31. பற்றின் திறம் பகர்தல்
திருவொற்றியூர்
வடலூர் வள்ளலாரைத் தேவாரம் திருவாசகம் முதலிய திருமுறைகளும்,
சேக்கிழார் திருத்தொண்டர் புராணமும், கச்சியப்பர் கந்தபுராணமும், பரஞ்சோதியார்
திருவிளையாடற் புராணமும் சிறப்பு வகையில் உள்ளத்தில் தோய்ந்து சிவபரம் பொருளிலே உறைத்த
மனத்தராக்கியிருக்கின்றன. சிவனிடத்தே அன்பு பெருகி மறந்தும் புறந்தொழா மனமும், பிற
தெய்வங்களை மதித்துப் பேணாத உள்ளமும், பிற சமயத்தவரைப் பொருளாகக் கருதாத மறவுணர்வும்
அவருடைய உள்ளுருவாக அமைந்துவிடுகின்றன. அந்நிலையில், சிவத்தின்பால் அவர்க்குற்ற அன்பு
மீதூர்கின்றது. தமிழ்ப் புலமையும் வளமுற்று அவரது இனிய பாவியற்றும் பண்புக்கு ஆக்கம்
செய்கிறது; அப்பொழுது பிறந்த பாக்களின் தொகுதி இப்பத்து.
இதன்கண், காட்சி யுணர்வுக்கும் அறிவுக்குத் துணை செய்யும் கண்ணாகிய கருவியும், மனமாகிய
கரணத்தொகுதியும் அவருடைய புலமை விழிக்கெதிரே இயலுகின்றன. தமது உள்ளத்திற் பெருகி வழியும்
சிவப்பற்றால் அவற்றின் இயக்கத்தில் தோன்றும் செயல் வேறுபாட்டை வெளிப்படுத்துகின்றார்.
இக்கருத்துத் தோன்றவே இதன் தலைப்புப் “பற்றின் திறம் பகர்தல்” என்று கூறுகிறது.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
898. வாணரை விடையூர் வரதனை ஒற்றி
வாணனை மலிகடல் விடமாம்
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம்
உடையனை உள்கிநின் றேத்தா
வீணரை மடமை விழலரை மரட்ட
வேடரை மூடரை நெஞ்சக்
கோணரை முருட்டுக் குறும்பரைக் கண்டால்
கூசுவ கூசுவ விழியே.
உரை: ஒளி பொருந்திய வெண்மையான எருதேறும் வரதனும், திருவொற்றியூரில் வாழ்கிறவனும், நிறைந்த கடலிடத்து எழுந்த விடத்தை உண்பவனும், அடியவர்களாகிய எங்கள் உள்ளத்தில் இருப்பவனும், அனைத் துலகங்களையு முடையவனுமாகிய சிவபெருமானை முன்னே நின்று ஏத்தாத வீணர்களையும், மடமையுடைய விழலரையும், எதிர்ப்பட்டாரை மரண நிலைக்குட்படுத்தும் வேடரையும், மூடரையும், நெஞ்சில் நேர்மை யில்லாதவரையும், முரட்டுத் தன்மை பொருந்திய குறும்பரையும் கண்டால் கண்கள் கூசுகின்றன, காண். எ.று.
வாள் - ஒளி, நரை - வெண்மை. “நரை வெள்ளேறு ஒன்று உடையானை” (சிராப்) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. வரதன் - வரம் அருள்பவன். அடியார்க்கருள் புரிதற்கு விடையேறி வருதல் மரபாதல் பற்றி, “விடையூர் வரதன்” என்று புகழ்கின்றார். திருவொற்றியூரிற் கோயில் கொண்டிருத்தலால் “ஒற்றி வாணன்” என உரைக்கின்றார். மலிகடல் - பால் நிறைந்த கடல்; கடையப்பட்டது அது என்பர். விடத்தை உண்டதனால், “விடமாம் ஊணன்” எனப் புகல்கின்றார். ஊர் தொறும் உள்ள கோயில்களையே யன்றித் தன்பால் உண்மை யன்புடைய அடியார் உள்ளத்தும் இருப்பவனாதலால், சிவனை “அடியேம் உளத்தன்” என்று குறிக்கின்றார். அனைத்தண்டங்களையும் அவற்றின் உள்ளும் புறம்புமாய பொருள்கள் அனைத்தையும் படைத்துத் தனக்கு உடைமையாகக் கொண்டவனாதல்பற்றி, “எல்லாம் உடையன்” என்றும் இசைக்கின்றார். திருமுன் நின்று உள்ளத்தால் எண்ணி மெய்யால் வணங்கி வாயால் வழுத்துதல் முறையாதலின், அவ்வாறு செய்யாதார் செய்வன யாவும் பயனில் செயலாதலால், “உள்கி நின்றேத்தா வீணர்” என்றும், அறியாமைக் கிடனாய் யார்க்கும் பயன்பட வாழாதாரை “மடமை விழலர்” என்றும், வழியில் எதிர்ப்பட்டாரை மரண நிலைக்குள்ளாக்கிப் பொருள்வேட்டம் புரியும் கொடியரை, “மரட்ட வேடுவர்” என்றும் இயம்புகின்றார். மரண் விளைவித்தலை யுடைய வேடுவரை, “மரட்ட வேடுவர்” என்கிறார். மரண் விளைவிப்பது மரட்டு; மரண் - மரணம். “மரணாய மன்னுயிர்கட் கெல்லாம் அரண் (திவ்ய. இயற். 1:60) என்று சான்றோர் வழங்குதலால் அறியலாம். நெஞ்சிற்கோட்ட முடையவர்களை “நெஞ்சக் கோணர்” எனவும், நூலிட்டு அறுத்தற் கமையாத மரக்கட்டைபோல நெறிப்படுத்தற் கமையாத தீயரை “முருட்டுக் குறும்பர்” எனவும் இகழ்கின்றார். சிவனை நினையாதாருட் பலர் பண்பாலும் செயலாலும் இவ்வாறு இகழத்தக்கவ ராகின்றமையின், இவர்களைக் காணநேரில் கண்கள் தாமே காண்டற்குக் கூசுகின்றன என்பாராய், “கண்டால் கூசுவ கூசுவ விழியே” என்று கூறுகின்றார். கண்டால் எனவே, காண்டல் இல்லை யென்பது துணிவாம். கூசுவ கூசுவ என அடுக்கியது பொருளொடு புணர்தலாய் இழித்தற்கண் வந்தது. விழி, “பண்மை சுட்டிய சினை நிலைக் கிளவி”யாதலின் பன்மை வினை பெற்றது. “உள்கி நின்றேத்தா” என்பதை ஏனை விழலர் முதலாயினார்க்கும் ஏற்றுக. ஏனை வருமிடங்களிலும் இதுவே கூறிக்கொள்க.
இதனால், சிவபெருமானை உள்கி நின்று ஏத்தாரைத் தொகுத்துக் கூறி அவர்களைக் காண்டற்குக் கண்கள் கூசுகின்றன என்பதாம். (1)
|