பக்கம் எண் :

25. திருமுன் விண்ணப்பம்

    அஃதாவது, இறைவன் திருமுன்பு தமது விழைவினை எடுத்துரைத்தலாகும். இதன்கண், எடுத்து நிற்கும் இவ்வுடம்பை அழியா உடம்பாக்குதல் வேண்டுமென விண்ணப்பிக்கின்றார். அழியும் இயல்பினதாகிய உடம்பு திருவருள் ஞானப் பேறு எய்துதற்கு முன் நிலைபேறின்றிக் கெடுவது நினைந்து இவ்விண்ணப்பம் செய்யப் பெறுகின்றது.

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3720.

     மாழை மாமணிப் பொதுநடம்
          புரிகின்ற வள்ளலே அளிகின்ற
     வாழை வான்பழச் சுவைஎனப்
          பத்தர்தம் மனத்துளே தித்திப்போய்
     ஏழை நாயினேன் விண்ணப்பம்
          திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும்
     கோழை மானிடப் பிறப்பிதில்
          உன்னருட் குருஉருக் கொளும்ஆறே.

உரை:

     பொன்னாலும் மணிகளாலுமாகிய அம்பலத்தில் நின்றாடுகின்ற பரமானாகிய வள்ளலே! வாழையினுடைய தேன் கனிய அளியப் பழுத்த வாழைப்பழம்போல அன்பர் மனத்தின்கண் நின்று இனிமைசெய்கின்ற பெருமானே; ஏழை நாய் போன்ற அடியேன் செய்கின்ற விண்ணப்பத்தைத் திருச்செவியில் ஏற்றுக் கோழைத் தன்மை பொருந்திய மக்கட் பிறப்பாக இதனைக் கொண்டு உனது அருளுருவாய குரு வடிவை அடியேன் கொள்ளும் நெறியை அருளிச் செய்ய வேண்டும். எ.று.

     மாழை - பொன். பொது - அம்பலம். வாழைப்பழம் முற்றக் கனிந்து குழைந்த நிலையினைப் புலப்படுத்த, “அளிகின்ற வாழை வான்பழம்” எனக் கூறுகின்றார். மெய்யன்பர் சிந்தைனையில் தேனூற நிற்கின்றான் எனச் சான்றோர் உரைப்பதை நம்மனோர் தெளியப் புரிந்து கொள்ளுமாறு தெரிவிக்கின்றாராதலால், “வாழை வான்பழச் சுவை எனப் பத்தர் தம் மனத்துளே தித்திப்போய்” எனக் கூறுகின்றார். “தேனாய் இன்னமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான்” என்று மாணிக்கவாசகரும் உரைப்பது காண்க. தமது கீழ்மை நிலையைப் புலப்படுத்தற்கு “ஏழை நாயினேன்” என இயம்புகின்றார். நிலையில்லாத தன்மையால் மக்கள் பிறப்பு அச்சம் நிறைந்ததாகையால், “கோழை மானிடப் பிறப்பு” எனக் குறிக்கின்றார். குரு வடிவம் திருவருள் ஞானத் திருவுருவம் ஆதலின் அதனை இப்பிறப்பு நிலையின்றிக் கெடுவதன் முன் பெறுதல் வேண்டுமென்ற ஆசை மிகுதி புலப்பட, “பிறப்பிதில் உன்னருட் குரு உருக்கொளுமாறு அருள் செயல் வேண்டும்” என விண்ணப்பிக்கின்றார்.

     இதனால், குருவின் ஞானத் திருவுருவத்தை இப்பிறப்பிலேயே பெறும் நெறியைத் தெரிவிக்க வேண்டியவாறாம். இனி வரும் பாட்டுக்களிலும் இதுவே கருத்தாகக் கொள்க.

     (1)