917. இலனே மற்றோர் துணைசிறிதும்
என்னே காமம் எனும்கடலில்
மலனேன் வருந்தக் கண்டிருத்தல்
மணியே அருளின் மரபன்றே
அலனே அயலான் அடியேன்நான்
ஐயாஒற்றி அப்பாநல்
நலனேர் தில்லை அம்பலத்தில்
நடிக்கும் பதமே நாடினனே.
உரை: ஐயா, திருவொற்றியூர் அப்பனே, அழகு பொருந்திய தில்லையம்பலத்தில் திருக்கூத்து இயற்றும் திருவடியையே யான் நாடுகின்றேன்; வேறு ஒரு துணையும் சிறிதும் எனக்கு இல்லை; காமம் என்று சொல்லப்படும் கடலில் வீழ்ந்து மலமுடையனாகிய யான் வருந்தக் கண்டும் நீ வாளாவிருப்பதும் என்னே? மணி போல்பவனே, அது நின் இனிய திருவருட்கு முறையன்று; யானும் அயலானல்லேன்; நினக்கு அடியவன், எ.று.
தில்லையம்பலம் பொன்னால் இயன்று அழகு மிக்குடையதாகலின், “நலனேர் தில்லையம்பலம்” என்றும், அதன்கண் கூத்தாடுகின்றானாயினும், அக் கூத்தின்கண் திருவடிகளே தாளவருதிக் கொப்ப இயங்கிப் பொலிவனவாதலின் அவற்றைச் சிறப்பித்து “நடிக்கும் பதமே” என்றும், அடைந்தோரை ஆட்கொள்ள அமைந்தது திருவடியாதலின், “பதமே நாடினன்” என்றும் இயம்புகின்றார். “தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் ஆட வெடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட் கொண்டதே” (கோயில்) என்று திருநாவுக்கரசர் விதந்தோதுகின்றார். திருவடியைத் துணையாக நாடிக் கொண்டதன்றி, வேறு எவரையும் எதனையும் எத்துணைச் சிறு போதிலும் கொண்டதில்லை என்று வற்புறுத்தும் வள்ளலார், “இலனே மற்று ஓர் துணை சிறிதும்” என்று கூறுகிறார். சிறிது என்றது காலம் குறித்து நின்றது. நுகருந்தோறும் வற்றாது வேட்கை பெருகிய வண்ணமிருத்தலால், “காமம் என்னும் கடல்” என்று சிறப்பிக்கின்றார். மலசகிதன் என்று சகலான்மாவை நூல்கள் கூறுதலால், “மலனேன்” என்றும், காம வேட்கையால் கூடலினும் ஊடல் புலவி துனிகளால் மன நோயுற்று வருந்துவதுண்மையாலும், நாளடைவில் உடல் தளர்வும் மேனி மெலிவும் நோய் வகையும் எய்துவதால் வருந்துவ துண்மையாலும் “வருந்த” என்றும், ஒருவர் துன்புறக் கண்டு வாளா இருத்தல் அருளாளர்க்கு இயல்பன்மையால், “கண்டிருத்தல் அருளின் மரபன்று” என்றும் விளக்குகின்றார். இன்னருட்கு மரபு அன்று என்பது “அருள் இன் மரபன்று” என வந்தது. மாணிக்க மணிபோலும் செம்மேனி யம்மானாதலால் சிவனை “மணியே” என்று பரவுகின்றார்.
இதனால், அம்பலத்தில் ஆடும் திருவடியே நாடி அதனையே துணையென்று கொண்டிருக்கும் அடியவர் காமக் கடலில் வீழ்ந்து வருந்தக் கண்டிருத்தல் கூடாதென்றவாறாம். (10)
|