36. அருள்திறத்து அலைச்சல்
திருவொற்றியூர்
அஃதாவது
திருவருட் பேற்றுக்குரிய செயற்கூறுகள் பலவும் நினைந்து அவற்றைச் செய்து சிவம் பெறும்
வாய்ப்புத் தனக்கு எய்துமோ என எண்ணி வருந்துவது. இதன்கண் சிவனை வாழ்த்துவதும், திருவுருவை
மனத்தின்கண் எழுதுவதும், பாடுவதும், பண்பொருந்த இசைப்பதும், சொன்மாலை தொடுத்தணிதலும்,
அவன் புகழ் கேட்க விரும்புவதும், திருவுருவைக் காண விழைவதும், திருவுருவில் நஞ்சணிந்த கருத்தும்,
சடையிற் சூடிய பிறையின் நிலவொளியும், மேனியிற் கிடந்தொளிரும் வெண்ணீற்றின் விளக்கமும்,
ஊரும் விடையின் நலமும், கையிலேந்தும் மழுப்படையின் மாண்பும், அம்பலத்தாடலும் ஆகியவற்றை
நினைந்து பரவுவதும், திருவடியைச் சிந்திப்பதும் மலர் சொரிந்து போற்றுவதும், திருமால்
கண்ணிடந் தருச்சித்ததும், முந்தையோர் போலத் திருவடி சேர விழைவதும், சேர்தற்குரிய
திருவருளையும், பெறப்படும் ஆனந்தத்தையும், அதனுள் அழுந்திப் பெறும் சிவபோக நித்திரையையும்
மெய்யடியார் சார்பையும் பாராட்டுவதும், கருத்து முற்றுவிக்கும் திறமும், சிவபெருமானது
வள்ளன்மையும், திருவடி நீழலின் சிறப்பும் அழகுறப் பாடப்படுகின்றன. பாட்டுக்கள் யாவும்
வெண்டளை கொண்ட கொச்சக ஒருபோகு என்ற யாப்புவகையில் அமைந்து பாடுவார் கேட்பார் பொருள்
காண்பார் அனைவர் உள்ளங்களையும் நீராய் உருக்குகின்றன.
வெண்டளைக் கொச்சக ஒருபோகு 951. நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றிஅப்பா உன்னுடைய
மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.
உரை: தேன் மணம் கமழும் கொன்றையும் கங்கையாறும் கொண்ட சடையையுடைய தலைவனே, விடக்கறை பொருந்திய அழகிய நீலநிறக் கழுத்தையுடைய பெருமானே, தேன் துளிக்கும் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூர் அப்பனே, வேதங்கள் பரவும் உன்னுடைய திருவடிகளை வாய் நிறைய வாழ்த்தா தொழிவேனோ, இல்லை. எ.று.
தேன் நிறைந்த பூவாதலால், “நறை மணக்கும் கொன்றை” யென்று சிறப்பிக்கின்றார். கடல் விடத்தை யுண்டதனால் நீலநிறக் கறை யுற்றதாயினும் அருட் செல்வமாகிய திருவுடைமை புலப்படப் பொலிவதால், “கறை மணக்கும் திருநீலகண்டப் பெருமானே” என்று பரவுகின்றார். உறை - துளி. வேதங்கள் போற்றிப் புகழும் திருவடியாதலின், “மறை மணக்கும் திருவடி” என்றும், அத் திருவடிகளை வாழ்த்துவதைவிட வாயாகிய உறுப்புக்கு நலம் வேறே இன்மைபற்றி “வாய் நிரம்ப வாழ்த்தேனோ” என்றும் உரைக்கின்றார்.
இதனால், திருவடியை வாழ்த்துதலினும் வாய் பெறும் பேறு வேறு இல்லை என்பதாம். (1)
|