886. சென்று நீபுகும் வழியெலாம் என்னைத்
தேட என்வசம் அல்லஎன் நெஞ்சே
இன்ற ரைக்கணம் எங்கும்நேர்ந் தோடா
தியல்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
அன்று வானவர் உயிர்பெற நஞ்சம்
அருந்தி நின்றஎம் அண்ணலார் இடத்தே
நின்று வேண்டிய யாவையும் உனக்கு
நிகழ வாங்கிநான் ஈகுவன் அன்றே.
உரை: நெஞ்சமே, நீ சென்றடையும் இடமெங்கும் உன்னைத் தேடி வருதற்கு உரிய வாய்ப்பு என் அறிவிடத்தில்லை; இன்று ஓர் அரைக் கணநேரம் எவ்விடத்துக்கும் இசைந்து ஓடுதலின்றி அழகுடைய திருவொற்றியூர்க்கு என்னுடன் வருக; அந்நாளில் வானவர் உய்தி பெறற் பொருட்டு நஞ்சுண்டிருந்த எம் தலைவராகிய சிவபெருமானிடத்தே சென்று திருமுன் நின்று உனக்கு வேண்டிய அனைத்தையும் நான் நன்கு வாங்கி நல்குவேன், எ.று.
பொறி புலன்களின் வாயிலாகப் பொருள்களின் உள்ளும் புறமும் சென்று காண்பது மனத்தின் செயலாயினும், மனஞ் செல்லுமிடந்தோறும் அறிவு சென்று உண்மை கண்டறிதல் ஆகாமையின், “நெஞ்சே, சென்று நீ புகும் வழியெலாம் உன்னைத் தேட என் வசம் அல்ல” என்று வள்ளற்பெருமான் நெஞ்சுக்கு அறிவிக்கின்றார். எங்கும் ஓடி இடருவது நெஞ்சின் இயல்பாதலால், “இன்று அரைக்கணம் எங்கும் ஓடாது” எனவும், “உடன் வருதி” எனவும் வேண்டுகின்றார். அன்று, கடல் கடைந்த அன்று, நஞ்சு தோன்றிக் கடைந்த தேவர் பலரையும் வெருட்டினமையின், “வானவர் உயிர் பெற” என்றும், அமுதுண்ட தேவர் பலரும் சாவ, நஞ்சுண்ட சிவபெருமான் சாவா திருந்த தன்மை நினைந்து “நஞ்சம் அருந்தி நின்ற எம் அண்ணல்” என்றும், தான் நஞ்சயின்று அமுதத்தைப் பிறர்க்களித்த வள்ளலாதலின், அவர்பால் நாம் வாழ நமக்கு வேண்டிய யாவும் பெறலாம் என்ற கருத்துப்பட, “அவரிடத்தே யாவையும் உனக்கு நிகழ வாங்கி யீகுவன்” என்றும் இசைக்கின்றார்.
இதனால், நஞ்சினைத் தானுண்டு பிறர்க் கமுதுதவிய பெருமான் வேண்டுவன யாவையும் நல்குவன் என்பதாம். (9)
|