பக்கம் எண் :

931.

     தக்க தறியேன் வெறியேன்நான்
          சண்ட மடவார் தம்முலைநோய்
     துக்கம் அதனைச் சுகம்என்றே
          துணிந்தேன் என்னைத் தொழும்பன்எனில்
     மிக்க அடியார் என்சொல்லார்
          விண்ணோர் மண்ணோர் என்புகலார்
     செக்கர் நிறுத்துப் பொன்மேனித்
          திருநீற் றொளிசேர் செங்கரும்பே.

உரை:

     சிவந்த நிறமுடைய பொன் போன்ற மேனியில் திருநீற்றின் ஒளி விளங்கும் செங்கரும்பு போன்ற சிவபெருமானே, தக்கதிது, தகாததிது என்று தெரிந்துணரும் அறிவில்லாத வெறுவியனாகிய யான், புலக்கும் மகளிருடைய முலையைத் தடவித் தழுவுதலால் உண்டாகும் துக்கத்தைச் சுகமென மாறாய்த் துணிந்து ஒழுகுகின்றேன்; அத்தகைய என்னையும் அடியான் என்று சொன்னால், ஒழுக்கத்தால் உயர்ந்த மெய்யடியார்கள் என்ன சொல்ல மாட்டார்கள்? ஏனை விண்ணவரும் மண்ணவரும் யாது கூற மாட்டார்கள்? எல்லாம் சொல்லி யேசுவார்க ளன்றோ? எ.று.

     நலமுடைமையால் இது செயத்தக்கது, தீதுடைமையால் இது தகாதது எனப் பகுத்துணரும் அறிவுதான் மக்களுயிர்க்கு உள்ளீடு; அஃது இல்லாதவன் மனவுணர்வை யிழந்த வெறுவியனாதலால், “தக்க தறியேன் வெறியேன் நான்” என்று சாற்றுகின்றார். அதனால் அவன் உள்ளக முற்றும் காமவேட்கையே நிறைந்து பிறவற்றை எண்ணாவாறு செய்தல் கண்டு, “சண்ட மடவார் தம் முலைதோய் துக்கமதனைச் சுகமென்றே துணிந்தேன்” எனச் சொல்லுகின்றார். சண்டமடவார் - எடுத்தற்கெல்லாம் சினங்கொண்டு பிணங்கும் மகளிர், முலைதோய் துக்கம் - முலை தோய்வதால் உண்டாகும் சோர்வும் துன்பமும். துக்கத்தை மயக்க வுணர்வால் சுகமென்று கொண்டேன் என்பார், “துக்கமதனைச் சுகம் என்றே துணிந்தேன்” என வுரைக்கின்றார். தொழும்பர் - தொண்டு புரியும் அடியர். இறைவன் படைத்தளிக்கும் உலகில் அவன் தந்த உடலோடு கூடிய வாழ்வு பெற்றவர் அனைவரும் அப் பெருமானுக்கு அடிமையுறுகின்றனர் என நூல்கள் கூறுவது பற்றி, “என்னைத் தொழும்பன் எனில்” என உடன்படாதார் போன்று மொழிகின்றார். மிக்க அடியார், அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த அடியார்கள், அறிவு ஒழுக்க மின்மை கண்டு இகழ்வ ரென்பார், “மிக்க அடியார் என் சொல்லார்” என்றும், ஏனை விண்ணவரும் மண்ணவரும் தம்மொடு சேரா வகை விலக்கி யேசுவர் என்பது புலப்பட “விண்ணோர் மண்ணோர் என் புகலார்” என்றும் இயம்புகின்றார். செக்கர் நிறம் - சிவப்பு நிறம். பொன் போன்ற திருமேனியில் வெண்ணீறணிந்திருப்பது பற்றி, “பொன்மேனித் திருநீற்றொளி சேர் செங்கரும்பே” என்று தெரிவிக்கின்றார்.

     இதனால், மகளிர் முயக்கமே சுகம் எனக் கருதி யொழுகும் என்னைச் சிவனுக்கு அடியன் என்றால் உலகம் கொள்ளாதென உரைத்தவாறு.

     (2)