பக்கம் எண் :

94.

    தீராத துயர்க் கடலிலழுந்தி நாளும்
        தியங்கியழு தேங்குமிந்தச் சேய்க்கு நீகண்
    பாராத செயலென்னே யெந்தாய் எந்தாய்
        பாவியென விட்டனையோ பன்னாளாக
    ஏராய வருள் தருவா யென்றே யேமாந்
        திருந்தேனே யென்செய்கேன் யாருமில்லேன்
    சீராருந் தணிகைவரை யமுதே யாதி
        தெய்வமே நின் கருத்தைத் தெளிந்திலேனே.

உரை:

     சிறப்புப் பொருந்திய தணிகை மலையில் எழுந்தருளும் அமுது போல்பவனே, ஆதியாகிய தெய்வமே, நீங்குதலில்லாத துயரமாகிய கடலில் மூழ்கி நாடோறும் மதி மயங்கி ஏங்கி யழுகின்ற சேயாகிய என்னை நீ கண்ணெடுத்துப் பார்க்காமல் இருக்கின்ற செய்கை தான் என்னவோ? எந்தையே, இவன் ஒரு பாவியென இகழ்ந்து கைவிட்டு விட்டாயோ, பல நாட்களாய் உனது அழகிய திருவருளை நல்குவாய் என எண்ணியிருந்து ஏமாந்து போனேன்; யான் யாது செய்ய இயலும்; துணை யாவார் ஒருவரும் இல்லை; நினது திருவுள்ளமும் இன்னது என்று அறிகிலேன், எ. று.

     அமுது போல்வானை அமுது என்கின்றார். “மூதக்கார்க்கு மூதக்கவன்” எனப்படுதலின் “ஆதி தெய்வமே” என்று கூறுகிறார். கருத்தறியாமல் ஒருவர் முன் சென்று ஒன்றை வேண்டுதல் நலம் பயவாதாகலின் “நின் கருத்தைத் தெளிந்திலேனே” என வுரைக்கின்றார். நீங்காமல் நின்று வருத்தும் வாழ்க்கைத் துன்பத்தைத் “தீராத துயர்க் கடல்” என்றும், நாடோறும் வருத்துவதால் அறிவு கலங்குவதும் மனச் சோர்வால் ஏங்கி யழுவது மல்லது வேறே ஒன்றும் செய்ய மாட்டாமையால் “நாளும் தியங்கி அழுது ஏங்கும் இந்தச் சேய்க்கு நீ கண் பாராத செயல் என்னே” என்றும் உரைக்கின்றார். துயர் நீங்காமையால் முருகப்பெருமான் அருட்கண் கொண்டு நோக்கவில்லை என்று நினைந்து, “நீ கண் பாராத செயல் என்னே” என முறையிடுகின்றார். ஒன்றும் செய்ய மாட்டாமை தோன்றத் தம்மைச் சேய் என்று குறிக்கின்றார். சேய்-சிறு குழந்தை. தம்மைச் சேய் என்றலின் இறைவனை “எந்தாய் எந்தாய்” என்று கூறுகிறார். எவ்வுயிரையும் ஒக்கப் பார்க்கும் இன்பத்தாய் போன்ற பெருமான் கண்ணெடுத்துப் பார்க்காமைக்குக் காரணம் தம்பாலுள்ள பாவம் எனக் கருதுதல் தோன்றப் “பாவியேன் என விட்டனையோ” என வினவுகின்றார். துன்பம் வருத்துந் தோறும் அருளாளனாதலால் இறைவன் நீக்கி விடுவன் என எண்ணியிருந்ததும், துன்பம் நீங்காமல் வருந்தியதும் புலப்படப் “பன்னாளாக ஏராய அருள் தருவாய் என்று இருந்து ஏமாந்திருந்தேன்” என இயம்புகிறார். இருந்து என்பது பிரித்துக் கூட்டப்பட்டது. நின்னையன்றி என் துயரை நீக்கி யருள்பவர் வேறு எவரும் இலர் என்பாராய், “என்செய்கேன் யாரும் இல்லேன்” என விளம்புகிறார்.

     இதனால் பன்னாள் துயருற்றுத் திருவருளை எதிர் நோக்கி ஏமாந்து போனது கூறிக் குறை யிரந்தவாறாம்.

     (2)