பக்கம் எண் :

32. அடிமைத் திறத்து அலைசல்

திருவொற்றியூர்

    சிவபரம் பொருட்டு அடிமையாம் கூறுபாட்டில் சிவனது புகழ் பாடுதல், திருவருட் செந்நெறி செல்லுதல், காம வயப்படல், அருட்பேறு வேண்டல் என்ற கூறுகளில் மனத்தை உலவவிடுவது உரைத்தலால் இப்பத்து அடிமைத் திறத்து அலைசல் எனப் பெயர் கொண்டுளது. அலைசல் - நினைந்து வருந்தல்.

    இப்பத்தின்கண், மனத்தெழும் கருத்துக்களை அந்தாதி முறையில் தொடுத்துப் பாடும் வள்ளற் பெருமான், சிவபெருமான் புகழையே பெரிதும் விரும்பி அறிவிழந்தமை கூறி, “அதனால் அப் புகழைச் சிறிதும் அறியா தொழிந்தேன்; அறிவு கொண்டு முயலினும் மூவர் திருப்பாட்டில் இசைந்து திகழும் அதனை யான் எங்ஙனம் அறிகுவேன்?” என்று சிவனை முன்னிலைப் படுத்தி, தேவர்கட்கும் முனிவர்கட்கும் தெரிவரிய நின் நிலைமையை யான் எவ்வாறு அறிய இயலும்? நின் புகழ்க்கண் ஒன்றும் நெறி வேண்டுமே, அஃது யாது? நினது புகழ் பரந்துபட்டதாகலின் அதன் கோடியளவில் ஒரு சிறு கூறும் தேவர்கள் குணித்தல் இல்லையென்பர்; அற்றாக, நின் புகழ் என் அறிவளவன்று; அதனை யுணராமல் நான் நாடி யலுத்துப் போனேன்; நின் புகழ்க்குரிய பெருமையைப் பிறர் பாலும் கற்றுக் கேட்டறியேன்; ஆயினும் நின்னையொழியப் பிற தெய்வங்களைப் பரம்பொருளாகத் தெளியேன்; என்பால் மலிந்துள்ள பிழைகளை நோக்கி என்னைக் கைவிடாமல் நினக்குரிய செம்பொருட் செந்நெறியில் என்னைச் செலுத்துக; நின்னைப் பணிதல் என் கடன். நின்னை மறந்து மகளிர் முயக்கில் வீழ்ந்து மயங்கியதனால், என் குற்றம் பற்றி நமன் தரவிருக்கும் தண்டத்தை நினையே னாயினேன். இங்ஙனமே, நமனார் தண்டனையை எண்ணாமல், துறவு நெறியை மறந்து உலக நெறியை வியந்து, வஞ்சகர் உறவு கொண்டிழிவுற்றேன்; என்போல் திருநீறுகாண விரும்பாது மதி யிழந்தவர் யாரும் இல்லை. நலமில்லாத அறிவு கொண்டே நின்னைக் கூடற்கு விழைந்தேன்; வேறு துணையின்றிக் காமக் கடலில் வீழ்ந்து யான் வருந்துவதைக் கண்டிருப்பது நின் திருவருட்கு மரபன்று; நான் அயலான் அல்லன்; நின் திருவடியே சிந்திக்கும் அடியவன்; அடியாரைக் காத்தல் நின் கடன்; என் உடற் பிணியும் உள்ளத் துயரும் போக்குக; நினது திருவருள் எனக்கு உண்மையின் யான் இறப்பும் கேடும் பிறவுமாகிய துன்பங்கட்குள்ளாகேன் என்று தெரிவிக்கின்றார்.

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

908.

     தேவர் அறியார் மால்அறியான்
          திசைமா முகத்தோன் தான்அறியான்
     யாவர் அறியார் திருஒற்றி
          அப்பா அடியேன் யாதறிவேன்
     மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே
          முதிர்தீம் பாலும் முக்கனியும்
     காவல் அமுதும் நறுந்தேனும்
          கைப்ப இனிக்கும் நின்புகழே.

உரை:

     திருவொற்றியூரிலுள்ள அப்பனே, ஞானசம்பந்தர் முதலிய மூவர் பாடிய திருப்பாட்டுக்கட்கு ஏற்புடைத்தாய்த் தீவிய பாலும், நன்கு பழுத்த முக்கனியும், பேணப்பட்ட அமுதும், நறிய தேனும் கீழ்ப்பட இனிக்கும் நின்னுடைய புகழினெல்லையைத் தேவர்கள் அறியார்; அவர்கட்குத் தலைவர்களாகிய திருமாலும் நான்முகனும் அறியாரெனின், யாவர் தாம் அறிவார்? அங்ஙனமிருக்க, அடியேன் யாதும் அறியேன். எ.று.

     மக்களின் உயர்ந்தோராதலின் தேவரைக் கூறி, அவர்களால் தொழப்படும் தேவராதலின் திருமாலையும் நான்முகனையும் எடுத்துக் கூறினார். தேவ தேவர்கள் அறியாரெனவே ஒருவரும் அறியார் என்பது பெறப்படுதலின் “யாவர் அறிவார்” என்றும், இந்நிலையில் எளியனாகிய யான் அறிவதென்பது இயலாததொன்று என்பார் “அடியேன் யாதறிவேன்” என்றும் வள்ளலார் உரைக்கின்றார். “தேவர் கோவறியாத தேவ தேவன்” (சதக) என மணிவாசகரும், “வானினுள் வானவர்க்கும் அறிய லாகாத வஞ்சர்” (செம்பொன்) என்று நாவுக்கரசரும் நவில்வது காண்க. ஒருவராலும் அறியப்படாதெனின், அப்புகழை நினைத்தலும் பேசுதலும் அமையாவே யெனின், ஞானசம்பந்தர் முதலிய மூவர் பாட்டினுள் இறைவன் புகழ் முழுதும் அமைந்துள தென்பார், “மூவர் திருப்பாட்டினுக் கிசைந்து” எனவும், அவர் பாட்டின் பொருளாய் நிறைந்து விளங்கும் நின் புகழ் இனிமை மிக்குளது என்றற்கு “முதிர் தீம்பாலும் முக்கனியும் காவல் அமுதும் நறுந்தேனும் கைப்ப இனிக்கும் நின் புகழ்” எனவும் இயம்புகின்றார். முதிர் முக்கனியும் என மாறுக; முக்கனியாவன, மாவும் பலாவும் வாழையுமாம். கைத்தல், ஈண்டுச் சுவையாற் கீழ்ப்படுதல். காவலமுது, கெடாவாறு பாதுகாத்துப் பேணப்பட்ட அமுதம் என்று கொள்க,

     இதனால், மூவர் பாட்டின் பொருளாய் இசைந்து இனிக்கும் இறைவன் புகழ் தேவ தேவர்களாலும் வேறு யாவராலும் அறியப்படாது என்பதாம்.

     (1)