பக்கம் எண் :

902.

     நம்பனை அழியா நலத்தனை எங்கள்
          நாதனை நீதனைக் கச்சிக்
     கம்பனை ஒற்றிக் கங்கைவே ணியனைக்
          கருத்தனைக் கருதிநின் றேத்தா
     வம்பரை ஊத்தை வாயரைக் கபட
          மாயரைப் பேயரை யெட்டிக்
     கொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால்
          கூசுவ கூசுவ விழியே.

உரை:

     நம்பனும், கெடாத நலமுடையவனும், எங்கள் தலைவனும், நீதிமானும், கச்சி நகர்க்கண் வீற்றிருக்கும் கம்பனும், ஒற்றியூரில் இருக்கும் கங்கை வேணியனும், கருத்தாவுமாகிய சிவபெருமானைச் சிந்தையில் எண்ணி நேர்பட நின்று ஏத்துதலில்லாத வம்பரையும், அழுக்கு நிறைந்த வாயுடையாரையும், கபடம் புரியும் மாயரையும், பேயரையும், எட்டிக்கொம்பு போல்பவரையும், பொல்லாத கொள்கையுடையவரையும் காண நேர்ந்தால், என் கண்கள் மிகவும் கூசுகின்றன. எ.று.

     நம்பன், நசையை யுணர்த்தும் நம்பு என்னும் உரிச்சொல் லடியாகத் தோன்றி யாவராலும் நச்சப்படுபவன், நச்சினார்க்கினியன் என்ற பொருள்பட வருவது; சிவனுக்கே சிறப்பாகவுரிய பெயர்களுள் ஒன்று. மூத்து விளிவில்லாமையால் கெடாத அழகு படைத்த திருமேனி யுடையனாதலால் சிவனை, “அழியா நலத்தன்” என்று அறிவிக்கின்றார். அடியே நினைந்து பரவும் பெருமக்கள் அனைவர்க்கும் தலைவனாதல் பற்றி, “எங்கள் நாதன்” என இயம்புகின்றார். நீதன் - நீதியே வுருவாயவன்; “இன்ன வுரு வின்ன நிறம் என்றறிவதே லரிது நீதி பலவும், தன்ன வுருவா மென மிகுத்த தவன்” (வைகா) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. கச்சி நகர்க்கண் சிவன் ஏகம்பன் எனப்படுவனாயினும் கம்பனென்றும் வழங்கப் படுதலுண்மையின் “கச்சிக் கம்பனை” என வள்ளலார் உரைக்கின்றார். நம்பியாரூரர், “காலகாலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே” (கச்சி) என்று பரிந்து பாடுவது காண்க. கங்கை வேணியன், கங்கையைத் தாங்கிய சடை யுடையவன், கர்த்தா என்னும் வடசொல் கருத்தன் எனத் தமிழில் வழங்கும். தமிழ்ச் சொல்லாகக் கொள்ளுமிடத்துக் கருதுவார் கருத்தில் உறைபவன் என்று பொருள்படும். புதுமைப் பொருளில் வரும் வம்பு என்னும் சொல்லடியாகத் தோன்றிய வம்பர் என்னும் இச்சொல் வீண் கலகம் விளைவிப்பவரை இந்நாளில் குறிக்கிறது; வம்பு, வீண் என்ற பொருளில் வழங்குகிறது. தீநாற்றம் உடைய வாயரை, ஊத்தை வாயர் என்பர். ஊத்தை - அழுக்கு. “ஊத்தை வாய்ச் சமண் கையர்” (சாய்க்) என்று ஞானசம்பந்தர் கூறுவர். கபடம் - வஞ்சகம். கபடமாயர் - வஞ்சிக்கும் பொய்யர்; போலிகள். பேயர் - ஆசைமிக்கு அலைபவர். எட்டிக் கொம்பர் - தொட்டாலும் கசக்கும் எட்டி மரக்கொம்பு; அதனை யாரும் விரும்புவதில்லை; ஈயா மனமுடையாரை எட்டி மரத்துக் கொப்பாக உரைப்பர். கோள் - கொள்கை, நலம் பயவாத கொள்கையுடையாரைப் “பொல்லாக் கோளர்” என்று குறிக்கின்றார்.

     இதனால், உள்ளத்திற் சிவனைக் கருதி வழிபடாத வம்பர் முதலியோரை இகழ்ந்துரைத்தவாறு.

     இவை ஐந்து பாட்டாலும் சிவனை உள்ளத்தே நினைந்து ஏத்தாதாரைக் காண நேரில் கண்கள் மிகவும் கூசும் என்ற வள்ளற் பெருமான், இனி ஐந்து பாட்டுக்களில் அந்தக்கரணங்களின் தொகுதியாகிய மனம் நடுங்கும் திறத்தை விரித்துரைக்கின்றார்.

     (5)