பக்கம் எண் :

860.

     ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள்
          உள்ளம்நொந் திளைக்கின்ற தின்னும்
     நன்றுநின் தன்மை நான் அறிந் தேத்தல்
          நாயர சாளல்போல் அன்றோ
     சென்றுநின் றடியார் உள்ளகத் தூறும்
          தெள்ளிய அமுதத்தின் திரட்டே
     மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே
          வளங்கொளும் ஒற்றியூர் மணியே.

உரை:

     அடியவர் உள்ளந்தோறும் சென்று தங்கி இன்பமுறும் தெள்ளிய ஞானவமுதத் திரட்சியாக வுள்ளவனே, அம்பலத்தில் நின்றாடும் மாணிக்கமலை போல்பவனே, வளம்கொண்ட திருவொற்றியூரில் உள்ள மணியே, மறைகளாகிய ஞான நூல் எனப்படுபவை நின் தன்மையைச் சிறிதும் அறியாமல் உள்ளன; அவற்றை ஆயும் உள்ளமும் ஒன்றும் காணமாட்டாமையால் இப்போதும் நொந்து மெலிகின்றது; நன்மை பொருந்திய நின் சிவமாந் தன்மையை யான் அறிந்து ஏத்துவது நாய் அரசாள்வது போலாம். எ.று.

     உள்குவார் உள்ளந்தோறும் அவர் நினைவிடைப் புகுந்து நின்று இன்பத் தேனூறி மகிழ்விப்பது சிவபெருமானது அருட்செய லாதலால், அதனை விதந்து, “சென்று நின்றடியார் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே” என்று செப்புகின்றார், “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன, ஐயாறன் அடித்தலமே” என்று நாவுக்கரசரும், “சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று” (சிவபு.) பிறப்பறுக்கும் பெருமான் என்று மாணிக்கவாசகரும், இவ்வாறே சான்றோர் பலரும் தெளியவுரைப்பது காண்க. சிந்திக்கும் உள்ளத்தின் உள்ளே சுரப்பது பற்றி “உள்ளகத் தூறும்” எனவும், அறிவுக்குத் தெளிவும் இன்பமும் தருதலால் “தெள்ளிய வமுதத்தின் திரட்” டெனவும் சிறப்பிக்கின்றார். “நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் அறிப்புறும் அமுதாயவன்” (கச்சி) என்று திருநாவுக்கரசர் உரைப்பர். “மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல வருவார் விடைமேல்” (கடவூர்) என நம்பியாரூரர் முதலியோர் கூறுதலால் “மாணிக்க மலையே” என்றும், “மணியே” என்றும் பரவுகின்றார். மறைகளை யோதுபவர் சிற்றறிவுடைய மக்களாதலின், “ஒன்றும் நின் தன்மை அறிந்தில மறைகள்” என்று உரைக்கின்றார். “வேதங்கள் ஐயாவென ஓங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே” (சிவபு.) என்று திருவாசகம் உரைப்பது ஈண்டு நோக்கத் தக்கது. மறைநூற் பயிற்சி எத்துணை நுண்ணிய தாயினும் பாசவறிவாய் நிறைவுறாததாகலின், பயின்ற வுள்ளம் தெளிவு பெறாமையால் வருந்தி மெலிவது இயல்பாதலால், “உள்ளம் நொந்து இளைக்கின்றது” என்றும், வேதங்கள் தோன்றிப் பன்னூறாண்டுகளாயினும், பயின்றோர் பல்லாயிரவாயினும், வேதங்கள் தெளிவு தருவன அல்ல என்பதையே இன்னமும் கூறுதலால், “இன்னும்” என்றும் இயம்புகின்றார். நன்மை யுடையது நன்று. நாய்க்கு நன்றி யுணர்வின்றி வேறு நற்பண்பு இன்று; அதுபோல் சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய யான் நின் தன்மையை நன்கறிந்து பரவுதல் நாய்க்கு ஏற்றம் தருவது போலும் செயலாம் என்பார், “நாயரசாளல் போலன்றோ” என மொழிகின்றார். “பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றே நின் பொன்னருளே” (ஏசறவு) என்று மணிவாசகர் திருவாய் மலர்கின்றார். அன்றோ என்ற விடத்து, அன்றும் எதிர்மறை ஓகாரமும் கூடி ஆம் என்று பொருள் தந்தன.

     இதனால், வேத நூலறிவால் உணரமுடியாத சிவத்தின் பரமாந் தன்மையை மக்களறிவால் நன்கறிந்தேத்தல் அரிய செயலென்பதாம்.

     (3)