பக்கம் எண் :

4110.

     நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
          ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
     ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
          ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
     தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
          தேகமும்உள் உயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
     வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
          வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.

உரை:

     நான் எனவும், சிவம் எனவும் பிரித்தறிய மாட்டாத வகையில் ஞான வடிவமாய் விளங்கும் சிதாகாசத்தின் நடுநிலையாய் விளங்கும் பரம்பொருளே! உடம்பென்றும் உயிரென்றும் கருதாமல் இரண்டினும் முழுதும் ஒருதன்மைத்தாகிய திருவடிவத்தை என்பால் மகிழ்ந்தளித்த தலைவனே! தேன் எனவும், கரும்பின் சாறெனவும் சொல்லுதற்கரியதாய் என் மனமும் உடம்பும், உடம்பினுள் நிலவும் உயிருணர்வும் ஒருங்கு இனிக்கும் சுவையாகியவனே! வானம் என்றும் அங்கு நிலவும் ஒளி யென்றும் பிரித்தறிய மாட்டாத சபையின்கண் திருக்கூத்தினையாடுகின்ற அருளரசே! என்னுடைய சொன் மாலையையும் ஏற்றருளுவாயாக. எ.று.

     ஞானாகாசத்தில் தோய்ந்த ஆன்மா தன் தன்மை யிழந்து சிவமாந் தன்மை எய்தி ஒன்றினொன்று தனித்தனியே காண மாட்டாத நிலைமையை அடைவது புலப்பட, “நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடுநிலையே” என்றும், உடம்பும் உயிரும் வேறு வேறாகவும், வேற்றுமை கருதாது சிவமாந் தன்மையுற்றுச் சிவானந்த ஞான வடிவு பெறுதலால், “ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே” என்றும் இயம்புகின்றார். உடம்பும், உயிரும், உயிருணர்வும் வேறு வேறு நிலையினவாகவும் எல்லாம் ஞான வின்ப வடிவம் பெற்றுச் சிறக்குமாறு விளங்க, “தேன் என்றும் கரும்பு என்றும் செப்பரிதாய் மனமும் தேகமும் உள்ளுயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே” எனத் தெரிவிக்கின்றார். தில்லையம்பலம் ஞான வானம் என்றும், சிவப்பிரகாசத் தனி வெளி என்றும் பெரியோர்களால் போற்றப்படுவதால், “வான் என்றும் ஒளி என்றும் வகுப்பரிதாம் பொது” என்று புகழ்கின்றார்.

     (21)