891. கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்
கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
துரும்பை நாட்டிஓர் விஞ்சையன் போலத்
தோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோன்
தரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்
தலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து
வரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
உரை: பெரிய படத்தையுடைய பாம்புப் படுக்கையையுடைய கடவுளாகிய நாரணனும் நான்முகனாகிய பெரிய கடவுளும் பிறரும் செய்துகொண்ட கலகத்தை நீக்கும்பொருட்டு அவர்கட்கிடையே ஒரு விஞ்சையன் போலத் தோன்றிச் சிறுதுரும்பை நாட்டி, அதனை யசைக்கும் திறம் அவர்கட்கு இல்லாமை வெளிப்படுத்தி, அவர்களிடையேதவறு நிகழாமல் காத்தளித்த பெருமானும், மரங்கள் நிறைந்த பசிய பூஞ்சோலைகளையுடைய திருவொற்றியூரில் கோயில் கொண்டவனுமாகிய சிவனுக்கு நாம் மனமகிழ்வுடன் பசிய சீர்மை பொருந்திய தமிழ்ப் பாமாலையோடு அழகிய பூமாலையும் சூட்டி யின்புறலாம், மனமே, வருக, எ.று.
கரும்பைந் நாகணை என்பதில் கருமை, பெருமை குறிப்பது; நிறப்பண்பென்று கொள்ளினுமமையும். பை - பாம்பின் படம். நாகத்தாலாகிய அணை, நாகவணை என்று வரும்; ஆயினும் இது நாகணை யென்றே பெரிதும் மரூஉ முடிபேற்று வழங்குகிறது. “கோணா கணையானும் குளிர் தாமரையானும்” (கோயில்) என ஞானசம்பந்தரும் உரைப்பது காணலாம். நான்முகனைப் படைக்கும் கடவுளென்பதுபற்றி, “நான்முகன் வான் கடவுள்” என்று சிறப்பிக்கின்றார். தேவர்களும் முக்குண வயத்தராய்க் காமவெகுளிகட் காளாய்த் துன்புன்புறுவதுபற்றி அவர்களை எடுத்துரைக்கின்றார். விஞ்சையன் போலத் தோன்றித் துரும்பு நட்டுச் சிவன் தனது தலைமை நிலைநாட்டிய செய்தியை, “வாசவன் முதலினோர் மருளத் தொல்லைநாள், தேசுறும் விஞ்சையர் வடிவில் சேர்வுறீஇ, ஆசிலோர் புல்நிறுத் தாணைகாட்டிய ஈசனே” (3:12:74) என்று கந்தபுராணம் கூறுகிறது. துரிசு - குற்றம். தெய்வப் பிறப்புற்றும் மக்களினும் கீழான செயல் புரிவதுபற்றி, தேவர் விளைத்த கலகத்தைத் “துரிசு” என இகழ்கின்றார். தருப்பைம் பொழில் எனற்பாலது எதுகை நோக்கி தரும்பைம் பொழில் என வந்தது. கோயில் கொண்டார் என்பது தலங் கொண்டார் எனக் கூறப்படுகிறது; ஜலம் அருந்தினார் என்றாற் போல.
இதனால், ஒற்றியூர்ப் பெருமானார்க்குத் தமிழ்ச் சொல் மாலையும் அழகிய மலர் மாலையும் தொடுத்தணிவோம்; வருக என்பதாம். (4)
|