பக்கம் எண் :

916.

     கடனே அடியர் தமைக்காத்தல்
          என்றால் கடையேன் அடியன் அன்றோ
     உடன்நேர் பிணியும் ஒழித்திலைஎன்
          உள்ளத் துயரும் தவிர்த்திலையே
     விடன்நேர் கண்டத் தின்னமுதே
          வேத முடியில் விளங்கொளியே
     அடன்ஏர் விடையாய் திருஒற்றி
          அப்பா உனை நான் அயர்ந்திலனே.

உரை:

     விடக்கறையால் அழுக்குற்ற கழுத்தையுடைய இனிய அமுதம் போன்றவனே, வேத முடிவில் விளங்குவதாகிய ஞான வொளியே, பாவத்தை யழிக்கும் எழுச்சி பொருந்திய விடையையுடையவனே, திருவொற்றியூரில் உள்ள அப்பனே, அடியராயினாரைக் காப்பது கடனென்றால் கடையனாகிய யானும் ஓர் அடியவ னன்றோ? உன்னை நான் மறந்ததில்லை, காண். எ.று.

     பொன் போன்ற மேனியில் கழுத்தில் உண்டாய விடக்கறை நீல நிறமுடன் அழகு செய்வது பற்றி, “விடனேர் கண்டம்” என்றும், விடமுடையனாயினும் பரவுவார்க்கு இனிய அமுதமாய்ச் சிவானந்த வாழ்வு நல்குதலால் “இன்னமுதே” என்றும் போற்றுகின்றார். வேதங்கள் பல தெய்வக் கொள்கையும், உலகியல் வாழ்வுக்கு வேண்டும் பொருட்டுணையும், பகையைத் தெறல் வேண்டும் குறிப்புமே கொண்டிருத்தலால் அவற்றின் முடியாகிய உபநிடதங்களே ஞானப்பேற்றுக்கு உரிய வாதலால் “வேதமுடி”யை விதந்து மொழிகின்றார். அவையும் பசு ஞானமாய்ப் பிரமப்பொருளும் உயிர்ப்பொருளும் ஓரினமெனக் குழறு படை செய்தலால், அவற்றின் தெளிவாய் ஒளிரும் சித்தாந்த ஞான விளக்கத்தைச் சிறப்பித்து, “வேத முடியில் விளங்கொளியே” என்று விளம்புகின்றார். “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்” என்று கொற்றவன் குடி உமாபதி சிவனார் உவந்துரைப்பர். சிவபெருமான் ஏறும் விடை பாவத்துக்குப் பகையாகிய அறவடிவிற்றாதலின் அதனை “அடல்நேர் விடை” என்று குறிக்கின்றார். திருவடிப்பேற்றை வேண்டி அதனையே பற்றாகக்கொண்டு அன்பு செய்பவர் அடியராதலின், அவர்கட்கு ஊறுண்டாகாதவாறு தாங்குதல் முதல்வனது தலையாய செயல் எனச் சான்றோர் கூறுவாராயின் என்பார், “அடியார் தமைக் காத்தல் கடன் என்றால்” என்று “மொழிகின்றார். தன்னை யடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தம் கடனாவது தான்” என்று திருநாவுக்கரசர் உரைப்பது நோக்கத் தக்கது. அடியார்களைக் காத்தல்போலத் தன்னையும் காக்க வேண்டுமென முறையிடும் வள்ளற்பெருமான், தான் கடைப்பட்ட பண்பும் செயலும் கொண்டிருப்பினும் திருவடியே சிந்தித் தொழுகும் அடியவன் என்பார், “கடையேன் அடியனன்றோ” என்று காரணம் காட்டுகின்றார். தன்னைக் காத்தல் வேண்டும் என்பவர், தன்னை வருத்தும் துயர்களையும் எடுத்துரைக்கலுற்று. “உடல் நேர்பிணியும் ஒழித்திலை என் உள்ளத் துயரும் தவிர்த்திலை” என்று தெரிவிக்கின்றார்.

     இதனால், அடியார்களைக் காத்தலைக் கடனாகக் கொண்ட பெருமானாதலால் நீ அடியனாகிய என் உடற்பிணியும் உள்ளத் துயரும் போக்கிக் காத்தல் வேண்டும் என்று கூறியவாறாம்.

     (9)