் மார்பில் முலைமுற்றத்தில் குங்குமக் கலவை யணிதலால், “களபத்தனம்” என்றும், அடிபரந் துயர்ந்துள்ளமையின் “மலை”யென்றும் சிறப்பிக்கின்றார். மகளிருடைய முயக்கின்பத்தில் செல்லுவதன்றித் திருவருட் பேற்றுக்குரிய செயல்வகைக்கண் அறிவு செல்லாமை புலப்பட, “அறிவிலேன்” என்றும், என்புத் துண்டைக் கண்டதும் வேறு நாய்கள் போந்து கவராதவாறு குரைத்து நிற்கும் நாய்போல உலக வாழ்விற் பெறலாகும் சிற்றின்பத்தைப் பிறர் கண்டு பங்கு கொள்ளாதவாறு காத்தொழுகும் அவச்செய்கையை எடுத்தோதுவாராய், “என்பு காத்துழலும் சுணங்கனேன்” என்றும், தன் அறிவியலும் வாழ்வியலும் திருவருட் பேற்றுக்குரிய வாய்ப்பு இன்மையை விளங்கக் காட்டுதலால், “தனக்கும் திருவருள் கிடைக்கும் சுகமும் உண்டாங் கொலொ, அறியேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால் பெண்ணின்ப நுகர்ச்சி மிகுதியும், உலகியற் பாத்தூண் துறந்த வாழ்வும் உடைமை திருவருட் சுகப் பேற்றுக்குத் தடையாமென்பது குறிப்பாய் உணர்த்தியவாறாம்.

     (1)