பக்கம் எண் :

880.

     இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால்
          இரத்தல் ஈதலாம் எனல்உணர்ந் திலையோ
     கரக்கின் றோர்களைக் கனவினும் நினையேல்
          கருதி வந்தவர் கடியவர் எனினும்
     புரக்கின் றோர்மலர்ப் புரிசடை உடையார்
          பூத நாயகர் பொன்மலைச் சிலையார்
     உரக்குன் றோர்திரு வொற்றியூர்க் கேகி
          உன்னி ஏற்குதும் உறுதிஎன் நெஞ்சே.

உரை:

     இரப்பவர்க்கு இல்லை யென்று சொல்லாமல் கொடுப்பவர் பாற் சென்று இரத்தலும் ஈகையைப் போலும் புகழ் பயப்பதாம் என்று சான்றோர் உரைப்பதை நீ நினைக்கவில்லையோ? உள்ளதை யில்லையென மறைத்து மறுக்கின்றவர்களைக் கனவிலும் நினையற்க; தம்மை நாடி வந்தவர் கடிந்து விலக்கத் தக்கவராயினும் வேண்டுவ உதவி யாதரிக்கின்றார், விரிந்த முறுக்குண்ட சடையை யுடையவரும் பூதகணத் தலைவரும் பொன்மலையை வில்லாக வுடையவருமாகிய சிவபெருமானார். அவர் எழுந்தருளியிருக்கும் வலிய குன்றுபோன்ற மணற் குன்றிலமைந்துள்ள திருவொற்றியூர்க்குச் சென்று அப் பெருமானுடைய திருவருளை யெண்ணிப்பரவி வேண்ட, வேண்டுவ தரப்பெறுவது உறுதி; என் நெஞ்சே, என்னுடன் வருக. எ.று.

     இரக்கின்றோர் - வறுமையால் வாடி உதவி வேண்டி வருபவர். வருபவர்க்கு இல்லையென மறாது உள்ளது ஈதல் வள்ளன்மை. அத்தகைய வள்ளியோரிடம் சென்று இரத்தல் ஈதல் போன்று ஏற்றம் பயப்பதாம் என்ற கருத்தை “இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவினும் தேற்றாதார் மாட்டு” (1054) என்று திருக்குறள் கூறுகிறது. ஈதல் போல இரத்தல் புகழ் பயக்கும் செயலன்றாயினும், ஈத்துழி யெய்தும் இன்பம் போல எண்ணியது இரவாது பெற்றோமென்ற இன்பமெய்துவது பற்றி, “ஈதலே போலும்” என்று இசைக்கின்றார். கரப்பவரை யிரந்து விடத்து இல்லையென அவர் நிகழ்த்தும் கரப்புரை இரப்பார் உயிரை இரக்கமறக் கெடுத்தலின், “கரக்கின்றோர்களைக் கனவினும் நினையேல்” என்று கூறுகின்றார். கனவின்கண் நிகழினும் இரப்பவர் உள்ளத்தைச் சீரழித்தலின், கரப்பாரைக் கனவிற் காண்டலும் கேடு என வற்புறுத்துகிறார். கரக்கின்றோர் கரப்புரை இரக்கின்றோரை இரக்கமற்ற அரக்கரினமாக்கியதை மேனாட்டுப் புரட்சி வரலாறுகள் வெளிப்படுத்துகின்றன. கடிந்து விலக்கத்தக்க பண்பும் செயலுமுடையாரைக் கடியவ ரென்பர். அவர்களையும் அருள் செய்து பொருளுதவி செய்து அறவாழ்க்கையராக்கும் சிறப்புக் குறித்து, “கருதி வந்தவர் கடியவர் எனினும் புரக்கின்றோர்” என்று புகல்கின்றார். மலர்தல் - விரிதல். பல்வேறு பூத வகைகட்கும் சிவபெருமான் தலைவர் எனப் புராணம் கூறுதலால் “பூத நாயகர்” என்று புகல்கின்றார். அனைத்துப் புவனங்களின் படைப்புக்குக் காரணமாயிருக்கின்ற மண் முதலிய பூதங்கட்குத் தலைவர் என்றுமாம். பொன்மலை - மேருமலை. உரக்குன்று; உரம் - வலிமை. கடற்கரை மணற்குன்று வலிமிக்க தாகலின், அதனை “உரக்குன்று” என்று பாராட்டுகின்றார். திருவொற்றியூர் அமைந்திருக்கும் கடற்கரை மணல் மேட்டை “உரக்குன்று” என்று உரைக்கின்றார் போலும். நினைந்து சென்று நம் நினைவறிந்து நல்கப்படும் பொருளை ஏற்று இன்புறலாம் வருக என்ற குறிப்புத் தோன்ற “உன்னி ஏற்குதும் உறுதி” என மொழிகின்றார். இறைவன் நல்குவது உறுதி யென்றற்கு “உறுதி” என வற்புறுத்தப்படுகிறது.

     இதனால், கரப்போர் மனைக்குச் சென்று கையறவு படுவதினும், திருவொற்றியூர் சென்று தியாகப் பெருமான் முன் நின்றால், அவன் குறிப்பறிந்து வேண்டுவது நல்குவன்; உறுதி. நாமும் பெற்று மகிழலாம் என்பதாம்.

     (3)