பக்கம் எண் :

34. அவல மதிக்கு அலைசல்

திருவொற்றியூர்

    அவல மதிக்கு அலைசல் என்பது மதி வலமின்மைக்கு வருந்துதல்; அஃதாவது, அறிவு வலி யில்லாமையால் காமக்களியாட்டிற் கிரையாகி மன நோய் கொண்டு செய்தக்க செய்யாமை நினைந்து வருந்துவது. மதிவலியுடையவர் திருவருள் பெற்று இன்புறுவதும், இறைவன் திருவடியைப் பலரும் உணர்ந்து பரவுதற்காக அடியார்கள் வாழ்வதும் காண வள்ளற்பெருமானுடைய அருட்பார்வை மக்களுலகை நோக்குகிறது. நுண்ணறிவும் திண்ணிய மனமுமுடையாரும் காமநுகர்ச்சிக்கு எளியராய் விடுவது வள்ளலார் மதியைத் தளர்விக்கிறது. அவர்கள் சிவனது பொருள்சேர் புகழை ஏத்துகின்றார்கள் இல்லை. தகுவன தகாதன வெனச் செய்வனவற்றைத் தெரிந்துகொள்வதில்லை. சிவனடியையோ சிவத்தொண்டையோ சிந்திப்பதில்லை.

    இக் காட்சிகள் வள்ளற்பெருமான் மனத்தை அலைத்தமையின், இப் பத்தின்கண் அவற்றை அந்தாதித் தொடையில் அமைத்துப் பாடுகின்றார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

930.

     மண்ணை மனத்துப் பாவியன்யான்
          மடவார் உள்ளே வதிந்தளித்த
     புண்ணை மதித்துப் புகுகின்றேன்
          போதம் இழந்தேன் புண்ணியனே
     எண்ண இனிய நின்புகழை
          ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
     தண்நல் அமுதே நீஎன்னைத்
          தடுத்திங் காளத் தக்கதுவே.

உரை:

     பேய்போல் அலையும் மனத்தையுடைய பாவியாகிய யான் மகளிர் உடலில் இருந்த அளிந்த புண்போன்ற நிதம்பத்தை பொருளாகக் கருதி, அவர் உறையும் இடத்திற்குட் புகுந்து அறிவிழந்தேன்; நினைத்தற்கினிமை தரும் நின்னுடைய புகழை ஏத்தாமல் ஒதிமரம்போல் இருக்கின்றேன்; தண்ணிய நல்ல அமுது போன்ற பெருமானே, இப்போது, நீ என்னைத் தடுத்தாட்கொள்வது தக்கதாகும். எ.று.

     மண்ணை - பேய்; கூர்த்த மதி யின்மையுமாம், பேய் போலும் மனத்தால் அமைதியின்றி அலைந்து பல்வகைப் பாவங்களைச் செய்துள்ளேன் என்பாராய், “மண்ணை மனத்துப் பாவியன் யான்” என இயம்புகின்றார். அளிந்த புண் - தோல் விலகிச் சிவந்த தசை வெளிப்பட்டுத் தோன்றும் புண், மனையின் உட்புறத்தே மகளிர் உறைதலின் அங்கே சென்று சேர்வதை “மடவார் உள்ளே புகுகின்றேன்” என்றும், பெண்மைக் குறியாகிய நிதம்பத்தை “அளிந்த புண்”ணென்றும் கூறுகின்றார். புண்ணென்று கருதாமல் போகநிலையமாக மதித்து நல்லறி விழந்தமை தோன்றப் “போதம் இழந்தேன்” என்று புகல்கின்றார். நல்வினைப் பயனுருவே சிவமாதலால், “புண்ணியனே” எனவும், எண்ணுந்தோறும் எண்ணுவார் எண்ணத்தில் இன்பம் ஊறுதலால், சிவனது புகழை “எண்ண வினிய நின் புகழை” எனவும், அத்தகைய புகழை யேத்திப் பரவுதலின்றி ஒதிமரம்போல் உள்ளேன் என்று நொந்து கூறலுற்று, “ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்” எனவும் உரைக்கின்றார். மண்ணிற் பிறந்து மங்கையர் முயக்கில் மயங்கிச் சிவனை மறந்து கெடுதற் பொருட்டு வாழ்வு அளிக்கப்படவில்லை யாதலால் உண்மை யுணர்ந்து உய்தி பெறற்குத் தடுத்தாட் கொள்க என வேண்டுவாராய், “நீ என்னைத் தடுத்து இங்கு ஆளத் தக்கது” என்று கூறுகின்றார். “மையல் மானுடமாய் மயங்குவழி, ஐயனே தடுத்தாண்டருள் செய்” (தடுத்) என்று நம்பியாரூரர் வேண்டிக்கொண்டதைச் சேக்கிழார் உரைப்பது காண்க.

     இதனால், மகளிர் முயக்கில் அறிவிழந்து இறைவனை யேத்தாது கெடுவேனைத் தடுத்தாட்கொள்க என வேண்டியவாறாம்.

     (1)