30. நெஞ்சறை கூவல்
திருவொற்றியூர்
நெஞ்சறை கூவல் என்றது நெஞ்சினை அருள் பொழியும் மொழிகளால் தான்
செய்ய விரும்பும் திருப்பணிகட்கு உடன் துணை புரியுமாறு ஆர்வமொ டழைத்தல். இத் தொடர்க்கட்
காணப்படும் அறைகூவல் என்பது வழக்கிலும் செய்யுளிலும் போர்க்கழைக்கும் பொருளில்தான்
வழங்குவது. மணிவாசகப்பெருமான், பலரையும் அன்போடு நோக்கி ஆர்வுற்று அழைத்தருளுதல் என்று
பொருள்படுமாறு, “என்னே ரனையோர் கேட்க வந்தியம்பி, அறைகூவி யாட்கொண்டருளி” (அண்டம்)
என்றும், “அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்” (அம்மானை) என்றும் உரைத்தருளுகின்றார்.
மாலை தொடுத்தல், மஞ்சனமாட்டுதல், திருவலகிடுதல், திருவிளக்கேற்றுதல், திருமெழுக்கிடுதல்,
திருப்பணிசெய்தல் முதலியன செய்வோமென நெஞ்சிற்குச் சொல்லி அதன் துணை வேண்டுமென
விழைகின்றார்.
சிவனுடைய அருட்செயல்கள் பலவற்றில் திருமாலுக்குச் சக்கரப் படை தந்ததும், பிரம
விட்டுணுக்களின் கலகம் தவிர்த்ததும், பிரமன் சிரத்தைக் கொய்ததும், அம்மை காண அம்பலத்
தாடியதும், வயிரவக் கடவுட் கருள்செய்ததும், மாலும் அயனும் அடிமுடி காண நின்றதும் பிறவும் இப்
பத்தின்கண் குறிக்கப்படுகின்றன.
வடலூர் வள்ளலார் திருவொற்றியூர் சென்றிருக்கையில் திருப்பணி செய்யும் ஆர்வம் தோன்றி
அவர் திருவுள்ளத்தை யலைக்கவும், இப் பத்தினைப் பாடியருளினார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 888. கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்
கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
பண்கள் நீடிய பாடலார் மன்றில்
பாத நீடிய பங்கயப் பதத்தார்
ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
உரை: கண் மூன்றுடையவரும் விடக்கறையால் மணிபோலும் கழுத்தையுடையவரும், கங்கைக்கு நாயகரும், உமை நங்கையை இடப் பங்கிலே யுடையவரும் பண்கள் நீட அமைந்த பாடல்களையுடையவரும், தில்லையம்பலத்தில் கூத்தாடற்கமைந்த தாமரைபோலும் திருவடியையுடையவரும், மைதீட்டிய கண்களையுடைய மகளிர் நடம்பயில்கின்ற திருவொற்றியூரில் கோயில்கொண்டிருப்பவருமாகிய சிவபெருமானுக்கு மண்ணுலக வாழ்வு தரும் மயக்கம் நீங்கும்பொருட்டு நல்ல தமிழ்ச் சொற்களாகிய பூவால் மாலை தொடுத்தணிவோம், மனமே, என்னோடு வருக. எ.று.
உடலிலுள்ள ஏனைக் கரணங்களும் கருவிகளும் இயைந்து தொழிற்படற்கு முதற்பொருளாயிருப்பது மனமாதலின், “வருதி என் மனனே” என நயந்தழைக்கின்றார். நெற்றியிற் கண்ணோடு சிவனுக்குக் கண் மூன்றாதலால், “கண்கள் மூன்றினார்” என்றும், கடல் நஞ்சை யுண்டு கறைபட்ட கழுத்தாயினும் கருமணிபோல் ஒளிகொண்டிருப்பதுபற்றி, “கறைமணி மிடற்றார்” என்றும் கூறுகின்றார். பெருகிப் போந்த கங்கையைச் சடையில் ஏற்று அடக்கி இனிது சென்று பயன்படச் செய்தமை வியந்து, “கங்கை நாயகர்” என்றும், முழுதுலகளித்த பராசத்தியாதலின் உமையை இடதுகூற்றிலே யுடைமை பற்றி “மங்கை பங்குடையார்” என்றும் உரைக்கின்றார். பாடல்கள் பல்லாயிரம் இருத்தலுடன், பாடற்கு இனிதியன்ற பண்ணமைந்த திறம் புலப்பட, “பண்கள் நீடிய பாடலார்” என வுரைக்கின்றார். காரைக்காற் பேயாருடைய மூத்த திருப்பதிகம் முதல் தேவார திருவாசகமுள்ளிட்ட பாடல்கள் ஆயிரக்கணக்கில் உண்மையால், பண்ணமைந்த பாடலுடைமை சிறப்பித்துக் காட்டப் படுகிறது. பரதம், ஈண்டு அம்பலத்தின்கண் இறைவன் ஆடும் ஞானக் கூத்து, கூத்தாட்டின் கண் தாளவறுதி திருவடிக்கண்ணதாகலின், அக் குறிப்பு விளங்கப் “பரதம் நீடிய பங்கயப் பதத்தார்” என்று பகர்கின்றார். திருவொற்றியூர்க்கண் இசையும் கூத்தும் வளமுறப் பயிலப்பட்டு வந்த திறத்தை இவ்வூர்க் கோயிலிலுள்ள மூன்றாம் இராசராசனது பத்தொன்பதாமாண்டுக் கல்வெட்டால் (211/1912) அறிகின்றோம். இக் குறிப்புப் புலப்படவே, “ஒண்கண் மாதரார் நடம் பயில் ஒற்றியூர்” என உரைக்கின்றார். ஒற்றியூர்ப் பெருமானுக்குத் தமிழாற் சொன்மாலை சூட்டி வழிபட விழைகின்றாராகலின், மனத்தை நோக்கி “நல் தமிழ்ப் பூமாலை சூட்டுதும் வருதி என் மனனே” என்று கூறுகின்றார். சொன்மாலை சூட்டுவதால் வள்ளற்பெருமான், அடையக் கருதும் பயன் மண்ணக வாழ்வு தரும் மயக்கம் நீங்குவ தென்பார், “நம் மண்கொள் மாலைபோம் வண்ணம்” என்று இயம்புகின்றார். மண்கொள்மாலை - மண்ணக வாழ்வு தரும் மயக்கம். மாயா காரியமாகிய உடலொடுகூடி உயிர் மண்ணில் வாழ்க்கை மேற்கொண்டது, வாழ்வாங்கு வாழ்ந்து மலவிருளின் நீங்கிச் சிவப்பேறு எய்துதற்காம் என்பது சைவ நூற் கொள்கை. மண்ணக வாழ்வில் நுகரப்படுவன அனைத்தும் கால நியதி வயப்பட்டுச் சின்னாளில் கெட்டு மறையும் இயல்பினவாயுள்ளன. அவற்றின் நிலையாமை கண்டு மக்கள் துறவு மேற்கொள்ளாவாறு, நிலைபெறுஙகாலம் சிறிதாயினும் அதற்குள் வாழும் உயிர்க்கு இன்பம் தந்து தம்மையே நிலையென எண்ணிக் கிடக்குமாறு மக்களறிவை மயக்கிவிடுகிறது. பல மக்கட்கு உயிர் நீங்கும்வரை அம் மயக்கம் நீங்குவதில்லை. அதனாற்றான், “மண்கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ்ப்பூ மாலை சூட்டுதும்” என்று உரைக்கின்றார்.
இதனால், மண்ணக வாழ்வு நல்கும் மயக்கம் நீங்குதற்குத் துணை செய்ய வருக என மனத்தை அழைக்கின்றார். (1)
|