877. கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும்
கண்ணிலார் போல்கிடந் துழைக்கும்
குணத்தினில் கொடியேன் தனக்குநின் அருள்தான்
கூடுவ தெவ்வண்ணம் அறியேன்
பணத்தினில் பொலியும் பாம்பரை ஆர்த்த
பரமனே பிரமன்மால் அறியா
வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே
வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
உரை: படத்தினால் அழகுறும் பாம்பை இடையிற் கட்டிய பரமனே! பிரமனும் திருமாலும் அறியா வண்ணத்தால் மேன்மையுற்று நின்ற மாணிக்க மணியின் சுடராய் விளங்குபவனே! ஒற்றியூர்க்கு வாழ்வளிக்கும் பெருமானே! கணப்பொழுதில் உலகம் கெட்டு மறைவது கண்டும் கண்ணிலாமையின் காணார்போல நிலத்தின்மேல் உழைத்து வருந்தும் குணத்தாற் கொடியனாகிய எனக்கு உன் திருவருள் கிடைப்பது எவ்வண்ணமோ, அறியேன் எ.று.
பணம் - பாம்பின் படம். புள்ளிகளும் ஒளியும் கொண்டு விரிந்து தோன்றும் பாம்பின் படம் அழகு திகழவிருத்தலால் “பணத்தினாற் பொலியும் பாம்பு” என்று கூறுகின்றார். “பாம்பலங் காரப்பரன்” என்று திருக்கோவையார் உரைப்பதைக் கருத்திற் கொண்டு “பணத்தினிற் பொலியும் பாம்பரை ஆர்த்த பரமன்” என்றும், திருமாலும் முடிவறியா வண்ணம் சிவந்த நெருப்புத்தூண் வடிவில் நின்றமை நினைவில் தோன்ற, “பிரமன் மால் அறியா வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே” என்றும் பரவுகின்றார். உலகம் - உயர்நிலை, மக்கள். அவர்களுடைய இருப்பும் மறைவும் விளங்கித் தோன்றுவதுபற்றி, “கணத்தினில் உலகம் அழிதரக்கண்டும்” என்றும், அதனை நாளும் கண்டிருந்தும், காணாதார் போல், நிலையாமையை நினையாது நிலத்தின்மேல் வருந்தியுழைப்பதையே மேற்கொண்டிருப்பதை விதந்து, “கண்ணிலார்போல் கிடந்து உழைக்கும்” என்றும், அறிவு கோடியதுபோலக் குணமும் கோடிக் கொடுமையுடையனாக வுள்ளேன் என்பாராய், “குணத்தினில் கொடியேன்” என்றும், தமது நிலையை விளக்கி யுரைக்கின்றார். இவ்வாறு அறிவு, குணம், செயல் ஆகியவற்றால் கோட்டமுடைய எனக்கு உன் திருவருள் கிடைத்தற்கு ஏது காணேன் என வருந்துவாராய், “நின்னருள் தான் கூடுவதெவ்வணம் அறியேன்” என்று இயம்புகின்றார்.
இதனால், குணஞ்செயல்களால் கொடுமையுடைய எனக்குத் திருவருள் கிடைக்குமோ என அஞ்சுகிறேன் என்றவாறாம். (10)
|