பக்கம் எண் :

875.

     மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே
          மைவடித் தெடுக்குநர் போல
     நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க
          நொந்தனன் நொந்ததும் அல்லால்
     படிக்குளே மனத்தால் பரிவுறு கின்றேன்
          பாவியேன் தனக்கருள் புரியாய்
     வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும்
          வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

உரை:

     அன்பராயினார் பாடும் வடித்த சொற்களால் அமைந்த தமிழ்ப் பாட்டுக்களை யேற்றுக்கொண்டு அருள் வழங்கும் வள்ளலே, ஒற்றியூர்க்கண் இருந்து மக்களுயிர்க்கு வாழ்வளிக்கும் பெருமானே! அலையெழுந்து மடியும் நீர்மேல் எழுத விரும்பி எழுதுகோற்கு மை காய்ச்சி வடித்தெடுப்பவர் போல நொடிப்பொழுதில் இறந்து மறையும் உடம்பை வளர்த்தல் வேண்டி உழைத்து நொந்து மெலிந்தயான், நொந்ததேயன்றி, இந் நிலவுலக வாழ்வில் மனம் செய்யும் கொடுமையால் துன்புறுகின்ற பாவியாகிய எனக்கு உன் அருள் புரிய வேண்டுகிறேன். எ.று.

     மெய்யன்பர்களாகிய காரைக்கால் அம்மையார், திருமூலர் முதல் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரர் ஆகியோரை யுள்ளிட்ட பெருமக்களை இங்கே “அன்பர்” என்றும், அவர்கள் பாடியருளிய பாட்டுக்களை விரும்பி யேற்று வேண்டியன வேண்டியாங்கருளிய நலம் தோன்ற, “வடிக்குறும் தமிழ் கொண்டு அன்பருக் கருளும் வள்ளலே” என்றும் கூறுகின்றார். குற்றமில்லாமல் தெளிவே நிறைந்த தமிழ்ப் பாட்டுக்கள் “வடிக்குறும் தமிழ்” எனச் சிறப்பிக்கப்படுகின்றன. வடித்தல் - குற்றம் களைதல். “வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்” (சிலப். 13 : 88) என இளங்கோவடிகள் உரைப்பது காண்க. மடிக்குறும் நீர் - அலையெழுந்து மடிந்து வீழும் நீர். எழுதுவோர் மை காய்ச்சி வடித்துக் கொண்டு எழுதுகோலை அதன்கண் தோய்த்து எழுதும் முறைமை தோன்ற, “எழுத்தினுக்கிடவே மைவடித்தெடுக்குநர்போல” என்று இயம்புகின்றார். நீர்மேல் எழுதக் கருதுவோர் எழுதுகோலை மையிற் றோய்த்து எழுத நினையார்; மை தோய்ந்த எழுதுகோல் நீர் பட்டவுடன் கரைந்துபோம்; இச் சிறு செயலை நினைவில் நினையாதாரினும் பெருமூடர் உலகில் இலர்; அவரினும் முழு மூடனாய் நிலையின்றிக் கெடும் என் உடம்பினை வளர்க்க அரும்பாடுபட்டு நொந்து வருந்தினேன் என்பாராய், “நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன்” என்று நுவல்கின்றார். அறிவின்மையால் மிக வுழைத்து உடல் நொந்ததே யன்றி, உட்கருவியாய மனத்தால் அது சென்ற விடமெல்லாம் சென்றலைந்து இந்நிலவுலகில் பெருந்துயர் உழக்கின்றேன் என்பார், “நொந்தது மல்லால் படிக்குளே மனத்தால் பரிவுறுகின்றேன்” என்றும், இதற்கெல்லாம் காரணம் என் தீவினையென்று வருந்தலுற்றுப் “பாவியேன்” என்றும் சொல்லித் துயர்கின்றார். புரியாய் என்பது, செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்; அது செய்யென் கிளவியாய் வருதலுண்மையின், இங்கே செய்யென்னும் பொருளில் வருகின்றது.

     இதனால், உடம்பின் நிலையாமை நினையாமல் அதனை வளர்க்க வேண்டி உடம்பாலும் மனத்தாலும் உழைத்து நொந்தனனாதலால் எனக்கு அருள் செய்க என்று முறையிட்டவாறாம்.

     (8)