பக்கம் எண் :

29. நெஞ்சைத் தேற்றல்

திருவொற்றியூர்

    செய்வது தெளியாது கலங்கும் நெஞ்சுக்குத் தெளிவு கூறும் வகையில் இப்பத்தினுள் அடங்கிய பாட்டுகள் அமைந்துள்ளன. குறையுற்ற வுள்ளத்துடன் உதவி நாடிச் சென்ற நெஞ்சினை வஞ்சகர் சிலர் ஏமாற்றித் திகைப்பித்துள்ளனர். அதனால் சூடுண்ட பூனை போலப் பிறரை நாடற்கண் அச்சமுற் றலமருகிறது. தீச்செயலுடையார் மனைக்கு உதவி வேண்டிச் சென்று அவரது இயல்புணர்ந்து திகைப்புண்டு திரும்பியுளது. இல்லை யென்னாத நல்லோரை யடைந்து ஒன்று இரத்தல் ஈதல் போலும் ஏற்றமுடைய தென்பதை மறந்து, கரக்கும் மனமுடையாரை யடைந்து அவரது கரப்புரை கேட்டு இடியுண்ட நாகம் போல நெஞ்சு நிலை கலங்கி யுளது. இரக்கமிலாத கன்னெஞ்சர் சிலரை யடைந்து ஏமாற்ற மெய்தி, இனி, உலகரை நாடுவது மதியின்மையென நினைந்து இரங்குதல் செய்கிறது. ஈவது போலும் குறிப்பைக் கண்ணிலும் முகத்திலும் சொல்லிலும் காட்டி முடிவில் மறுத் தொழித்த சிலரது செயலால் இலவுகாத்த கிளிபோல் நெஞ்சம் ஏங்கிச் சோர்ந்ததுண்டு. வாழ்நாட் சுருக்கம் பற்றிய நினைவும் வாழ்க்கையில் அடிக்கடி தோன்றும் துன்பமும் மாறி வந்து வருத்துகின்றன. ஒருபால் உலகவர் நிகழ்த்தும் தடையுரைகள் நெஞ்சின் நிறைவை நிலைகுலையச் செய்கின்றன. இத்தகைய ஏமாற்றத் துன்ப அலைகளால் கலக்கமுறாது திருவொற்றியூர்க்குச் சென்று, தியாகப் பெருமானால் வேண்டுவன ஏமாற்றமின்றி எய்தப் பெறலாம். வாய் திறந்து வெளிப்பட வுரைக்கு முன்பே நமது குறிப்பறிந்து நல்கும் பெருவள்ளல் தியாகப்பெருமான். தன்னை நினைந்து வருபவர் கன்னெஞ்சினராயினும், அதனை நோக்காமல் அவர்களையும் அருளிப் புரக்கின்றார். ஈவது யாதாயினும் அதனை விரைந்து நல்குவது தியாகேசனது திருவருட் செயல். எத்தகைய உயர் வாழ்வு வேண்டினும் தந்து வாழ்விப்பார், பரமுத்தி வேண்டினும் தாழாது நல்குவர் காண் என நெஞ்சினைத் தேற்றுவதுபோல் வடலூர் வள்ளல் நம்மை ஊக்குகின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

878.

     சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று
          திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே
     ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி
          ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு
     மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
          வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி
     நன்று வேண்டிய யாவையும் வாங்கி
          நல்கு வேன்எனை நம்புதி மிகவே.

உரை:

     வஞ்ச நெஞ்சரின் மனைக்குச் சென்று அதன் முற்றத்தில் நின்று வஞ்சம் உணர்ந்து திகைக்க வரும் நிலையை எண்ணி வருந்துகின்ற எனது நல்ல கூறுபாடில்லாத நெஞ்சமே, இனி ஒன்றுக்கும் அஞ்ச வேண்டா; என்னொடு சேர்ந்து திருவொற்றியூர்க்கு இன்று வருகுவையேல், அங்கே, அம்பலத்தில் எழுந்தருளிய வள்ளலாகிய தியாகப் பெருமான் மகிழ்ச்சியுடன் எழுந்தருளி யிருக்கின்றார்; அவருடைய தாமரை போலும் திருவடியை வணங்கிப் பெரிதும் வேண்டுவன அனைத்தையும் அவர்பால் வாங்கிக் கொடுப்பேன்; என்னை மிகவும் நம்புக. எ.று.

     சொல்லொன்றும் செயலொன்றுமாக ஏமாற்றுவது வஞ்சமாதலின், அதனை யுடையவரை வஞ்சர் என்று குறிக்கின்றார். மனையடைந்து முற்றத்தே நிற்குமளவுக்கு இன்சொல்லும் காட்டி வேண்டும் உதவியும் செய்யாமல் வந்தவர் உளம் கலங்கித் திகைக்க வைக்கும் வஞ்சகரை முற்பட உணர்ந்து நீங்கும் அறிவுத்திறம் இல்லாமை பற்றி, “திகைக்க எண்ணும் என் திறனிலா நெஞ்சே” என்றும், வஞ்சமுடையாரை முன்னுற உணர்ந்துகொளும் அறிவுக் கூர்மை எல்லார்க்கும் இனிதின் அமைவதின்மையின், “திறன் இலா நெஞ்சே” என்றும் இயம்புகின்றார். பிறர் செய்யும் வஞ்சத்துக் கிரையாகும் நெஞ்சம் யாவரைக் காணினும் அஞ்சுதல் இயல்பாதலின், “ஒன்றும் அஞ்சலை” என்று வள்ளற் பெருமான் தேற்றுகின்றார். வஞ்சத்தால் திகைப்புண்டு தெளிவிழந்து வருந்தும் நெஞ்சினைத் தெருட்டித் தெளிவுறுத்தற்கு வஞ்சமே யில்லாத திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகப் பெருமானிடம் கூட்டிச் செல்லும் ஆர்வத்தால் “என்னுடன் கூடி ஒற்றியூர்க் கின்று வருதியேல்” என்று அழைக்கின்றார். திகைப்புண்டு வருந்துபவர் தனித்தேக அஞ்சுவராதலால், “என்னுடன் கூடி”யென்றும், வருதற்கு உடன்படுமாறு “வருதியேல்” என்றும் விளக்குகின்றார். திருவொற்றியூர்த் திருக்கோயில் திருமன்றில் வீற்றிருக்கும் தியாகப் பெருமானை, “மன்றுள் மேவிய வள்ளலார்” என்று புகழ்கின்றார். மன்றுள் மேவி யிருத்தலைக் கூறுவது. நீதி பலவும் தன்ன வுருவாமெனக் கொண்ட குறிப்பை யுணர்த்துகிறது. பெருமான் அங்கே மகிழ்ந்து வாழ்கின்றார் என்பது, அவரைக் காணலுறும் நாமும் மகிழ்ந்து வாழலாம் என்பது குறிப்பு. அவர் திருமுன் நீ வந்தால், நான் அவருடைய திருவடியை வணங்கி வேண்டுவன அனைத்தையும் வாங்கி யளிப்பேன், கவலற்க என்பாராய், “அவர் மலரடி வணங்கி நின்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன்” என்றும், இதன்கண் உனக்கு ஐயம் வேண்டா என்றற்கு, “எனை நம்புதி மிகவே” என்றும் இயம்புகின்றார். நன்று - மிகுதி. “நன்று பெரிதாகும்” என்பது தொல்காப்பியம்.

     இதனால், திருவொற்றித் தியாகப்பெருமான் திருவடி வணங்கி யாவும் பெறலாம்; வஞ்சிக்கும் புன்மை அவன்பால் இல்லை என அறிக, என்பதாம்.

     (1)