901. நாதனைப் பொதுவில் நடத்தனை எவர்க்கும்
நல்லனை வல்லனைச் சாம
கீதனை ஒற்றிக் கிறைவனை எங்கள்
கேள்வனைக் கிளர்ந்துநின் றேத்தாத்
தீதரை நரகச் செக்கரை வஞ்சத்
திருட்டரை மருட்டரைத் தொலையாக்
கோதரைக் கொலைசெய் கோட்டரைக் கண்டால்
கூசுவ கூசுவ விழியே.
உரை: எல்லார்க்கும் தலைவனும், சபையில் நடம் புரிபவனும், எத்தகையோர்க்கும் நன்மை யுடையவனும், எல்லாம் வல்லவனும், சாம கீதத்தனும், ஒற்றியூர்க்கு இறைவனும், எங்கட்குக் கேள்வனுமாகிய சிவபெருமானை ஊக்கத்துடன் நேர்நின்று ஏத்துதலில்லாத தீயவர்களையும், நரகத்தில் செக்கிலிட்டாட்டப் படுபவர்களையும், வஞ்சம் புரிந்து பிறர் பொருளைத் திருடும் கள்வர்களையும், பிறரை மருட்டிப் பொருள் கவரும் மருட்டர்களையும், திருத்தத் தீராத கோதர்களையும், கொலை செய்தற்கேற்ற கோடிய இயல்பினரையும் காண நேர்ந்தால் எம் கண்கள் கூசுகின்றன. எ.று.
நரதன் - தலைவன். பொது - மன்றம். சிவன் அம்பலக் கூத்தனாதலின், “பொதுவில் நடத்தன்” என்று புகல்கின்றார். புகழ்வார், இகழ்வார் அனைவர்க்கும் நலம் செய்வதுபற்றி, “எவர்க்கும் நல்லன்” என்று இயம்புகின்றார். “பரவுவாரையும் உடையார் பழித்திகழ்வாரையும் உடையார்” என்று ஞானசம்பந்தர் கூறுவர். வரம்பி லாற் லுடைமை அவன் இயல்புகளுள் ஒன்றென ஆகமங்கள் அறிவித்தானை “வல்லன்” என்று சொல்லுகிறார். ஒற்றி நகர்க்கண் கோயில் கொண்டிருப்பதுபற்றி, “ஒற்றிக் கிறைவன்” என உரைக்கின்றார். எம் முறையீடுகளை மறாது கேட்கும் அருட்செவியன் என்பார், “எங்கேள்வன்” என வள்ளலார் இயம்புகின்றார். உள்ளத்தால் உருகிளர்ந்தெழும் ஆர்வத்தோடு ஏத்துதல் செய்யாமை தீதாகலின், ஏத்தாதாரை, “கிளர்ந்து நின்று ஏத்தாத் தீதர்” என்று குறிக்கின்றார் தாம் செய்த குற்றத்துக்குத் தக நமன்தூதர் நரகத்திற் றள்ளிச் செக்கிலிட்டாட்டற் கமைந்தாரை “நரகச் செக்கர்” என்று வள்ளலார் எள்ளுகின்றார். இப் பெற்றியோரும் இறைவனை ஏத்துவாராயின், நரகச் செக்கரும் தடுத்தாட்கொள்ளப்படுவர் என்பாராய், “தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கிலிடும்போது தடுத்தான் கொள்வான்” (புலியூர்) என்று நம்பியாரூரர் நவில்கின்றார். நெஞ்சில் வஞ்சமும் செயலிற் கள்ளமும் உடையார், “வஞ்சத் திருட்டர்” எனப்படுகின்றனர். திருடர், திருட்டர் என்பன ஒரு பொருளன. வஞ்சமாகிய இருட்டின் கண் உறைவோர் வஞ்சத் திருட்டராவ ரெனினும் அமையும். மக்களை மருட்டித் துன்புறுத்துவோர் மருட்டராவர். திருத்தினும் திருந்தாத் தீயரை, “தொலையாக் கோதர்” என்று சொல்லுகின்றார். மனக் கோட்டம் இல்லாதவர்பால் காணப்படாத கொலைக் குற்றத்தைச் செய்வார், “கொலைசெய் கோட்டர்” எனப்படுகின்றார்கள்.
இதனால், கிளர்ந்து நின்று சிவனை யேத்தாத தீதர் முதலியோரை எடுத்துக் காட்டியவாறாம். (4)
|