பக்கம் எண் :

947.

     அன்று நீ அடிமைச் சாசனம் காட்டி
          ஆண்டஆ ரூரனார் உன்னைச்
     சென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச்
          சென்றநின் கருணையைக் கருதி
     ஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண்
          ஒற்றியூர் அண்ணலே உலகத்
     தென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன்
          என்தனைக் கைவிடல் இனியே.

உரை:

     ஒற்றியூர்ப் பெருமானே, அந் நாளில் அடிமை யோலை காட்டித் தடுத்தாட் கொண்ட நம்பியாரூரர் உன்னைப் பரவையார் மனைக்குத் தூது சென்றருள்கவென வேண்டிக்கொண்டதைப் பார்த்து மனமிரங்கிச் சென்ற நின்னுடைய அருணலத்தை ஒன்றியிருந்து நினைக்குந்தோறும் என் உள்ளம் உருகுகின்றது; உலகியல் மயக்கில் உழப்பவ னெனினும், யான் நினக்கு அடியனாதலால், இப்பொழுது என்னைக் கைவிடல் வேண்டா. எ.று.

     நம்பியாரூரைத் தடுத்தாட் கொண்ட நாளை “அன்று” என்று குறிக்கின்றார். அடிமை யோலை காட்டி யாட்கொண்ட செய்தியை, “அன்று வந்தெனை யகலிடத்தவர் முன் ஆளதாக வென்றாவணம் காட்டி நின்று வெண்ணெய் நல்லூர்மிசை ஒளித்த நித்திலத் திரள்தொத்தினை” (கோலக்கா) என்று நம்பியாரூரர் உரைப்பது காண்க. திருவாரூரில் பரவையார் பிணக்கம் தீர்த்தல் வேண்டி நம்பியாரூரர், “நாயன்நீரே நான் உமக்கிங் கடியனாகில் நீர் எனக்குத் தாயின் நல்ல தோழருமாம் தம்பிரானாரே யாகில், ஆயவறிவுமிழ்ந் தழிவேனயர்வு நோக்கியவ்வளவும், போயிவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத்தாரும் என” வேண்டியதையும், வேண்டுகோட் கிரங்கி, “துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதனாகி இப்பொழுதே, பொன் செய்மணிப் பூண் பரவை பால் போகின்றோம்” என (ஏயர். 328-9) மொழிந்ததையும் சேக்கிழாரடிகள் உரைப்பது காண்க. தூது சென்றருளிய பேரருட்செயல் நல்லறிவுடையோர் எவருடைய உள்ளத்தையும் வியப்பில் ஆழ்த்துதலொருபுறமிருக்க, வள்ளலாரது அன்புள்ளத்தைச் சிவநினைவில் ஒன்றுவித்து நீராய்உருக்கிவிட்டமைய, “ஒன்று தோறுள்ளம் உருகுகின்றனன் காண்” என விளம்புகிறார். உலக வாழ்க்கையின் நிலையாமையும் துன்ப மிகுதியும் பிறவும் அதன்பால் அறிவுடையோர்க்கு வெறுப்புத் தோற்றுவித்துத் துறவு நெறிக்கண் செலுத்துமாயினும், அவ்வாழ்க்கையில் இடையிடையே தோன்றும் செல்வமும் பெருமையும் புகழும் நல்கும் இன்பம் அவ்வறிவை மறித்து மயக்கி உலகியலையே காமுறச் செய்தலால், “உலகத் தொன்றுமால் உழந்தேன்” என்றும், உடல் கருவி கரணங்களைத் தந்து அறிவு பெறுவித்தும், உற்றவிடத்து இருள்நீக்கி அருளொளி காட்டியும் ஆட்கொள்ளப்படுவது உணரப்படுதலால், “அடியனேன்” என்றும், ஆதலால் என்னைக் கைவிடல் கூடாது என்றற்கு “என்றனைக் கைவிடேல் இனியே” என்றும் இசைக்கின்றார்.

     இதனால், நம்பியாரூரர் பொருட்டுத் தூது சென்றருளிய திறம் நினைந்து, தன் மனம் உருகும் இயல்பு கூறித் தானுமோர் அடியனாதலால் கைவிடல் வேண்டா எனக் கேட்டுக்கொண்டவாறாம்.

     (7)