932. கரும்பே ஒற்றி யூர் அமர்ந்த
கனியே உன்தன் கழல்அடியை
விரும்பேன் அடியார் அடித்தொண்டில்
மேவேன் பொல்லா விடமனைய
பெரும்பேய் மாதர் பிணக்குழியில்
பேதை மனம்போந் திடச்சூறைத்
துரும்பே என்னச் சுழல்கின்றேன்
துணையொன் றறியேன் துனியேனே.
உரை: கரும்பு போல்பவனே, திருவொற்றியூர்க்கண் விரும்பியிருக்கின்ற கனி போல்பவனே, உன்னுடைய கழலணிந்த திருவடியை விரும்பாமலும், அடியார்கட்குச் செய்யத்தக்க அடித்தொண்டை நயவாமலும், பொல்லாத நஞ்சுபோன்ற பெரும் பேய்த்தன்மை வாய்ந்த மகளிரது குறியாகிய பிணக்குழியில் பேதைமை யுடைய என் மனம் தோய்ந்து சூறைக் காற்றிலகப்பட்ட துரும்புபோலச் சுழல்கின்ற யான் துணையாவ தொன்றும் அறியேனாய்த் துனிகொண்டு வருந்துகின்றேன். எ.று.
கரும்பு போல் இனிப்பது பற்றிக் “கரும்பே” என்கின்றார்; கனிபோல் மகிழ்வித்தலால் கனியென்றும் சிவபெருமானைப் பரவுகின்றார். மகளிர் அடி வருடுதலிற் பெறும் இன்பத்தால் சிவன் திருவடியின் சிறப்பை விரும்பா தொழிந்தமையின், “உன் கழலடியை விரும்பேன்” எனவும், மகளிர் மனம் மகிழத்தக்க தொண்டு செய்தற்கண் சென்ற வேட்கை சிவனடியார்கட்குச் செய்தற்குரிய திருத்தொண்டிற் செல்லாமை பற்றி “அடியார் அடித்தொண்டில் மேவேன்” எனவும் உரைக்கின்றார். கழலா வினைகளைக் கழற்றும் திருவடியென்றற்குக் “கழலடி” என்று புகழ்கின்றார். “கழலா வினைகள் கழற்றுவ கால வனம் கடந்த, அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே” என்பர் திருநாவுக்கரசர். அடியார்க்குச் செய்யும் திருவடித் தொண்டு, “அடித்தொண்டு” எனப்படுகிறது. மேவுதல் - விரும்புதல். பொல்லா விடமனைய மாதர் - பெரும்பேய் மாதர் என இயையும். மந்திர மருந்துகளால் தீரும் விடம் போலாது உண்டாரை யுயிர் போமளவும் விடாது நின்று வருத்தும் விடமாதலால், “பொல்லா விடமனைய மாதர்” என்றும், கோட்பட்டாரை வேட்கைவயத்தராக்கி அலைவிக்கும் கொடுமை யுடைமை நோக்கி, “பெரும்பேய் மாதர்” என்றும், பெண்குறியின் தீநாற்றம் கண்டு, அதனைப் “பிணக்குழி” யென்றும் இகழ்கின்றார். மாதராகிய பிணக்குழி யென்றும் இயைந் துரைப்பர். மாதர்பாற் கொண்ட காமவிச்சையால் மெய்யாய பயனின்றி நோயே எய்துதலின், மனத்தை “ஏதங்கொண்டு ஊதியம்” இழக்கும் “பேதை மனம்” என்றும், மேலும், ஆசை மிக்கு ஓய்வின்றி அலைதல் நோக்கி, “சூறைத் துரும்பே என்னச் சுழல்கின்றேன்” என்றும் சொல்லி, இத் துன்பச் சூழலினின்றும் உய்ந்து போதற்குத் துணை காண முயன்று ஒன்றும் தோன்றாமையால் கையற்று, “துணையொன்று அறியேன்” எனவும், அறியாமைக்குத் துணை செய்வனவற்றின் மேல் உண்டாய வெறுப்புக்குக் காரணம் என்பார், “துனியேன்” எனவும் மொழிந்து துயர்கின்றார்.
இதனால், மகளிர் உறவில் தோய்ந்து மதி தளர்ந்து மனவலியிழந்து சிவன் திருவடியில் விருப்பின்றியும், அடியார் அடித் தொண்டில் துனியும் கொண்டு துயருறும் திறம் கூறியவாறாம். (3)
|