பக்கம் எண் :

28. நாள் அவத் தலைசல்

திருவொற்றியூர்

    நாள் அவத்து அலைசல் என்பது வாழ்நாளும் உடல் நிலையும் சாநாளும் நினைந்து காலம் வீணே கழிதற்கு வருந்துதல். இதன்கண் வரும் பாட்டுக்கள் ஒற்றியூர் வாழ்வே என்ற தொடரை மகுடமாகக் கொண்டுள்ளன. இப்பத்தின்கண்ணும் திருவருளையே பொருளாக வேண்டி நிற்கும் கருத்து ஊடுருவி நிற்கின்றது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

868.

     இன்றிருந் தவரை நாளைஇவ் வுலகில்
          இருந்திடக் கண்டிலேம் ஆஆ
     என்றிருந்த தவத்தோர் அரற்றுகின் றனரால்
          ஏழையேன் உண்டுடுத் தவமே
     சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால்
          செய்வன செய்கிலன் அந்தோ
     மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே
          வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

உரை:

     மன்றின்கண் இருந்து ஓங்கி யொளிரும் செம்மணியிற் சுடரும் ஒளியே, அருள் வள்ளலே, ஒற்றியூர்க்கு வாழ்வளிக்கும் செல்வமே; ஆ! இவ்வுலகில் இன்று இருந்தவரை நாளையும் இருக்கக் காண்கின்றோமில்லையே என்று பெரிய தவச் செல்வர்கள் புலம்பியுரைக் கின்றார்களாக, அந்தோ! ஏழையாகிய யான் உண்பதுண்டு உடுப்பதுடுத்து வெறிதே இடந்தோறும் சென்றும் இருந்தும் உறங்கியும் விழித்தும் நிலவுவதன்றிச் செய்தற்குரியவற்றைத் தேர்ந்து செய்யவில்லை, காண். எ.று.

     மன்று - கூத்தப்பெருமான் நின்றாடும் அம்பலம். அப்பெருமான் திருமேனி மாணிக்கமணிபோற் சிவந்து ஒளி வீசுவதுபற்றி, “மன்றிருந்தோங்கும் மணிச்சுடர் ஒளியே” என்று கூறுகின்றார். அருட் செல்வத்தை வரையாது வழங்குதலால், “வள்ளல்” எனவும், அப்பெருமான் கோயில் கொண்டிருப்பதால் ஒற்றியூர் வளமும் செல்வமும் சிறப்பும் பெறுவது நோக்கி, “ஒற்றியூர் வாழ்வே” என்றும் இயம்புகின்றார். “நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமையுடைத்திவ் உலகு” (குறள்) எனத் திருவள்ளுவரும், “இன்றுளேன் நாளை யில்லேன் என் செய்வான் தோன்றினேனே” (தனி. நேரி.) எனத் திருநாவுக்கரசரும் உரைப்பது நினைவிற் கொண்டு பாடுதலால், “இன்றிருந்தவரை நாளையிவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ என்று இருந்தவத்தோர் அரற்றுகின்றனரால்” என்று உரைக்கின்றார். நிலையாமையை யுணர்ந்து மக்கள் ஒழுகாமைக்கு மனம் வருந்தித் தவத்தோர் உரைக்குமாறு புலப்பட, “அரற்றுகின்றனரால்” எனக் குறிக்கின்றார். ஆஆ - அருளின் கட்குறிப் பென்பர் பேராசிரியர். அக்குறிப்பையும் கூற்றையும் அறியாமை தோன்ற, “ஏழையேன்” என்றும், நாளை அவமாய்க் கழித்தமை விளங்க, “ஏழையேன் உண்டுடுத்து அவமே சென்றிருந்து உறங்கி விழிப்பதே” என்றும், நிலையாமையுணர்ந்து நிலைத்த பொழுதிற்குள் செயற்குரியன தேர்ந்து செய்யாமை தோன்ற, “செய்வன செய்கிலேன்” என்றும், அது நினைந்து இரங்குமாறு விளங்க “அந்தோ” என்றும் இசைக்கின்றார்.

     இதனால், தவத்தோர் அறிவுரை கொள்ளாமல் அவமே காலம் கழித்தமை கூறியவாறு.

     (1)