பக்கம் எண் :

952.

     அலைவளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்திநிதம்
     தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய் ஆளுடையாய்
     உலைவளைக்கா முத்தலைவேல் ஒற்றியப்பா உன்னுடைய
     மலைவளைக்கும் கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனோ.

உரை:

     அலை யெழுந்து வளைந்து விழும் பாற்கடலிடத்தவனான திருமாலும் தாமரை மேல் இருக்கும் பிரமனும் நாளும் தலைவணங்கி வாழ்த்தும் செந்தாமரை போலும் திருவடிகளை யுடையவனே, அன்பு செய்பவரை ஆட்கொள்பவனே, உலைக்களத்திற் காய்ச்சி வளைத்தல் இல்லாத சூலப்படை யேந்தும் ஒற்றியூர் அப்பனே, உனது மலையை வில்லாக வளைக்கும் கைவண்மையை வாழ்த்தா தொழிவேனோ, இல்லை. எ.று.

     பால் நிறைந்ததாயினும் கடலாதலின் அதன்கண் அலைகள் எழுந்துயர்ந்து வளைந்து வீழ்தல் இயல்பாதலின், “அலைவளைக்கும் பாற்கடல்” என்றும், அதனைத் தனக்கு இடமாக வுடையனாதலின் திருமாலைப் “பாற்கடலான்” என்றும், தாமரையில் உறைதலால் பிரமனைத் “தாமரையான்” என்றும், அவர்கட்கெல்லாம் முழுமுதலாதலால், சிவன் திருவடியை அவர்கள் நாடோறும் தலை குனிந்து வாழ்த்தி வணங்குதல் தோன்ற, “வாழ்த்தி நிதம் தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய்” என்றும் இசைக்கின்றார். அன்பு செய்வார் யாவாராயினும், வேண்டுவன நல்கி ஆட்கொள்ளுதல் சிவனதியல்பாதலால் “ஆளுடையாய்” என மொழிகின்றார். “சடைமுடி யண்ணலார் எம்மை ஆளுடைய எம்மடிகள்” (மேலைத் திருக்காட்டு) என ஞானசம்பந்தரும், “பிரியா துள்கிச் சீரூர்ந்த அன்பராய்ச் சென்று முன்னடி வீழும் திருவினாரை, ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்” (புலியூர் சிற்றம்) என்று நம்பியாரூரரும் நவில்வது காண்க. மக்களேந்தும் படைபோலக் கொல்லர் உலைக்களத்திற் காய்ச்சிச் செய்யப்படுவதன்று சிவபெருமானுடைய சூலப்படை யென்பார், “உலை வளைக்கா முத்தலை வேல் ஒற்றியப்பா” என்று விளக்குகின்றார். புரம் எரிக்கச் சென்ற காலை மேரு வரையை வில்லாக வளைத்துக்கொண்ட குறிப்புத் தோன்ற, “மலை வளைக்கும் கைம்மலர்” என்று கை வலிமையைக் குறிக்கக் கருதிய வள்ளலார், அதனினும் வேண்டுவார்க்கு வேண்டுவதீயும் கைவண்மையைச் சிறப்புற எடுத்துரைப்பாராய், “கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனே” என்று கூறுகின்றார்.

     இதனால், சிவனது கைவண்மையை விதந்து புகழ்ந்தவாறாம்.

     (2)